எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் எழுதி 2016ல் சாகித்ய அகாடமியின் 'யுவா புரஷ்கார்' விருது பெற்ற கானகனை சமீபத்தில் வாசித்தேன்.
****
வனம் ஒரு பெரும் புதையல். அதில் பல்லாண்டுகளாக புதைந்துகிடக்கும் இயற்கை வளங்கள்,விலங்குகள், அங்கு வாழும் பழங்குடியினர் அவர்களுடைய நம்பிக்கைகள், வாழ்க்கை , வேட்டை என பல விசயங்களைக்
கானகன் பேசுகிறது. குறிப்பாக பளிங்கர் எனும்
பழங்குடியினர் வாழ்க்கை அருமையாக பதிவு செய்யப்படுள்ளது.
உப்பு நாய்கள் மூலமாக அறிமுகமாகியிருந்த சரவணக்குமாரின் முற்றிலும் வேறுபட்ட கதைக்களத்தில், எழுத்தில் இன்னுமொரு படைப்பு. நல்ல வாசிப்பனுபவம் தந்தாலும் உப்புநாய்களின் மொழி முற்றிலும் வேறானது.
இடப்பற்றாக்குறை, வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் தனது சொந்தத் தேவைகளுக்காக காடுகளை தொடர்ந்து அழித்து பயன்படுத்துவதுமில்லாமல் விளைநிலமாகவும் ஆக்குகிறான். கூடவே வர்த்தக , ஆடம்பர நோக்கிற்காக செல்வந்தர்கள், அரசியல் புள்ளிகளின் கைகளில் காட்டுச் செல்வங்கள் நீண்டகாலமாக நமக்குத் தெரியாமல் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது கதையின் அடிநாதம்.
நாட்டில் நடக்கும் பல ஊழல்களுக்கு ஊடகங்களில் கிடைக்கும் முக்கியத்துவம் ஏனோ சாமானியர்களின் கண்களுக்குத் தெரியாமல்
காடுகளில் நடக்கும் சுரண்டல்களுக்குக் கிடைப்பதில்லை. உண்மையில்
சந்தனக் கடத்தல் வீரப்பன் இருந்தவரை காடுகளுக்கு கிடைத்த முக்கியத்துவம் இன்று இல்லை என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
மோக்ஸி வெளியீடாக மூன்றாவது பதிப்பாக ஜூலை 2017ல் வந்திருந்தாலும்
புத்தகத்தில் நிறைய எழுத்துப் பிழைகள் கண்களில் தென்படுகிறன.
அடுத்துவரும் பதிப்புகளில் சரிசெய்வார்கள் என நம்புவோம். வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள்.
கானகன்(புதினம்) - லட்சுமி சரவணக்குமார்
மோக்ஸி வெளியீடு, 2017
விலை ரூ-200 ,264 பக்கங்கள்
ISBN இல்லை
நன்றி நண்பரே
ReplyDelete