Sunday, August 23, 2015

ஆப்பிள் தின்று கொண்டிருக்கும் டினோசர்

டினோசர் பொம்மைக்கு விளையாட்டாய் ஆப்பிள் ஊட்டிக் கொண்டிருந்த எனது மூன்று வயது மகள் இந்த கவிதைக்கான தூண்டுதல்.

அதுவே 'ஆப்பிள் தின்று கொண்டிருக்கும் டினோசர்' எனும் தலைப்பிட்ட
இந்தக் கவிதையானது.

**
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அது 
கடப்பவர்களையெல்லாம் ஏசிக் கொண்டிருந்தது.

சில சமயங்களில்
மர்மமாய் புன்னகைக்கிறது
அழுகிறது
அர்த்தமற்றவொன்றை
முணுமுணுத்தபடியே இருக்கிறது
வேறொரு சமயத்தில்
தனக்குள் பேசிச் சிரிக்கிறது

அதைப்
பழக்கிவிடுதலில் இருக்கும் சிரமங்களை
அரும்பச் செய்த அயற்சி 
தீருவதற்குள்
கொஞ்சம் பழகியிருந்தது
சந்தர்ப்பக் கூடாரத்தில்
நாய் 
பிணைக்கும் கயிற்றில்
கட்டப்பட்டு
சாந்தமாக ஆப்பிள்
கடித்துக் கொண்டிருக்கும்
அந்த டினோசர்

இப்பொழுது
ஏனோ
பதட்டத்தோடு 
அதை
கடந்து செல்லமுயல்கிறேன்.
***

வெளியிட்டவர்கள்:

இன்மை : கவிதைக்கான இணைய மாத இதழ்.
இணைப்பு:
http://www.inmmai.com/2015/07/blog-post_66.html

ஆனந்த விகடன்-சொல்வனம் இணைய இதழிலும் வெளியாகியுள்ளது (131வது இதழ்)
இணைப்பு:
http://solvanam.com/?p=40757

கவிதைக்கு செறிவூட்டிய நண்பர் வா.மணிகண்டனுக்கு நன்றிகள் பல!

உங்கள் மேலானக் கருத்துக்களை தெரியப்படுத்துங்களேன்.

Sunday, August 16, 2015

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்

சாஹித்திய  அகாடமி   விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன்.

இதுவே எனக்கு ஜெயகாந்தனின்  முதல் வாசிப்பு. இந்த காலகட்டத்தில் (முதல் அச்சு-1970) இது கொஞ்சம் நீண்ண்ண்ண்ட நாவலே.  ஆனாலும் தங்குதடை அற்ற அழகிய நடை போர் அடிக்காமல் நாவலை நகர்த்துகிறது.

இந்த நாவலில் அறியாத வயதில்  கற்பிலந்த பெண்ணாக கங்கா.  ஆண் துணையில்லாத கங்காவுக்கும் அவள் உறவு மற்றும் சமுகத்துக்கும் இடையேயான  முரண்பட்ட  போராட்டமே கதை.

அவளே தனது கதையை சொல்வதாக நாவல் எழுதப்பட்டுள்ளது. மிக அருமையான கதை நகரத்தல். சுய விருப்பம்,வெறுப்பு, மகிழச்சி என
கங்காவின்  மன ஓட்டத்தை மிக அழகாகச் சினிமா படம் போலக் கோர்வையாக அடுக்கிச் செல்கிறார். ஓரு பெண்ணின் இதயத்துக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தியை  ஜெயகாந்தன் எங்கிருந்து பெற்றார்  எனத் தெரியவில்லை.

இந்த நாவலில் சொல்லப்படும் கருத்துக்கள் இப்போது காலாவதியானவை. ஆனால் ஒரு முடிந்து போன காலகட்டத்தின் சுவடாக வரும் தலைமுறையாலும் இந்த நாவல் பேசப்படும் என்பது உறுதி.

நாவலை படித்த கையோடு அதே பெயரில் வெளியான படத்தைப் பார்த்தேன் (1977 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது).  கங்காவாக லக்ஷ்மி நடித்துள்ளார்.
ஆனால் நாவலின் உயரத்தை படம் தொட வில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

நாவலின் சாரம் குறையாமல் முழு நிறைவுடைய ஒரு படமாக எடுப்பது எளிதானது அல்ல போல. படத்தின் YouTube இணைப்பு இங்கே.
https://youtu.be/RsijKvLbTQM

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்  பெற்றவர் ஜெயகாந்தன்.  அவரது மற்ற புத்தகங்களையும் படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

நேரம் அனுமதித்தால் நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துவிடுங்கள்.



வெளியீட்டாளர்மீனாக்ஷி புத்தக நிலையம்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பக்கங்கள்: 447

Thursday, July 23, 2015

கேபிள் சங்கரின் பார்வையில் சினிமா வியாபாரம்

சங்கர் நாராயண் என்கிற கேபிள் சங்கர் எழுதிய
சினிமா வியாபாரம்  புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன்.

எவரும் இந்த  புத்தகத்தை  பரிந்துரைக்காவிடிலும், இணையத்தில்
பலர் எழுதிய விமர்சனங்களின் அடிப்படையில் கடந்த மாதம்
இந்தியாவில் இருந்து தருவித்து வாசித்தேன். நான் வாங்கிய நேரம் பாருங்க 90 ரூபாய் இருந்த புத்தகம் இப்போ 125 ரூபாயாம்.   அடக் கடவுளே!

கேபிள் சங்கர் - இணையதள ஏரியாவில் அறிமுகம் தேவையில்லாதவர்.
பல சிறுகதைகள், கட்டுரைகள், திரை விமர்சனஙகள் வழியாக
பரிட்சமானவர்.  மேலும் 'தொட்டால் தொடரும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.

நவீன தமிழகத்தின் வரலாற்றை எழுதுவதேன்றால் சினிமாவை
தவிர்த்துவிட்டு எழுத இயலாது என்பது  நிதர்சனம். அந்தஅளவுக்கு
சினிமா நம்முடைய பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

அப்படிப்பட்ட சினிமா எனும் கலைவடிவம் நடிப்பு, பாடல், நடனம், கதை, தொழில்நுட்பம் எனும் பல கோணஙகளை உடையது.  இந்த புத்தகத்தில் சினிமாவை அதன் வியாபரக் கோணத்தில் அனுகியிருக்கிறார் கேபிள் சங்கர்.

திரைத்துரையில் விநியோகஸ்தர்-சீரியல் ஆக்டர்-வசனகர்த்தா-திரைக்கதை ஆலோசகர் எனும் தனது அனுபவங்களின் மூலம்  எழுதியிருக்கிறார். புத்தக முன்னுரைக்காக அதிகம் மெனக்கெடாமல் ஆசிரியர் சுயஉரையுடன் முடித்துக் கொண்டுள்ளார்.

இது  'லைட் ரீடிங்' எனும் வகையைச் சார்ந்த புத்தகம். எளிய சரளமான நடை.  ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியதால் சாமானியர்கள் தலை சொறியத் தேவையில்லை.

ஒரு படம் தயாரிக்கப்பட்டபின் திரைக்கு வரும் வரை நடக்கும் பல விடயங்ககளை புத்தகம் விரிவாக விளக்குகிறது.

விவசாயத்தில் விவசாயிகளை விட பெரும்பாலும் இடைத்தரகர்கள் அதிகம் பயனடைவது போல, சினிமாவிலும் தயாரிப்பாளர்களை விட இடைத்தரகர்கள் அதிகம் லாபம் அடைவது எப்படி என்பதையும் விளக்குகிறார்.

இதேபோல், சினிமா வியாபாரத்தில் உள்ள பல அடுக்குகள் படிக்கும் வாசகர்களைக் கண்டிப்பாக வியப்பில் ஆழ்த்தும்.

ஹாலிவுட்சினிமாவையும் கூட ஆசிரியர் கொஞ்சம் தொட்டிருக்கிறார்.

சினிமா வியாபாரத்தைப் பற்றி எழுதிய ஆசிரியர் தமிழ் சினிமாவில் காலங்காலமாகப் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணம் பற்றி மூச்சு விடவில்லை.

ஹாலிவுட் தரவுகளை தரும் ஆசிரியர் துரதிருஷ்டவசமாகத்  தமிழ் சினிமா துறை பற்றி விரிவான மற்றும் ஆழமான தரவுகளையும் கொடுக்கவில்லை.

உதாரணமாக. தமிழ் சினிமாவின்  மொத்த வருடாந்த வருவாய் என்ன ? தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில்  PERCENTAGE என்ன ? வருடாந்த கேளிக்கை வரி  வருவாய் என்ன ?  போன்ற நிறைய  'என்ன' க்கள்.

இது போலவே புள்ளி விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தால்  மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

திரைப்படத் துறைக்குப்   புதியவர்கள் அல்லது  திரைத்துறை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.


நுால்: சினிமா வியாபாரம்
பிரசுரிப்பவர்: மதி நிலையம்.
கிடைக்கும்: Discovery Book Palace

Sunday, July 5, 2015

கமலின் பாபநாசம் - விமர்சனம்

ஜூலை 4ல்   வானவேடிக்கை, அணிவகுப்புடன் அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த லாங் விக் என்ட் (long week end) என சொல்லப்படும் தொடர்சியான மூன்று நாள் விடுமுறையில் கமலின் பாபநாசம் படம் சென்று பார்த்தோம்.

நான் பெரும்பாலும் திரை விமர்சனஙகள் எழுதுவதில்லை என்பது
என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்ர்களுக்கு தெரிந்து இருக்கும்.

எழுதாதற்கு காரணம் திரைப்படஙகள் அதிகம் பார்பதில்லை என்பது
மட்டுமல்ல, பார்க்கும் ஒன்றிரண்டும் திரையரங்குகளில் அல்ல
என்பதே உண்மை.  திரையரங்கத்துக்குச் சென்று அஙகே தொழில்நுட்பத்துடன் ரசிகர்கலுடன் பார்க்கும் படங்களை மட்டுமே ஒருவரால் முழுமையான விமர்சனத்தை தர இயலும் என்பது எனது கருத்து.

எந்த ஒரு வெளீக் குழப்பமின்றீ திறந்த மனதுடன் படம் பார்க்கும்
ரசிகர்கள் இன்றுஅரிதாகி இருக்கிறார்கள் என்பது உண்மை. Open Minded என்று ஆங்கிலத்தில் சொல்வது போல,

புதிதாக வரும் திரைபடத்தை பார்ப்பதற்க்கு முன்பே  சமூக வலைதலங்கள், தொலைகாட்சி,பத்திரிகைகள் என  எங்கு பார்த்தாலும் படத்தைப் பற்றீ பேசிப் பேசி  ரசிகனை ஒரு குழப்பதுடனே திரையரங்கத்துக்கு அனுப்புகிறார்கள். ரசிகர்களூம் எதோ ஒரு  எதிர்பார்ப்புடனேயே படம் பார்க்கச் செல்கிறார்கள்.

அப்படி செல்லும் ரசிகர்களீன் எதிர்பார்ப்பை எத்தனைப் படங்கள்  சரியாக பூர்த்தி செய்கின்றன என்பதை உங்களீன் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்.

நான் படத்தை பார்க்கும் வரை பாபநாசம் பற்றீ பேட்டிகள், அறீமுகஙகள், குறீப்புகள்  மற்றம் விமர்சனத்தையும் பார்க்கவில்லை.

கமல் மற்றும் கவுதமி நடிக்கும் இந்த படம் மலையாளத்தில் வெற்றி கதை என்பதைத் தவிர எந்த ஒரு முன் அறிமுகமும் இல்லை.

பாபநாசம்-   எதிர்பாராத விதமாக இக்கட்டில் சிக்கிய ஒரு குடும்பத்தின் கதை.
அந்த சிக்கிய குடும்பத்தை குடும்ப தலைவராக கமல் எப்படி
காப்பாற்றுகிறார் என்பதை அருமையான திரைக்கதையில் சொல்லியிருகிறார்
இயக்குனர் ஜீத்து ஜோசப்.

சுயம்புலிங்கமாக கமல். அவர் மனைவி மற்றும் இரு மகள்களிடம் பாசத்தை பொழிவதாகட்டும், இல்லை அப்பாவியாக  சினிமா பைத்தியமாக சுற்றுவதாகட்டும் கமலின் பாத்திரப்படைப்பு வாவ் !,

தன் கதைக்கு தேவையான படி கமலை மிக அருமையாக நடிக்க வைத்தது
இயக்குனரின் அபார திறமை. மலையாளத் திரைப்பட இயக்குநர் ஃபாசில் வரிசையில் இன்னொருவர் நமக்கு.

தொடக்கத்தில் கமல் மற்றும் அவரது குடும்பத்தின் அறிமுகம் என தொடரும் காட்சிகளில் சிறு தொய்வு தெரிகிறது. அடுத்தபாதியில் விட்டதை பிடித்து விடுகிறார் இயக்குனர்.

இது ஒரு திரிலர் என்பதை படத்தைப் பார்க்கும் வரை தெரியவில்லை. அடுத்து என்ன என்ன என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் .
இசையில் ஜிப்ரானும் அதற்கு மிக அழகாக உதவியுள்ளார். மொத்தம் இரண்டு பாடல்கள், எழுதியவர் நா. முத்துக்குமார்.

நட்சத்திரத் தேர்வும் மிக கச்சிதம், எல்லா பாத்திரஙகலும் படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்வது பொருந்தும்.

மற்றும் மலையாளத்தில் கையாளப்படும் சில நுட்பங்கள் தமிழுக்கு கொஞசம் புதிசு. உதாரணத்துக்கு மனைவி கவுதமியை கமல் தேடி ஒவ்வோரு அறையாக செல்வது ரசிக்கும் படி படமாக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் திருநெல்வேலி தமிழ் பேசி நடிக்கிறார் கமல், மாதவனின் டும்டும் டும் படத்திற்க்கு பின் ரசித்த இரண்டாவது வட்டார வழக்கு படம்.

இடி மழையுடம் வரும் காட்சிகள், யார் ஒளிப்பதிவாளர் எனக் கேட்க வைக்கின்றன. முழு திருப்தியாக சமிப காலங்களீல் ரசித்த படம் இது.

இவ்வளவு திறமையான இயக்குனர், நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைர்களூம் இத்தனை நாள் எங்கிருந்தார்கள் என்பதே.படம் பார்த்துவிட்டு வெளீயே வரும் போது என் யோசனையாக இருந்தது.

பாபநாசம் - அமெரிக்க  தமிழ்திரை ரசிகர்களுக்கு கோடை கொண்டாட்டம் என
நினைக்கிறேன்.

Sunday, June 14, 2015

வாழ்த்துக்கள் மாணவிகளே !!!

கடந்த 2014ம் ஆண்டு  டிசம்பரில் தொடங்கப்பட்ட சிறகுகள் அறக்கட்டளை வழியாக எங்களது இரண்டாவது பங்களிப்பை கடந்த வாரம் செய்துள்ளோம்.


கடந்த ஜனவரியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளிக்கரை  அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நூலக விரிவாக்கத்துக்கு நூலக உபகரணங்களும், புத்தகங்களும் வழங்கியது உங்களூக்கு நினைவிருக்கலாம்.

தற்போது புலிவலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்தோம்.
கிராமபுரத்தில் இருந்து வரும் ஏழ்மையான மற்றும் சாதாரணமான மாணவர்கள் பலர் படிக்கும் பள்ளி இது. சமீபத்தில்தான் உயர்நிலைப் பள்ளியாக  விரிவாக்கமடைந்துள்ளது. இந்தப் பள்ளியை தேர்வு செய்ய மற்றோரு முக்கியக் காரணம், இந்தப் பள்ளி நான் படித்து வளர்ந்த கிராமத்திற்கு அருகில் இருப்பதுதான்.

முன்பே சொன்னது போல் சிறகுகளின் தலையாய  இலக்கு திருவாரூர் வட்டாரத்தில் உள்ள வசதி வாய்ப்பற்ற மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக உதவி செய்வது. இது நாம் பிறந்து வளர்ந்த சமூகத்திற்கு மீண்டும் கொடுப்பதற்கான மற்றொரு வழியாகவே நான் நினைக்கிறேன். ஆங்கிலத்தில் giving back to society என சொல்லுவார்களே அது போல.

இபோது கடந்த மாதம் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு வகுப்புத் தேர்வு முடிவுகள பார்க்கலாம். தமிழக அளவில் இந்த ஆண்டும் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர், 93.4 சதவீத வெற்றி.  திருவாரூர் மாவட்டம் 83.08 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. சதவீகிதத்தில் தமிழத்தை ஒப்பிட்டும் போது திருவாரூர் மாவட்டம் அடைய வேண்டிய இலக்கு இன்னும் அதிகம். கற்றலிலும் கற்பித்தலிலும் சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். உரியவர்கள் இதைச் செய்வார்கள் என  நம்பிக்கை கொள்வோம்.

இப்பள்ளியில் 2014-2015 ஆம் கல்வி ஆண்டில்  பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்ற
மாணவ மற்றும் மாணவியருக்கு சிறகுகள் அறக்கட்டளையின் சார்பில்
பரிசுகள்  வழங்கப்பட்டன.

பரிசு விவரங்கள்:

முதல் மதிப்பெண்:
பி. ஐஸ்வர்யா  (P. Aiswaraya)

இரண்டாவது மதிப்பெண்:
என். வர்ஷா (N. Varsha)

மூன்றாவது மதிப்பெண்:
எஸ். அஜித்குமார்( S.Ajithkumar)

முதல் பரிசாக ரூபாய் ஐயாயிரம், இரண்டாம் மற்றும் மூன்றாம்
பரிசாகத் தலா ரூபாய் இரண்டாயிரத்துஐந்நூறும் வழங்கப்பட்டன.

சிறப்பு பரிசாகத் தமிழ்பாடத்தில் முதல்  மதிப்பெண் பெற்ற மாணவி
ஆயிஷா ரெஹெனா ரூபாய் இரண்டாயிரத்துஐந்நூறு பரிசு பெற்றார்.

இந்தச் சிறிய கல்வி உதவித்தொகை அவர்களின் உயர்க்கல்விக்கு எதோனும் ஒரு வகையில் உதவும் என கண்டிப்பாக நான் நம்புகிறேன்.

பள்ளியில் ஜுன் எட்டாம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்
முதன்மைக் கல்வி அலுவலர்  கலந்து கொண்டு  மாணவர்களை
பாராட்டி இந்த பரிசுகளை வழங்கினார். மேலும் பரிசுபெற்றவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அறக்கட்டளை சார்பில் அப்பாவும் (R.சிவசுப்பிரமணியன்), அப்பாவின் நண்பரான திரு. V.G. கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டனர்.

பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரையும்  சிறகுகள் அறக்கட்டளை சார்பில்
மனதார வாழ்த்துகிறோம்.

அடுத்த ஒரு நல்ல நிகழ்வை எதிர்பார்த்து..

நிகழ்வில் இருந்து ஒரு புகைப்படம்


Friday, May 29, 2015

சிறகு முளைத்த விரல்கள் - ஆருர் புதியவன்

கடந்த முறை இந்தியா சென்றிருந்த போது பாசத்துடன் தனது  "சிறகு முளைத்த விரல்கள்" கவிதை தொகுப்பை நண்பர் ஆருர் புதியவன் கொடுத்திருந்தார்.



அதை கடந்த வாரம்தான் முழுமையாக படித்து முடித்தேன். புத்தகம் பற்றிய எனது பார்வை இங்கே.

கவிப்பேரரசு, கவிக்கோ, மேத்தா என என்னுடைய ஆதர்சன கவிஞர்களின் முன்னுரையுடன் அருமையான தொடக்கமாக இருந்தது.

ஆசிரியர் தன் கல்லூரி காலங்களில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. எழுதப்பட்ட காலத்தை கணக்கில் கொண்டு, இது காதல் கவிதைகளின் தொகுப்பாக மட்டுமே இருக்கும் என கணக்கு போட்டிருந்தேன்.  வழக்கம் போல அது தப்பாகவே இருந்தது.  ஆம், காதலுக்கு அப்பால் சமுகம்,  இயற்கை என எல்லா சோலைகளிலும் இவரது கவிதை சிறகு முளைத்து பறக்கிறது.

ஆசிரியர் ஆருர் புதியவன்  எனது  பள்ளி தோழர்.   கல்லூரி பேராசரியர் , முனைவர் , கவிஞர், எழுத்தாளர் , சமூக ஆர்வலர் என்று பன்முகம் கொண்ட  வார்த்தைகளின் வித்தகர். பள்ளி  நாட்களிலேயே மேடை பேச்சுகளின் நாயகர்.  அந்த வேகத்தை கவிதைகளின் வீச்சில்  என்னால்  உணர முடிகிறது.

'சாதிப் - போர் மேனாட்டில் இல்லை, அங்கே
சாதிப்போர் மிக அதிகம், நமது மண்ணில்
பாதிப்பேர் இயற்பெயரே சாதிப் பேர்தான் '

என்ன ஒரு  திறமையான வார்த்தை விளையாட்டு !!.  வெண்பா  மற்றும் விருத்ததையையும் அவர் விட்டுவைக்கவில்லை.

குறிப்பாக அவரின் அனுபவக் கவிதைகளை பல முறை வாசித்து,  சிலாகித்து மகிழலாம்.

உதாரணமாக குற்றாலத்தின் அழகை பற்றிச் சொல்லும்போது

ஒரே புகை மூட்டம்
ஒ... இது.. அழகின் சமையல் கூடமா ..?

என்ன ஒரு அருமையான கற்பனை.

'கலந்தன கண்கள்
பிறந்தது காதல்
ஒ.. விழிப்புணர்ச்சி'

என்பதையும் ரசித்தேன். இவற்றில் பல கவிதைகள்  மாநில மற்றும் கல்லூரிப் போட்டிகளில் பரிசு பெற்றதில் வியப்பில்லை.

சில கவிதைகளின் பின்குறிப்பாக அதன் பின்புலத்தை சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார். அது போன்ற குறிப்புகளை எல்லா கவிதைகளுக்கும் கொடுத்திருந்தால் மேலும் சுவையாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

மரம் செய்ய விரும்பு எனும் தலைப்பில்
'மேகக் கப்பலிகளிருந்து
மழையை
இறக்குமதி செய்யும்
துறைமுகங்கள்'

எனும்போது 'கவிக்கோ' வினை நினைவுபடுத்துகிறார்.
...
'கண்களை மேயாத கலைகள் தேவை
கடைசிமூச் சுள்ளவரைக் கவிதை தேவை'

கவிஞர் ' தேவை' எனும் தலைப்பில் எழுதியதை வாசிக்கையில்
'சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும். என் சாம்பலும் தமிழ் மணத்து வேக வேண்டும்' எனச்சொன்ன பாரதிதாசனை நினைவுபடுத்துகிறார்.

பூடகமின்றி எளிய நடையில் உள்ள நல்ல தொகுப்பு,  சிறகு முளைத்த விரல்கள் - இறக்கை கட்டி பறக்குது. ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது  நிச்சயம் வாசிக்கவும்.

நுால்; சிறகு முளைத்த விரல்கள்
ஆசிரியர்: ஆரூர் புதியவன்
வெளியிடு : நேஷனல் பப்ளிஷர்ஸ், 2011

Sunday, May 17, 2015

லென்ஸ் வழியான வாழ்க்கை - ஆனி

எஸ்.இராமகிருஷ்ணன்  தமிழ் இலக்கிய உலகில் அறிமுகம்  அவசியமல்லாத எழுத்தாளர்.

இலக்கியத் தளத்தில் பல வருடங்கள் தொடர்ச்சியாக நூற்றுக்கும் மேலான புத்தகங்களை எழுதியுள்ளார். புதினம், சிறுகதை, கட்டுரைகள் தாண்டிய பன்முகத்தன்மை உடையவர். சர்வதேச இலக்கியம், அயல்சினிமா, சிறுவர் உலகம் என பல துறைகளை பற்றிப் பேசியும் எழுதியும் வருபவர்.

இவர் சமீபத்தில் தன்னுடைய வலைதளத்தில்  புகைப்படக்கலைஞர்
ஆனி லெய்போவிட்ச் (Annie Leibovitz) பற்றி  'ஒளியிலே தெரிவது' எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை வாசித்ததும் ஆனி பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது.

அடித்து பிடித்து மாவட்ட பொது நூலக வலைதளத்தில் புத்தகங்களைத்   தேடி Hold செய்திருந்தேன்.   மூன்றாம் நாள் எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் நூலகத்திற்கு புத்தகஙகள் வந்து சேர்ந்தாக மின்னஞசல் வந்தது.
இங்கே அமெரிக்க நூலகங்கள் இயங்கும் விதம் பற்றி ஒரு தனி வலைப்பதிவே எழுதலாம். நான் மொத்தமாக 3 புத்தகங்களை  ஆர்டர் செய்திருந்தேன்.

புத்தகங்ளை எடுக்கப் போன இடத்தில் எனக்கு ஒரு  சிறிய அதிர்ச்சி காத்திருந்தது. மற்ற புத்தகங்களை போல அல்லாமல்  இந்த புத்தகங்கள் மிக பெரிய அளவில் இருந்தன. ராட்ச வடிவில் இருந்தன என சொன்னால் பொருத்தமாக இருக்கும். எடையும் சுமார் பத்து கிலொவுக்கு மேலாக இருக்கும்.

a) Photographs Annie Leibovitz 1970-1990  b)  A photographer's Life 1990-2005  c) Annie Leibovitz Photographs என்ற 3 புத்தகங்கள்.

அந்த புத்தகங்களை பார்த்து வீட்டில் என்னை மேல கீழ பார்த்தது வேற கதை. :)
புத்தகங்களை பற்றி பேசும் முன்பு முன் புகைப்படக்கலைஞர் ஆனி பற்றி கொஞசம் பார்ப்போம்.

ஆனி லெய்போவிட்ச் அமெரிக்காவின் புகழ்பெற்ற மிக முக்கிய பெண் புகைப்படக்கலைஞர். 1949 அக்டோபர் 2-ந்தேதி அமெரிக்காவில் வாட்டர்பரி, கனெக்டிகட்டில் பிறந்தவர்.

புகழ்ப்பெற்ற ரோலிங் ஸ்டோன் இதழில் புகைப்படக்கலைஞராகப் பணியாற்ற துவங்கியவர் ஆனி.  நாற்பது வருஷங்களுக்கும் மேலாகப் புகைப்படக்கலையில் தீவிரமாக இயங்கி வருபவர்.

ஆனியின்  அழகான முன்னுரையுடன் தொடங்கும்  இந்தப் புத்தகங்கள், அவரின் அரிய புகழ்பெற்ற புகைப்படங்களின் பொக்கிசம்.  ஆனி புகைப்படக்கலையை நேசிப்பதற்கு முக்கியத் தூண்டுகோலாக இருந்தவர்கள் இரண்டு புகைப்படக்கலைஞர்கள், Robert Frank மற்றும் Henri Cartier-Bresso என்று அவர் குறிப்பிடுகிறார். இருவருமே உலகப்புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர்கள்.

இவரது புகைப்படங்கள்  நகர வாழ்க்கை, கிராம வாழ்க்கை, இயற்கை என பல படி நிலைகளைக் கொண்டிருந்தாலும் மனிதர்களை மிக அழகாக படம்பிடித்திருக்கிறார்.

புகழ்பெற்ற  நடிக நடிகைகள், பாடகர்கள்,எழுத்தாளர்கள், முக்கியப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள்,  சாலையோர மனிதர்கள் என வாழ்வின் பலதரப்பட்டவர்களை அக உணர்ச்சிகளுடன் படமாக்கியிருக்கிறார்.
கருப்பு வெள்ளை மற்றும் வண்ணத்தில்  பக்கத்திற்கு  ஒன்றாக அந்த புகைப்படங்கள் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளன.


மனிதர்ளை கருப்பு மற்றும் வெள்ளையில் நாம் எடுக்கும் புகைப்படம், அவர்களின் ஆன்மாக்களை எடுக்கும் புகைப்படம் என எங்கோ படித்தது எனக்கு நினைவுக்கு வருகிறது.  அப்படி தனித்துவத்துடன் படம் எடுத்திருக்கிறார். தீவிரமாக உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் ஒளியமைப்பும் அடர்வண்ணங்களை முதன்மைபடுத்துவது  ஆனியின் சிறப்பு.

மைக்கேல் ஜாக்சன், டெமி மூர் , அர்னால்ட் ,பில் கேட்ஸ், பில் கிளின்டன் என அவர் படமெடுத்த புகழ்பெற்றவர்களின்  பட்டியல் வளர்கிறது.
படம் பிடிக்கையில் பெரும்பாலான பிரபலங்கள் தானாக முன்வந்து தங்கள் உடைகளை களைய தயாராக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே இவற்றில் சில வயது வந்தோர் மட்டும் படங்கள் இருக்கிறது என சொல்லத் தேவையில்லை.


பல உலக புகழ்பெற்ற விளம்பர படங்களையும் எடுத்திருக்கிறார். குறிப்பாக டிஸ்னியின் பிரத்தியேக புகைப்படகலைஞர் இவர்.


இந்த புகைப்படங்களைப்  புரிந்து கொள்ள தனிப்பட்ட உள்ளார்ந்த பார்வை எதுவும் அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.  Photography/நிழற்படக்கலை என்றால் என்ன என்பதற்கு ஆனி  'அது லென்ஸ் ஊடான வாழ்க்கை' என ஒற்றை வரி விளக்கம் தருகிறார். இதை தவிர வேறு ஒரு சிறப்பான விளக்கம் இருப்பதாக தெரியவில்லை.

ஆனி தனித்துவமிக்கப் புகைப்படக்கலைஞர், அவரது படங்களை காணத்தவறாதீர்கள்.  நீங்கள் இவர் புத்தகங்களை பெற முடியவில்லை என்றால்,   Annie Leibovitz: Life Through a Lens என்ற ஆவணப்படத்தை  YOUTUBEல் பார்க்க முடியும்.  இணையத்திலும் அவரது புகைப்படங்களை பார்க்கலாம்.
அந்த 3 புத்தகங்கள் இங்கே படத்தில்.



ஆனியை எனக்கு அறிமுகப்படுத்திய எஸ்.இராமகிருஷ்ணனுக்கு அவர்களுக்கு நன்றிகள் பல.