Showing posts with label #தமிழ். Show all posts
Showing posts with label #தமிழ். Show all posts

Sunday, May 23, 2021

தமிழ் விசைப்பலகை

10 ஆண்டுகளுக்கு முன் தமிழில் முழுமையாக எழுதுவது என இறங்கிய புதிதில் தமிழ் எழுத்துருவை இணையத்தில் எழுதுவது மிகுந்த சிரமமாக இருந்தது. இத்தனைக்கும் நான் தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் தட்டச்சு செய்வதில் ஹையர் (முதுநிலை) வரை படித்தவன். ஒருங்குறி எழுத்துரு எனும் Unicode நடைமுறையில் வந்திருந்தாலும் கூட அப்போது பல தமிழ் தளங்கள் பூச்சி பூச்சியாக தெரிந்தன.

வந்த புதிதில் எனக்கு முதலில் வழங்கப்பட்ட அறிவுரை இதுதான். தமிழில் சரளமாக எழுத உனக்கு ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும்.  அதற்கென இருக்கும் செயலியைப் பயனபடுத்தி தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அச்சடித்து அப்படியே நகல் செய்து ஒட்டு என்றார்கள். அதாவது, ஆங்கிலத்தில் 'anbu' என்று தட்டச்சு செய்,  செயலிகள் அதை 'அன்பு' என்று மாற்றித்தரும் என்றார்கள். 

ஆங்கிலத்தில் அடித்து அதைத் தமிழாக மாற்றுவதில் எனக்கு முற்றிலுமாக உடன்பாடு இல்லை. சிந்தனைக்கும் எழுத்துக்கும் நடுவில் இன்னொரு ஆள் (ஆங்கிலம்) தேவையில்லை என நினைத்துத் தேடியபோதுதான் இ-கலப்பை (ekalappai) என்ற மென்பொருள் கண்ணில் பட்டது. சிக்கென பற்றிக்கொண்டேன்.  பலர் இன்று தமிழ் தனிமொழி வடிவத்துக்கு என்.எச்.எம். (nhm)  பயன்படுத்துவதாக அறிகிறேன். இந்த மென்பொருள்களை நாம் நேரடியாக தமிழ் டைப்ரைட்டரைப் போல பாவிக்கலாம்.


நான் இ-கலப்பையைக் கணினியில் பயன்படுத்தும் போது தமிழ்-99 எனும் எழுத்துரு (font)-வைத் தேர்ந்தெடுக்கிறேன் (படம் கீழே). 


தமிழ் 99  (Tamil99)  என்பது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விசைப்பலகை தளவமைப்பு ஆகும்.

இதெல்லாம் பழைய கதை.  இன்று, கைபேசிகளில் தமிழ் விசைப்பலகை  வந்த பின் வாழ்க்கை மிக எளிதாகி விட்டது. அதில்,  தேவையான எழுத்துருக்களை மிக மிக எளிதாக 30 பொத்தானுக்குள் அடக்கிவிட்டார்கள். 


 அதனால், கூட்டெழுத்துகள் வழியாக எந்தவித சிரமமும் இல்லாமல் அடித்துவிட முடிகிறது. இதைப் பாவிக்க பயனாளர் ஆங்கில தட்டச்சோ இல்லை தமிழ் தட்டச்சோ தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனாலும், இன்னமும் கூட தமிழ் கூறும் நல்லுலகில் ஏனோ தமிங்கிலம்  (Tanglish)  திமிங்கிலமாக உலாவுவது வருத்தமளிக்கிறது.

இதை முகநூலில் பகிர்ந்த போது, சிலர் செல்லினம் எனும் ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தட்டச்சு செய்ய உதவும் ஒரு மென்பொருள் பற்றி குறிப்பிட்டிருந்தனர். அதுபோல, Gboard எனும் கூகுள் விசைப்பலகையைப் பயன்படுத்தி வாய்வழியாக பேசியே  ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் எழுதலாம் என்பதையும் பகிர்ந்திருந்தனர்.

Wednesday, September 30, 2020

இலங்கை வானொலி புகழ் அப்துல் ஹமீது சொன்னது...

இலங்கை வானொலி புகழ் பி. எச். அப்துல் ஹமீதின் நேர்காணல் ஒன்றைச் சமீபத்தில் பார்த்தேன். 


நேர்காணல் கண்ட 'பட்டிமன்ற புகழ்' பாரதி பாஸ்கரும், ராஜாவும் ஹமீதுவிடம்
எல்லோரும் வழக்கமாகக் கேட்கும்  திரை நட்சத்திர அனுபவங்களைத் தாண்டி, அவரிடம் பொது வெளியில் இன்றைய தமிழ், மொழியின் எதிர்காலம் போன்ற  சில நல்ல விசயங்களையும் அபூர்வமாக உரையாடினார்கள்.  

இன்றைய இளைய தலைமுறைக்குப் புரிய வேண்டும். அவர்களைக் கவர வேண்டும் என்றால் தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து, ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் பேசவேண்டும் எனும் எழுதப்படாத சட்டத்தைத் தமிழக ஊடகங்கள் கையில் எடுத்து பல்லாண்டுகள் ஆகின்றன. அது குறித்து பதில் அளித்த ஹமீது,  ஊடகங்களின் இந்தத் தவறான போக்கை "மயக்கம்" என்றார். என்னைக் கேட்டால், அதை அவர் "மடத்தனம்" என உடைத்துச் சொல்லி இருக்கவேண்டும்.

சரி, பெரும் நிறுவனங்களின் ஊடகங்கள் தான் அப்படி என்றால் சாமானியர்களின் கடைசி போக்கிடமான இணையமும் அந்த வழியில்தான் சென்று கொண்டிருக்கிறது. அதற்குப் பெயர் சீரழிவு என்பதைத் தவிர வேறென்ன.

அந்த நேர்காணலின் முதல் பகுதியின் இணைப்பு

https://youtu.be/49AArBV8OZo


Monday, May 20, 2019

தமிழ் செத்த மொழி ?

எழுத்தாளர் சாருநி​வேதிதா தனது வலைதளத்தில் நேற்று  "தமிழ் செத்த மொழி ஐயா.  ஒரு நாவல் அம்பது காப்பி விற்றால் அது உயிரோடு இருக்கும் மொழி என்றா சொல்வீர்கள்? " என்று எழுதியிருக்கிறார். ஏன் என்றால் ஔரங்கசீப் மேடை நாடகத்தைத் தான் சமீபத்தில்  பார்த்தபோதே தமிழ் செத்த மொழி என்று தெரிந்து விட்டது என்கிறார். 

அந்த நாடகத்தில் நடிகர்கள் யாருக்கும் தமிழை உச்சரிக்கத் தெரியவில்லை. ஏன் தமிழ்நாடே அப்படித்தான் தமிழ் பேசுகிறது எனக் குற்றஞ்சாட்டி அதை ஒரு தனி பதிவாகவே போட்டிருந்தார். (கட்டுரைகள்  கீழே இணைப்பில்)

தமிழ் செத்த மொழி  என்றால் கண்டிப்பாக எதிர்ப்பு வரும் என நினைத்தாரோ என்னவோ உடனே இப்படி  எழுதியிருக்கிறார்.  "சரி.  பேச்சு மொழியாகப் புழங்கும் ஒரு மொழியைச் செத்த மொழி என்று சொல்லக் கூடாது என்று நீங்கள் சொன்னால் ஓகே… ஒப்புக் கொள்கிறேன்.  தமிழ் சாகவில்லை.  ஆனால் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் பேசுவதைக் கேட்டால் அதிலும் எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது" என முடித்திருக்கிறார்.

உண்மை. சாருவுடன் முரண்டுபோக எனக்குப் பல விசயங்கள் இருந்தாலும் ஒத்துபோகும் ஓரிரு விசயங்களில் மொழியும் ஒன்று. இன்று நேற்றல்ல அவர் பல ஆண்டுகளாக தமிழ் மொழியின் தொடர் வீழ்ச்சி பற்றி அக்கறையோடும் ஆற்றாமையோடும் எழுதியும்  பேசியும் வருகிறார். அவருடைய இந்தக்  கோபம் நியாயமானது. உண்மையில் இந்தத் தார்மீகக் கோபம் அவர் ஒரு தமிழ் எழுத்தாளன் என்பதால் அவருக்கு மட்டும்  வரவேண்டியதில்லை. தமிழ்பேசும் ஒவ்வொருக்கும் வரவேண்டிய ஒன்று.

நான் மொழி தேய்ந்து வருகிறது. தமிழர்கள் நாளுக்கு நாள் மொழியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி நடக்கிறார்கள் எனத் தொண்டை கிழிய கத்தினாலும் எனது நெருங்கிய நண்பர்களே கூட இதில் பெரிதாக நாட்டம் காட்டுவதில்லை.  அவர்களுடைய எதிர்வினை இதுவும் கடந்துபோகும் என்பதாகத் தான் இருக்கும். நாளுக்கு நாள் தொலைகாட்சி, இணையம்,பொதுவெளி எனத் தமிழ் படும் பாட்டைச் சொல்லி மாளவில்லை. நாகரிகமாக பேசுகிறேன், இன்றைய தலைமுறைக்குப் புரியும்படியாக எழுதுகிறேன்,  பேசுகிறேன் எனச் சொல்லி வளமான மொழியை அநியாயமாக சிதைத்துக் கொண்டு இருக்கிறோம்.  

சாரு சொல்வதுபோலப் பேச்சு மொழியாகப் புழங்கும் ஒரு மொழியை  செத்த மொழி எனக் கண்டிப்பாக சொல்லக் கூடாது தான். ஆனால், சிலர் அதை தங்கள் வாழ்நாளில் எப்படியாவது செய்து பார்த்துவிட வேண்டும் எனும் கெட்ட எண்ணத்தில் கங்கணம் கட்டி களம் இறங்கியிருக்கிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.  இந்தத் தருணத்தில் அனைவரும் விழிப்போடு இருந்து பதர்களைக் கண்டிப்பாக விலக்கவேண்டும். நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட.... அனுமதிக்கக் கூடாது.



http://charuonline.com/blog/?p=7765
http://charuonline.com/blog/?p=7757

Wednesday, March 20, 2019

அன்றைய தமிழக அரசியல்

இருவரும் நேர் எதிர் துருவங்களில் இருந்து எதிர்வினையாற்றினாலும் அன்றைய தமிழக அரசியலில் பண்பாடு இருந்தது என்பதை மறைந்த பத்திரிகையாளர் வலம்புரிஜான் தனது வணக்கம் தொடரில் குறிப்பிட்டு சொல்கிறார்.

இனி வருவது  அவருடைய வரிகள்.

.... எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலக் காட்சிகள் தொலைக் காட்டப்பட்டபோதெல்லாம் கலைஞர் வாய்விட்டு அழுதிருக்கிறார். இதை அவரே ஒருமுறை என்னிடம் சொன்னார். நானும் மற்றவர்கள் வழியாக இதனை அறிந்தேன்.

2000 ஆண்டுகளுக்கு முந்திய பண்பாட்டைப் பற்றியே தமிழர்கள் பேசிவருகிறார்கள். அவ்வளவு தூரம் ஏன் போகவேண்டும். அறிஞர் அண்ணா மறைந்தபோது அவரது சடலத்துக்கு மரியாதை செலுத்த வந்த பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் அண்ணாமலையைப் பார்த்து "என்ன டாக்டர், இந்த உயிரைக் காப்பத்த முடிலியேண்ணே.. நீங்க என்ன டாக்டருண்ணே.. "என்று கேட்டார்.

ராஜாஜியின் வாழ்க்கை முடிந்து போனபோது சுடுகாட்டில் அவரது சடலத்தைச் சந்தனக் கட்டைகள் மறைத்து நின்றன. யாருக்காகவோ ராஜாஜியின் மகன் நரசிம்மன் காத்து நிற்கிறார் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால், சக்கரவண்டியில் வந்தப் பெரியாரைப் பார்த்த பிறகுதான் எல்லோருக்கும் கண்கள் விரிந்தன.

ராஜாஜியின் சடலத்திற்கு அருகில் அமர்ந்து பெரியார் ஒரு குழந்தையைப் போல கேவிக்கேவி அழுதார்....


Saturday, July 1, 2017

மெட்ராஸ் தமிழ்

மெட்ராஸ் சென்னை ஆகிவிட்டதால் 'மெட்ராஸ் தமிழ்'   சென்னை தமிழாகி 
விட்டது என்றே நினைக்கிறேன்.    பொதுவாகவே   'சென்னை தமிழ்' 
நமக்கெல்லாம்  ஏதோ நகைச்சுவை என்றவகையிலேயே   திரைப்படங்களின் வழியாக அறிமுகமாகி இருக்கிறது ( நடிகர்கள் சோ, கமல், லூஸ் மோகன்
போன்றவர்கள் இதை மக்களிடம் நேரடியாக எடுத்துச் சென்றார்கள்).

உண்மையில் தமிழ்நாட்டுடன் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் பகுதிகள் சேர்ந்திருந்த மெட்ராஸ் ஸ்டேடில் சென்னையை பூர்வீகமாக கொண்ட மக்களால் பேசப்பட்ட மொழி அது.

அதாவது வட்டார வழக்கு மொழி. தெலுங்கு,உருது,இந்தி, ஆங்கில மொழிகள் கலந்த கலவை அது . நடிகர் கமல் கூட இது குறித்து ஒரு பேட்டியில் விரிவாக பேசியதாக நினைவு. 

நமக்கெல்லாம் அறிமுகமான  ஒரு சென்னை வார்த்தை -பேமானி, அதன் மூலம் உருது. " பே இமானி"  (பே-இல்லாத, இமானி-நேர்மையானவன்) அதாவது நேர்மை இல்லாதவன்.

இன்று சென்னைக்கு  ஊர்புறத்திலிருந்து வீட்டுக்கு ஒருவர் வந்துவிட்ட சூழலில்
சென்னைக்கென்று  ஒரு தனித்தமிழ் இருப்பதாக தெரியவில்லை. வடசென்னைத் தவிர்த்து அந்த   'மெட்ராஸ் தமிழ்' சுத்தமாக வழக்கற்று போய்விட்டது என்றே நினைக்கிறேன்.

ஆனாலும்,  அதன் எச்சங்களாக இன்னமும் சில தமிழ் சொற்கள் சென்னையில் வித்தியாசமாக உச்சரிக்கப்படுவதை நீங்கள் கவனித்திருக்களாம்.

சட்டென நினைவுக்கு வரும் சில சொற்கள். கொய்யா- goiya, குடிசை- gudisai 
அதுபோலக் கும்பல்-gumbal.  இவையெல்லாம் தவிற்கப்படவேண்டிய ஒலிப்புப்பிழைகள். 

Tuesday, March 7, 2017

எழுத்தாளர் சுஜாதாவும் திராவிடமும்

நமது அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் திறந்துவிடதான் மறுக்கிறார்களே தவிர, சங்ககால தமிழ் வார்த்தைகளை அல்ல எனச் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நிறைய தமிழ்ச் சொற்கள் நிரம்பிக்கிடக்கின்றன எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எழுத்தாளர் சுஜாதா  திராவிட மொழிகளில் தமிழின் தாக்கம் குறித்து "கற்றதும் பெற்றதும்" தொடரில் பதிவு செய்தது உங்களுக்காக.

//
தமிழின் பல சங்க கால வார்த்தைகள், மற்ற திராவிட மொழிகளில் அன்றாட வார்த்தைகளாக உள்ளன
என்பதை அம்மொழிகளின் திரைப்படங்களைப் பார்க்க நேரும்போதெல்லாம் யோசிப்பேன்.

"இல்லு" என்ற சொல் நம் இல்லத்திலிருந்து அனுப்பியது. அதே போல இன்றைய தெலுங்கில் "நச்சி" என்ற வார்த்தை, "விரும்புதல்" என்ற பொருளில் பயன்படுகிறது.  "நீர்க்கோல வாழ்வை நச்சி" என்ற கம்பராமயணப் பாடலில் உள்ள நச்சுதல் அது.

"மனை" நம்மிடம் அழைப்பிதழ்களில் மட்டுமே மிஞ்சியுள்ளது. அதைக் கன்னடத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டைக் கட்டிக்கொண்டோம். அகமும் புறமும் மலையாளத்தில் இன்று அன்றாட வார்த்தைகளாகி, நம் உள்ளேயிருந்து வெளியே போய்விட்டன.
//

அனைத்து திராவிட மொழிகளுக்கும் தாய்மொழி  தமிழ்
என்பது ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டது தானே.