Sunday, August 27, 2023

தூண்டில் முள் வளைவுகள் - நீல நிற ஆக்காட்டி

பொதுவாக ஒரு இலக்கியப் படைப்பை வாசித்த பின் இறுதியில் சிலர்  மனநிறைவாக இருந்தது இல்லை வெறுமையாக இருந்தது என்பார்கள். சிலர் அது நல்லவிதத்திலோ அல்லது கெட்டவிதத்திலோ தொடர்ந்து உறுத்திக் கொண்டே இருக்கிறது என்பார்கள்.

அப்படிச் சமீபத்தில் வாசித்ததில் உறுத்திக் கொண்டே இருப்பது சிவக்குமார் முத்தையாவின்  "தூண்டில் முள் வளைவுகள்" தொகுப்பில் கடைசி கதையான 'நீல நிற ஆக்காட்டி'. 


மேலோட்டமாக பார்த்தால் அன்றைய கீழத் தஞ்சையின் பறவைகள். விவசாயம் பொய்ந்த இந்தக் காலகட்டத்தில் அவற்றின் நிலை பற்றிய கதை போல தோன்றும். ஆனால், ஆசிரியர் அதனுள் ஒரு அழகான காதல் கதையை வைத்து காதலியைப் பறவை எனும் படிமமாக செதுக்கியிருக்கிறார். 

இந்தக் கதை பறவை குறித்த என்னுடைய "ஜெஸி (எ) ஜெஸிகா கிங்"  நாவலை யும் நினைவுபடுத்தியது என்றாலும் இந்தத் தொகுப்பில் சிவக்குமார் முத்தையாவின் அக உலகம் என்பது பெண்கள், மது, காதல், காமம், விவசாயம் என பல தளங்களில் மிதமான வேகத்தில் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறது. வாய்ப்பிருந்தால் வாசியுங்கள். 

சிவக்குமார் முத்தையாவின் எழுத்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்.

ஆசிரியர்: சிவகுமார் முத்தையா

வெளியீடு: யாவரும் பதிப்பகம்

விலை: ரூ.266


Friday, August 18, 2023

இளையராஜாவின் காதலிகள்

இளையராஜாவின் காதலிகள்

தினமும் எழுதப்படும் பல நூறு கதைகளில் எது இலக்கியம்? என்ற விவாதம் இங்கு  பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், அந்த விவாதத்துக்குள் சிக்காமல் நேர்மையோடு வாசித்தால் எழுத்தில் எது இலக்கியம் ? என்பதை ஒரு தேர்ந்த வாசகன் உணர்ந்து கொள்வான். அப்படிச் சமீபத்தில்  உணர்ந்தது சிவக்குமார் முத்தையாவின்  "இளையராஜாவின் காதலிகள் (சிறுகதைத் தொகுப்பு)".

'நான் டெல்டாவைச் சேர்ந்தவன்' எனும்  முன்னுரையோடு வந்திருக்கும் இந்தத் தொகுப்பில் மொத்தம் 11 சிறுகதைகள் யாவரும் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. இதில் பல கதைகள் முன்பே இதழ்களில் வெளியாகி பரிசுகள் பெற்றிருந்தாலும் அவற்றை ஒரு தொகுப்பாக வாசிப்பது நல்லவாசிப்பனுவமாக இருக்கும். 

பொதுவாக சாமானியனின் பல்லாண்டு அனுபவத்தை ஒரு எழுத்தாளன் தனது கதையோட்டத்தில் ஒரு சில வரிகளில் எழுதிச் சென்றுவிடுவான்.

ஆனால்,  அதை வாசிக்கும் வாசகன் அங்கேயே நின்று ஒருவித அக தரிசனம் பெறுகிறான். அதுவே ஒரு படைப்பின் உயரத்தை தீர்மானிக்கிறது என நினைக்கிறேன்.

அப்படிப் பல உச்சங்களைக் கொண்ட கதைகளை உள்ளடக்கியது இந்த நூல், 

உதா. நூலின் ஐந்தாவது கதையான செவத்த கன்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆணை தனது வாழ்வில் கண்ட நாயகியின் மனம் இப்படி ஓடுகிறது… 

'இந்த உடல் இல்லை என்றால் என்னைப் பின்தொடர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை எத்தனையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்…. ஒவ்வோரு முறையும் உடலை ஓப்புக்கொடுத்துதான் அவர்களின்(ஆண்களின்)  சுயத்தை கண்டறிய வேண்டுமா என்ன ? ' 

இப்படிச்  சுயத்தை இழந்த கிராமம் அங்கு பொய்த்த விவசாயம், அழிந்த கிராமிய கலைகள், அங்கு தனித்திருக்கும் பெண்களும் அவர்கள் மீதான சமூக கண்ணோட்டம் என அடித்தள மக்களின் வாழ்வு இவருடைய கதைகளில் பல அடுக்குகளாக நம் கண்முன் விரிகிறது.  அதிலும் குறிப்பாக, காவிரி கடைமடை வேளாண்குடி மக்களின் வாழ்வியலை  இப்படிச் சம காலகட்டத்தில் வேறுயாரும் இவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்வதாக எனக்குத் தெரியவில்லை. 

பொன்னியின் செல்வர்கள் என்றில்லை அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

நூல்-இளையராஜாவின் காதலிகள் (சிவகுமார் முத்தையா)

பதிப்பகம் -யாவரும்,  விலை-₹160.00 


Friday, August 11, 2023

எழுத்தாளர் இமையம் - ஆரூர் பாஸ்கர் நேர்காணல்(2)


எழுத்தாளர் இமையத்துடன் கலிபோர்னியாவில் நடந்த உரையாடலின் இரண்டாவது பாகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பின் நுட்பம், சமூக வலைதளங்கள், இன்றைய சிற்றிதழ்கள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற பல விசயங்கள் குறித்து பேசியிருக்கிறேன். பாருங்கள்  

https://youtu.be/-cDjj8EmGic

Wednesday, August 9, 2023

ஈரோடு புத்தகத் திருவிழா - 2023

ஈரோடு புத்தகத் திருவிழா தொடங்கிவிட்டது (ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 15 வரை). என்னுடைய பெரும்பாலான நூல்கள் ஸ்டால் எண் 76, 77ல் (ஜீரோ டிகிரி பதிப்பகம்) கிடைக்கும். நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



மக்கள் சிந்தனைப் பேரவையும் தமிழக அரசும் இணைந்து நடந்தும் இந்தப் விழா புத்தகத் திருவிழா மட்டுமல்ல ஒருவிதத்தில் இலக்கியவிழாவும் கூட. இது தமிழ்  ஆளுமைகள் பலர் கலந்துகொண்டு உரையாற்றும் கருத்து மையமாகவும் இருக்கும். என்னூடைய புத்தகங்கள் என்றில்லை நீங்கள் வேறு யாருடையதையும் வாங்காவிட்டால் கூட பரவாயில்லை. நல்ல தமிழ் காதில் விழவாவது போய் வாருங்கள். நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது.




Sunday, August 6, 2023

எழுத்தாளர் இமையம் - ஆரூர் பாஸ்கர் நேர்காணல்(1)

சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையம் அமெரிக்காவில் நடந்த பேரவை விழாவுக்கு  (கலிபோர்னியா- ஜூலை 1, 2) சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரை அப்போது நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.



இந்த நேர்காணல்  ஓர் எழுத்தாளருக்குரிய சமூக கோபம், அறச்சீற்றம், சொந்த அனுபவம், எதிர்கேள்வி  போன்ற கலவையான  உணர்வு கொப்பளிப்புகளோடு வந்திருப்பதாக நினைக்கிறேன்.

நிகழ்வின் முதல் பகுதிக்கான (part-1) இணைப்பைக் கீழே தந்திருக்கிறேன். பாருங்கள். 


Saturday, July 29, 2023

ஜெஸிகா கிங் - குறித்து (8) -கதை சொல்லி துக்கத்தில் முழுகி விடமாட்டார்

முகநூல் வாசகர் Aarthi Siva, "ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்" நாவலின் கதைசொல்லி பற்றி பகிர்ந்தது..

//...கதை சொல்லியின் மகளின் வயதை வைத்து கணக்கிடும்போது அவர் தடாலடியாக செயல்படுகிற இளமை வேகம் கடந்தவர்ங்கிறதும், அவரோட  நிதானப்போக்கினை பார்க்கும்போது மிகுந்த யதார்த்தவாதிங்கிறதும் புரியவருது. ᴩꜱyᴄʜᴏ ᴀɴᴀʟyꜱɪꜱ படி சொல்லனும்னா ᴄᴀᴜᴛɪᴏᴜꜱ ᴛyᴩᴇ ᴩᴇʀꜱᴏɴᴀʟɪᴛy. தன் காதலை பத்தியோ, அவளுடனான உறவை பத்தியோ ꜱʜᴀʀᴇ பண்ணிக்கிற அளவுக்கு கூட வேறு நெருக்கமான நட்போ உறவோ இல்லாதவர். தமிழ்நாட்டு பாணில "நல்ல குடும்பத்துப் பையன்" ᴛyᴩᴇ. அவளது (ஜெஸி) இழப்பினால் விளைந்த துக்கத்தை மௌனமாக விழுங்கி ஜீரணிப்பாரே தவிர துக்கத்தில் முழுகிவிடமாட்டார். அதனால அவர் பேர்ல இரக்கம் தோணலன்னு நினைக்கிறேன்.//




பிரதிக்கு :

Zero degree publication 98400 65000
முதல் பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ 330.


ஜெஸிகா கிங் - குறித்து (9) - மனதில் ஒரு நீலநாரையின் கல்வெட்டு

ஜெஸி (எ) ஜெஸிகா கிங் குறித்த தனது வாசிப்பனுபவத்தை முகநூலில் பகிர்ந்த பிரியா பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. நூலின் இறுதியில் வரும் கவிதை அவருடையதே.

//

மனதில் ஒரு நீலநாரையின் சிலாசாசனம் (கல்வெட்டு)

ஒரு நாவலின் பக்கங்களுக்குள் எல்லையற்ற உலகங்கள் உருவாக்கப்படுகின்றன. கனவுகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. மனித ஆத்மாவின் யதார்த்த எல்லைக்கு அப்பால் உயர்ந்து, வாசகரின் இதயத்திலும் மனதிலும் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச்செல்ல வேண்டும் அந்த நாவல்.
எழுத்து பிரசுரம் மூலம் வெளிவந்துள்ள, நாவலாசிரியர் ஆரூர் பாஸ்கர் எழுதிய ஜெஸி (எ) ஜெஸிகா கிங் என்ற நாவலை வாசித்து முடித்த பொழுதில், Blue Heron பறவையும், ஜெஸிகா என்ற பெண்மணியும் மனதில் கல்வெட்டாய் பதிந்துள்ளனர்.


கதைக்களம் வட அமெரிக்காவின் ஃபிளாரிடா மாகாணம். ஒரு குடியிருப்பு பகுதியில் கொரோனா கால கட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நாவல் நகர்கிறது.
Sub divisionல் வசிக்கும் அண்டை வீட்டினைச் சேர்ந்த டீன் ஏஜ் பெண் கேசியின் அம்மாவான ஜெஸி என்ற பெண்மணிக்கும், அதே சம வயது டீன் ஏஜ் பெண் பிரியாவின் அப்பாவான கதை நாயகனுக்கும் இருக்கும் நட்பையும், திடீரென கொரோனா கால கட்டத்தில், காணாமல் போன ஜெஸியைக் குறித்து கவலை கொள்ளும் கதாநாயகனின் மன நிலையையும், அவளுக்கு என்னவாயிற்றோ எனக் கண்டுபிடிக்க அவன் எடுக்கும் முயற்சிகளே கதையின் போக்காக அமைந்துள்ளது.

இது ஒரு கிரைம் நாவலாக இருப்பதால், அத்தியாயத்திற்கு அத்தியாயம் ஜெஸிக்கு என்ன ஆகியதோ என நம்மையும் தேட வைக்கிறார் ஆசிரியர். கதை வாக்கில் பறவைகள் குறித்தான தகவல்கள் நிறைய உள்ளன. Like..
தெரியும்மா இப்படி பறவைகள் ‘V’ போலப் பறப்பதால் எனஜியைச் சேமிக்குது. அப்புறம் அந்தப் பறவைகளின் எண்ணிக்கை இரட்டைப் படையில் இருக்குப் பாத்தியா?
வட அமெரிக்கா நிலப்பரப்பின் அடையாளங்களை, தனது எழுத்து நடையில் விரிவாக பாஸ்கர் கொண்டு வந்துள்ளதால் எளிதாக என்னால் காட்சிப் படுத்திப் பார்க்கவும், கதை மாந்தருடன் பயணிக்கவும் முடிந்தது. இறுதியில் ஜெஸிகாவுக்கு என்ன ஆயிற்று என்பதின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் வரைக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்கர்கள், மற்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோரின் பழக்க வழக்கங்களை விரிவாகக் கண் முன்னே காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
ஜெஸியின் கையில் “Blue Heron” பறவையைப் பச்சைகுத்தி இருப்பாள். அதுவே இந்த நூலின் அட்டைப்பட வடிவமைப்பிலும் வந்துள்ளது.
வழிமாறித் திசைமாறிப் பறக்கும்
நீல ஹெரான் பறவையைப்
பார்க்கும் பொழுதெல்லாம்
இணைந்தே பயணிக்கிறோம் நீயும் நானும்
மீளவும் மீளவும்
புலரியில் எழும் அந்திச் சூரியனைப் போல.
- Priya Baskaran பிரியா பாஸ்கரன்
என்ற எனது இந்தக் கவிதை வரிகளுடன் இந்த நாவலை நிறைவு செய்துள்ளார் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர்...//


நூல்: ஜெஸி (எ) ஜெஸிகா ஜிங்
எழுத்தாளர்: ஆரூர் பாஸ்கர்
பதிப்பகம்: எழுத்து பிரசுரம்
விலை: ரூ. 330/-