Saturday, February 24, 2018

வனநாயகன் - டிவி சீரியல் ?

கடந்த டிசம்பரில்  அந்தத் திரைப்பட இயக்குநரை கோபாலபுரத்தில் இருக்கும் அவருடைய வீட்டில்  பார்த்துப் பேசினேன்.  அவர்  1970 களின் இறுதியில் சிவாஜி நடித்த படங்களில் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர். பின் தனியாக இயக்கி 1980களின் இறுதியில் வரிசையாக இரண்டு வெள்ளிவிழா படங்களைத் தந்தவர்.

இரண்டு தொடர் வெற்றிகளைத் தந்தாலும், குடும்ப பிரச்சனை போன்ற தனிப்பட்ட சில காரணங்களால் கொஞ்சகாலம் ஒதுங்கி இருந்துவிட்டு
இப்போது உதவி இயக்குநர், திரைக்கதை, சின்னத்திரை என  இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அது பரபரப்பு அடங்கிய ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை. எங்கள்  பேச்சு
பெரும்பாலும்  திரைத்துறை சம்பந்தமாகதான் இருந்தது.   திரைத்துறையில் அவர் வேலைசெய்த பெரிய இயக்குநர்களின் கஞ்சத்தனம்.
அதில் கல்யாணமண்டபம் ,  ரெக்கார்டிங் தியேட்டர் கட்டி செட்டில்
ஆனவர்கள். தொடர் தோல்விப்படங்கள் கொடுத்து போண்டி
ஆனவர்கள்.  அதுபோல ஒரு புகழ்பெற்ற இசை அமைப்பாளரை கன்னத்தில்
அறைந்துவிட்டு நடையைக் கட்டிய இயக்குநர் என விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.

அன்று மதியம் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் நடந்த ரகளை, அதன் உள்ளரசியல்,  எடுத்தப் படத்தை திரையிட அரங்குகள் கிடைக்காத அவலம் என இந்தகால சினிமா வரை சுமார் இரண்டு மணிநேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்.

பேச்சுனுடே எனது வனநாயகன் நாவல் பற்றியும் பேசினார்.
' நாவல்ல ஒரு படத்தை விட ஒரு டிவி சீரியலுக்கான மேட்டர் நல்லா வந்துருக்கே. லோகேசன் மலேசியாவ வச்சு எடுத்தா அருமையா வரும். புரடியூசர் பார்போமா  ? '  என்றார்.

சுஜாதா தனது  நாவல்கள் திரையில் கொத்து பரோட்டா போடப்பட்டதாக சொன்ன புலம்பல்கள் நினைவுக்கு வந்தாலும் அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம் என நினைத்து தலையாட்டி விட்டு வந்திருக்கிறேன்.

விடைபெற்றுக் கிளம்பும் போது  'நல்லா எழுதி, பெரிய ரைட்டாரா சினிமாவுல வரனும் ' என வாழ்த்தினார். தர்மசங்கடமாக இருந்தது.  ' ஐயையோ, அதையெல்லாம் நான் கேட்கவே இல்லீங்களே'  என மனதுக்குள் நினைத்தபடி சிரித்துவைத்தேன்.

டிவி சீரியலுக்கு ஏற்ற கதை எனச் சொன்ன இரண்டாம் நபர் இவர்.
பார்ப்போம்.

#வனநாயகன்

1 comment: