Thursday, May 24, 2018

கொடிவழி

மேற்கு நாடுகளில் family bible எனும் பெயரில் குடும்ப வரலாறு எழுதும் வழக்கமிருக்கிறது.

அதாவது ஒரு குடும்பத்தினர் வழிவழியாக தங்கள் குடும்பத்தின் வரலாற்றை
எழுதி ஆவணப்படுத்தி அடுத்தத் தலைமுறைக்கு பயன்படும்
வகையில் விட்டுச் செல்கிறார்கள்.

இப்படிச் செய்வதால் ஒரு குடும்பத்தின் மரபு,  பழக்க வழக்கங்கள்,வட்டார மொழி,  உணவு, உடை, முக்கிய நிகழ்வுகள்,
அன்றைய வாழ்க்கைமுறை போன்ற பல அரியதகவல்கள்  நூற்றாண்டுகள் கடந்து அடுத்தத் தலைமுறைக்குச் சென்றுசேர வாய்ப்பிருக்கிறது.

நம்மில் பலருக்கு நாம் ஏன் வரலாற்றை  அறிந்துகொள்ள வேண்டும் எனும் கேள்வி எழுவது  இயல்பான ஒன்றுதான். ஆனால்,  உண்மையில் வரலாறு சமூக, அரசியல் மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்கும், நம் சமூகம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.

இப்படிச் சேகரிக்கப்படும் முன்னோர்களின் பழைய புகைப்படங்கள், அவர்கள் குறித்த செய்தித்தாள் கத்தரிப்புகள், அவர்களின் கடிதத் தொடர்புகள், அவர்களைப் பற்றிய குறிப்புகள், பயன்படுத்தியப் பொருட்கள்  போன்றவைகூட தலைமுறைகளை இணைக்கும் பாலங்களாகவும்  அவர்களுடைய நினைவுகளைக் கிளரிவிடும் தூண்டியாகவும் இருக்கின்றன.

இதுகூட ஒருவகையில் டைரி எழுவதுவது போலதான். குடும்ப டைரி.
ஆனால், உண்மையில் அந்தத் தகவல்கள் அடுத்தத் தலைமுறைக்கு ஒரு பொக்கிசமாக இருக்கும்.

இப்படிச் சமூகத்தால் சிறிது சிறிதாக எழுதி கட்டமைக்கப்படும் எழுத்து ஒருநாள் ஒன்றுசேர்ந்து பேரிலக்கியமாக எழுந்து நிற்கும். முதல், இரண்டாம் உலகப் போரின் போது எளிய மனிதர்களின் கடிதப் போக்குவரத்து, டைரிக்குறிப்புகள், புகைப்படங்கள் போன்றவை கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆவணங்களாக இன்று  மேற்குலகில் எழுந்து நிற்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் போது நாஜி படைகளுக்கு அஞ்சி வீட்டில்
மறைந்து வாழ்ந்து இறந்த ஆன் பிராங்க் எனும் சிறுமி எழுதிய நாட்குறிப்புகள் உலகப்புகழ் பெற்றவை. அந்தத் தொகுப்பு உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  வாய்ப்புள்ளவர்கள் நெதர்லாந்தில் இருக்கும் அவருடைய வீட்டைச் சென்று பார்க்கலாம்
இல்லை அந்தத் தொகுப்பையாவது முடிந்தால் வாசித்துப் பார்க்கலாம்.
மனித உணர்வுகளின் ஆழம் புரியும்.

"நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டால், நீங்கள்
எங்கே போகவேண்டும் என்பதற்கு வரம்புகளே இல்லை " என்கிறார்
அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் பால்ட்வின் .

நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு மூன்று தலைமுறை தாத்தா, பாட்டி பெயர்களைச் சொல்லமுடிந்தால் பெரியவிசயம்.  அதையும்  மூதாதையர்களின் பெயர்களை அடுத்தத் தலைமுறைக்கு வைக்கும் வழக்கம் நம்மில் இருந்ததால்தான் சொல்லமுடிகிறது. மற்றபடி நமக்கு எதையும் ஆவணப்படுத்துவதில், பாதுகாப்பதில் எல்லாம் பெரிய ஆர்வமோ ஈடுபாடோ சுத்தமாக கிடையாது. நம் முன்னோர்களுக்குத் தரப்பட்ட கல்வி,
அன்றையச்  சூழல் கூட ஒருவிதத்தில் இதற்கு காரணமாக இருக்கலாம்.

இப்படி நமது வம்சாவளியைப் பற்றி பதிவு செய்வதை ஆங்கிலத்தில் ‘Geneological Tree’  என்றும்  தமிழில் "கொடிவழி" என்றும் சொல்கிறார்கள். இதுகுறித்து எழுத்தாளர் அருணகிரி "கொடிவழி" என்றோரு புத்தகமே எழுதியிருக்கிறார். கிடைதால் வாசித்துப் பாருங்கள்.

இந்தக் குடும்ப வரலாறு, கொடிவழி, வேர்களைத் தேடுவதெல்லாம் எல்லாம் ஒருபுறம். நமக்கு பல நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடங்களையும், வீடுகளையும் ஏன் வரலாற்றுச் சின்னங்களையும் கூட  எந்தவோரு குற்றவுணர்வும் இல்லாமல் இடிக்கவும் சிதைக்கவும் செய்யும் மனநிலைதான் இருக்கிறது. தமிழகம் முழுக்க பயணிக்கும் போதெல்லாம் இதை மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடெல்லாம் இருப்பதுபோலத் தெரியவில்லை

தனிநபர் என்றில்லாமல் அரசாங்கமே இதுகுறித்து  எந்தவொரு பிரக்ஞையும் இல்லாமல் இருப்பது துரதிஷ்டம்.  நம்முடைய அரசு  ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய கோயில்களையும் அங்குள்ள சிற்பங்களையும் பராமரிக்கும் விதத்தைப் பார்த்தால் இரத்தக் கண்ணீர் வடிக்கத் தோன்றுகிறது.

ஆனால், மேற்கு நாடுகளில் நிலை வேறாக இருக்கிறது. அங்கே எந்தவொரு சிறு பொருளையும் அதனை ஒரு வரலாற்றுச் சான்றாக மதித்துப் பாதுகாக்கும் மனப்பக்குவம்  மக்களுக்கே இருக்கின்றது. ஆனால், நமக்கோ அவை பற்றிய வருத்தமோ, கவலையோ ஏன் சிந்தனையோ துளிகூட இல்லை என்பது தான் உண்மை.

#மரபு_குடும்பவரலாறு

No comments:

Post a Comment