Saturday, October 31, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-1

       கடந்த வாரம் அலுவலக சம்பந்தமாக லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரத்திற்க்கு சென்று திரும்பினேன். லூசியானா கவர்னர் பாபி ஜிண்டால்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.  இவர்தான் அமெரிக்காவின் முதல் இந்திய அமெரிக்க கவர்னர் என்பது  கூடுதல் தகவல்.


என் பயணத்தை பற்றி விரிவாக எழுதும் முன்பாக.  உங்களில் எத்தனைப் பேருக்கு 'கத்ரீனா சூறாவளி' பற்றி தெரிந்திருக்கும் என்றுத் தெரியவில்லை.

கத்ரீனா  கடந்த 2005ம் ஆண்டு  நியூ ஆர்லியன்ஸை நகரைத் தாக்கிய மிகப் பெரிய சூறாவளி.  இதுவே அமெரிக்காவைத்தாக்கிய மிகப் பெரிய  மற்றும் மூன்றாவது வலுவான புயல்.

அப்போது நகரில் புகுந்த நீரலைகள் உயர் 20 அடி (ஆறு மீட்டர்) இருந்ததாம். இதில்  உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2000 பேர்.  இந்த பேரழிவு  அமெரிக்க மக்களின் அரசியல், பொருளாதாரம்,  நகர்ப்புற திட்டமிடல்  மற்றும் இன்ன பிற விஷயங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விமானத்தின் மேலிருந்து- வரிசையாய் தீப்பெட்டி போன்ற வீடுகள், நகரும் எறும்பு போன்ற கார்கள். இரவில் நட்சத்திரங்களை வாரி இறைத்தது போன்ற நகரம் என ரசிக்கும்படியே இருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சில விஷயங்களில் இதுவும் ஓன்று. இதைப்பற்றிக் கூட யாரேனும் ஓரு கட்டுரை எழுதலாம்.

அப்புறம் அமெரிக்க விமானங்களின் உள்நாட்டு சேவையில் உணவு வழங்குவதை நிறுத்தி வருடங்கள் பலவாயிற்று.  சிற்றுண்டி என்ற  பெயரில் கோக் மற்றும் சிறிய வேர்கடலை பாக்கேட் போன்ற எதாவது ஓன்றை தருவார்கள். இந்த முறை அலர்ஜி என காரணம் சொல்லி அதையும் நிறுத்திவிட்டார்கள். அலர்ஜி பயணிகளுக்கா அல்லது அவர்களுக்கா என நான் இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  இந்தியாவில் இன்னமும் விமானத்தில் பொங்கல் வடை தருகிறார்களா? தெரியவில்லை. அப்படியேனில் நீங்கள் கொடுத்துவைத்தவர் தான். :)

விமானத்தில் கவனித்த இன்னோரு விஷயம் விமானப்பணிப் பெண்கள். வழக்கம் போலவே அழகாக இருந்தனர், முக்கியம் அதுவல்ல. அழகாய் லிப்ஸ்டிக் உதடு விரிய சிரிப்பது, ஹைஹீல்ஸில் கேட்வாக் நடப்பதைத்தாண்டி அவர்கள் துரிதமாகவும்,லாவகமாகவும் உணவு
வழங்குவது அழகாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

வழக்கம் போலவே விமானத்தில் பெரும்பான்மையானவர்கள் புத்தகங்களில் தங்கள் முகம் புதைத்துக் கொண்டிருந்தனர்  என்று எழுதினால் அது சம்பர்தாயமாகவே இருக்கும்.  ஏனேனில் புத்தகம் படிப்பவர்கள் எல்லோரும் குறைந்தது ஐம்பது வயதிற்கு மேலுல்லவர்கள். மீதமுள்ளவர்கள் தங்கள் தொலைபேசிக்கு கண்களையோ இல்லை காதுகளையோ
கொடுத்திருந்தனர்.  இருபது வருடங்களுக்கு பின் புத்தகம் அச்சடிப்பது பற்றி கவலைப்படத் தேவையிருக்காது போல.

இந்தக் கட்டுரையில் எங்கேனும் நீங்கள் தேடிப்பார்த்து அதில் கொஞ்சம் சுஜாதாவின் சாயல் இருந்தால் அதற்கு காரணம் நான் விமானத்தில் படித்த 'கற்றதும் பெற்றதும்' தான். இதற்கும் மேலே எழுதியதற்கும் தொடர்புபடுத்தி என் வயதை நீங்கள் தவறாக கணித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. புத்தக உபயம் 'தமிழ்'-நன்றி.

பயணங்கள் முடிவதில்லை...

Monday, October 19, 2015

புதுக்கோட்டையிலிருந்து எஸ்.ரா. - பதிவர்களுக்காக

அக்டோபர் 11-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை
வலைப்பதிவர்கள் சந்திப்பு 2015,  நான்காம் ஆண்டுத் திருவிழா இனிதே முடிந்தது. என்னைப்போன்ற வெளிநாட்டு பதிவர்களுக்கு நேரடி ஓளிபரப்பு வழங்கியது கூடுதல் மகிழ்ச்சி.  வாழ்த்துக்கள்.

இந்த விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை எனும் மனக்குறையைப் போக்கும் வகையில், கலந்துக் கொண்ட அனைவரும் சிலாகித்து எழுதிய பல பதிவுகளையும் பார்த்தேன்.

நம்ம வீட்ல ஓரு சின்ன நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணிணாலே நாம
ஆடிப் போயிடுறோம். இது போல நிகழ்ச்சியை ஓருங்கிணைக்கப் பல கைகள் வேணும். நா.முத்துநிலவன், வலைச்சித்தர் மற்றும் விழாக் குழுவினர் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள்.

நிகழ்ச்சியில் எஸ்.ராவின் சிறப்புரை அருமை.  அவர் பகிர்ந்த எல்லா
தகவல்கள் முற்றிலும் உண்மை.  அவருடைய பல கருத்துகள்
நம் போன்ற பதிவர்களின்  மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

அவர் உரையிலிருந்து சில துளிகள்:


பொதுவாக பதிவர்கள் பெரும்பாலும் சினிமா தகவல்களில்
கவனம் செலுத்துகிறார்கள். ஆனால்  அதைத் தாண்டி
ஆய்வுக்கட்டுரைகள், தமிழர் பண்பாடு, ஓவியம், சிற்பக்கலை, வரலாறு,
கட்டிடக்கலை  போன்ற துறைசார் தகவல்களையும் பகிர வேண்டினார்.
இதுல பிரச்சனை என்னன்னா Readership கம்மி என்பதுதான் உண்மை.

பதிவர்கள் தங்கள் பதிவை தனித்துவமாக எழுதுவதின் சிறப்பை எடுத்துரைத்தார். அதுபோல புதிய சிந்தனையின் முக்கியத்துவத்தை ஓரு சாப்ளின் கதை மூழம் அழகாக  விளக்கினார்.

நமது மரபுசார்  அறிவை புரிந்து பகிர்வதின் முக்கியத்துவத்தையும்
எடுத்துரைத்தார். நம்மில் எத்தனை பதிவுகள் இதை ஓட்டியது எனத்தெரியவில்லை. பதிவர்கள் கையேடு இந்த குறைகளை களையும் என நம்புகிறேன்.

புகழ் பெற்ற  புத்தகங்களுக்கே தமிழில் விமர்சனங்கள்
இல்லை என்றும் ஆதங்கப்பட்டார்.  இது நிதர்சனம். பதிவர்கள் இதை செய்வது கடினமல்ல என்றே நான் நினைக்கிறேன்.

குழந்தைகள் இலக்கியங்கள் அவர்களுக்கான கதைகள் மற்றும்
அறிவுசார்ந்த தகவல்கள் தமிழில் இல்லை என்ற குறையை
களைய முயற்சிக்க சில வழிமுறைகளையும் பகிர்ந்தார்.பதிவர்கள் இதையும்  கவனிங்க.

அதுபோல தன் பேச்சினுடே அறிவு திருட்டை கண்டித்தார். இதைப் படிக்கும் பதிவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஓன்று.  Courtesy அல்லது நன்றி-ன்னு நிஜ படைப்பாளி பெயர போடுங்கப்பா.

தன் வலைத்தளத்தைச் சுமார் 6 ஆயிரம் பேர் தினமும் வாசிப்பதாகவும், இதுவரை 87 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது எனும் கூடுதல் தகவலையும்  பகிர்ந்தார். வாழ்த்துக்கள் சார்.

இறுதியில் பதிவர்களின் இன்றைய மனநிலையை தெளிவாகச் சொன்னார். நான் ரொம்ப ரசித்தது இது.

1.  தனக்கென வாசகர் வட்டமோ, அங்கீகாரமோ இல்லாதது அல்லது உருவாகாதது.  - இதைப் பதிவர்கள் தனது தனித்துவமாக எழுத்தின் வழியாக வெற்றிகாண இயலும் என்றார். 

2. பொருளாதார ரீதியாக எந்த ஓரு அங்கீகாரமும் இல்லாதது.  இந்த சூழ்நிலை வரும் நாட்களில் மாறும் என நம்பிக்கை அளித்தார்.  - காலம்தான் இதற்கான பதிலைச் சொல்லும்.

எனக்குத் தெரிந்தே எத்தனையோ பேர் சில வருடங்களில் அல்லது மாதங்களில் எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள்.

சுய உந்துதல் மற்றும் ஆர்வம் மட்டுமே ஓருவரை பதிவர் உலகத்தில் தாக்குபிடிக்க  வைக்கும் என்பது நிதர்சனம்.

எனவே எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  நம்பிக்'கை' யுடன் தொடர்ந்து எழுதுங்கள் நட்புகளே!.

எஸ்.ரா வின் சிறப்புரை-  https://youtu.be/BSZJx91rFWs (Reference)

Wednesday, September 30, 2015

தமிழர் (பண்)பாடு - வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை

மக்களே, "வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டைக்கு" கடைசி நாள் என்பதால் துரிதமாய் 30 நிமிடங்களில் எழுதியது.

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 
அதற்கான உறுதி மொழி:

1) படைப்பு எனது சொந்தப் படைப்பே. 

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது”. 

(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“.


தமிழர் (பண்)பாடு
--

பண்பாடு நம் பண்பாடு
பார் போற்றும்- தமிழ் பண்பாடு,
கொண்டது நம் தென்னாடு

(பண்) பாடு நீ (பண்)பாடு
பாண்டிய,சேர, சோழன்
தாண்டியது நம் பண்பாடு

தாய்மொழி போற்றும்
பண்பாடு
அது தமிழ்ச்சங்கம் வளர்த்த
பண்பாடு

வந்தாரை வாழ வைக்கும்
பண்பாடு - அது
உலகம் அறிந்த கண்கூடு

அன்பில் சிறந்த பண்பாடு
அது பெண்ணை போற்றும்  பண்பாடு
வீரத்தில் சிறந்த பண்பாடு
விருந்தோம்பல் விரும்பும் பண்பாடு

வாழ இலக்கணம் சொன்ன
இணையில்லா பண்பாடு.


பண்பாட்டு எதிரிகளை 
கண்டால், நீ 
விடாது பந்தாடு

எட்டு திக்கும் சென்ற நீர்
எட்டு திக்கும் எட்ட
பாடு,  தமிழ் (பண்)பாடு
என்றும் தமிழர் பண்பாடு. 


-ஆரூர் பாஸ்கர்


Sunday, September 20, 2015

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருந்த
'சாய்வு நாற்காலி' நாவலை கடந்த வாரம் வாசித்து முடித்தேன்.

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கிளாசிக் நாவல் வரிசையில் அறிமுகப்படுத்திய நாவல்களில்  இதுவும் ஓன்று.  1997 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் இது.

இதை எழுதியவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்.   மலையாளப் பின்னணி உடைய இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்லாண்டுகளாக இயங்கிவருபவர்.

ஓரு வரியில் நாவலின் கதையைச் சொல்வதெனில் வாழ்ந்துக் கெட்ட ஓரு குடும்பத்தின் கதை.  இதைப் படிக்கும் போது ஜல்சாகர் எனும் பெங்காளி படம் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க  முடியவில்லை.

நீங்கள் ஜல்சாகர் (The Music Room) பார்த்திருப்பீர்களா தெரியவில்லை. புகழ்பெற்ற திரைப்பட மேதை  சத்யஜித் ராய் இயக்கிய பெங்காளி படம் (1958). அதில் வரும் ஜமீந்தார் தனது குடும்பத்தின் வறட்டு கௌரத்துக்காக வீட்டின் கடைசி சொத்தையும் விற்று இசை நிகழ்ச்சி நடத்துவார்.

இந்த நாவலில் முஸ்தபாகண்ணு கதை நாயகன்.  உழைக்காமல் சோம்பேறித் தனமாக பழம் பெருமை பேசியபடி சொத்துகளை விற்றுத் தின்கிறார்.

முஸ்தபாகண்ணுவின் மன ஓட்டத்திலேயே இந்தக் கதை நகர்கிறது. முஸ்தபாகண்ணு சாய்ந்து காலாட்டியபடியே வாசம் செய்யும் சாய்வு நாற்காலியும் பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அவருடைய அதபு (ஓழுக்கம்) பிரம்பும் கதையின் முக்கிய பாத்திரங்கள்.

இதைத் தாண்டி  ஓரு  தலைமுறையின் பெண் சுகம், வெட்டி கௌரவம், ருசி கொண்டு அடங்காத நாக்கு,  குடும்பப் பந்தம் என பல தளங்களில் இந்த கதை பயணிக்கிறது.

கதையில் குடும்பத்தின் இருநூறு ஆண்டு கால வரலாற்றை அஞ்சு தலைமுறை மூலம்  ஆசிரியர் சொல்கிறார்.  இந்த கதையை ஒரு குடும்ப வாழ்வினுடைய வீழ்ச்சி என மட்டும் பார்க்காமல் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் தொடரும் மன ஓட்டத்துக்கான புரிதலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் முழுமையாக வட்டாரமொழி வழக்கில் நாவல் எழுதப்பட்டிருப்பதால் தங்குதடையின்றி வாசிப்பது கேள்விக்குறியே !.

உதாரணமாகக்  கதையில் முஸ்தபாகண்ணு தனது காலை திடுமெனப் பிடிக்கும் வேலைக்காரனை "நீயாடா, கிறாத்லெப் பெறந்தப் பயலெ" என்கிறார். இதை வாசிக்கும் வாசகன் என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வது ? எதோ திட்டுகிறார் என வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் விவரம் தெரிந்தால் கடைசி பக்கத்தில் கொடுத்துள்ள பொருளைத் தேடலாம். கடைசிப் பக்கத்தில் விளக்கம் இருக்கும் விவரத்தை முன்கூட்டியாவது சொல்லித் தொலைத்திருக்கலாம்,  அல்லது மிக எளிமையாக ஓவ்வொரு பக்கத்தின் கீழேயும் விளக்கம் கொடுத்திருக்கலாம். (பதிப்பகத்தார்- கவனிக்க).  நானும் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடி தேடிப்பார்த்து களைத்தே போய்விட்டேன்.


கடைசியாக, இந்த நாவலை படித்து முடித்தபின்  சோம்பலில் ஓரு விதமான 'மதமத'ப்பை நான் உணர்ந்தேன். அதுவே , இந்த புத்தகத்தின் வெற்றி என்று நினைக்கிறேன்.

நேரம் அனுமதித்தால் படிக்கலாம்.



தலைப்பு :சாய்வு நாற்காலி
எழுத்தாளர்: தோப்பில் முஹம்மது மீரான்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9788189359423
பக்கங்கள்: 344
விலை : ரூ.275

Tuesday, September 1, 2015

வாழும்போது சாகிற நாள் தெரிஞ்சு போச்சுனா - ரஜினி வசனத்துக்கு சவால்

வாழும்போது சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் நரகம்," என்று ரஜினியின்  'சிவாஜி' படத்தில் ஒரு வசனம் வரும்.

சிவாஜி படத்துக்கு வசனம் எழுத்தாளர் சுஜதான்னு ஞாபகம். ஆனால்
ரஜினியோட இந்த வசனத்தை சவால் விடும் வகையில் ஓருவர் வாழ்ந்தார் அப்படினா ஆச்சர்யமா இருக்குதுல்ல, மேலே படிங்க..

****
தினமும் அலுவலகத்துக்கு வெகுதூரம் பயணம் செய்யவேண்டியதாக
இருப்பதால் இப்பொழுதேல்லாம் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்கள்தான் துணை.

அச்சடித்த புத்தகங்கள் போலின்றி இதில் குறைந்த நேரத்தில் அதிகம்
பெற முடிகிறது. எல்லாம் வல்ல மலையாள பகவதி அருளால் பெரும்பாலான நேரம் நல்ல புத்தகங்களாகவே எனக்கு அமையும்.  சமீபத்தில் அப்படி நான் கேட்ட ஆங்கிலப் புத்தகம் மோரியுடனான செவ்வாய்க் கிழமைகள் ('Tuesdays with Morrie').மொத்தமாக மூன்றரை மணி நேரம்தான்.

இது மோரி ஸ்க்வார்ட்ஸ் (Morrie Schwartz) எனும் 78 வயதான சமூகவியல் பேராசிரியரின் தன்நினைவுக் குறிப்பு நூல் (Memoir). இதை எழுதியவர் அவர் மாணவர் மிட்ச் அல்போம் ( Mitch Albom).

வாழ்வின் மிகப்பெரிய படிப்பினைகளை, இறக்கும் தருவாயில் உள்ள பேராசிரியர் மோரி தன் மாணவரிடம் சொல்வதாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

அதன் சுருக்கம் இங்கே.

பேராசிரியர் மோரி ALS எனும் ஓருவகை நரம்புச்சிதைவு நோயால் பாதிக்கபட்டு சாகக்கிடக்கிறார். Amyotrophic Lateral Sclerosis (ALS) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நோய்க்கு சரியான சிகிச்சை என்று எதுவும் இன்றுவரை இல்லை.  இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படிப்படியாகப் பேசும் சக்தி, விழுங்குதல் மற்றும் சுவாசித்தல் போன்றவற்றை இழந்து இறுதியில் மரணமடைகிறார்கள். கடந்த ஆண்டு  வைரஸ் போல இணையத்தில் பரவிய 'ஐஸ் பக்கெட் சவால்' வழியாக இந்த ALS பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

ALSல் பாதிக்கப்பட்ட மோரிக்கு மருத்துவர்கள் சில மாதங்கள் என நாள் குறிக்கிறார்கள். "வாழும்போது சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் நரகம்," என்று ரஜினியின்  'சிவாஜி' படத்தில் ஒரு வசனம் வரும். ஆனால் அப்படி தேதி குறிக்கப்பட்ட மற்றவர்கள் போல் இல்லாமல், ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதை தனது மரணம் வழியாக காட்ட இயலும் என தைரியமாக அறிவிக்கிறார். தன்னை மனித புத்தகம் ( Human book) என்றும் அமேரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிப் பேசுகிறார்.

அதை வியப்போடு பார்த்த கோடிக்கணக்கானவர்களில் பேராசிரியரின் முன்னாள் மாணவர் மிட்சும் ஓருவர். அதைப் பார்த்த பிறகு, அதாவது ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தனது விருப்பத்துக்குகந்த (favourite) பேராசிரியர் மோரியை அவர் வீட்டில் சந்திக்கிறார் மிட்ச். அதுவரை எந்தத் தொடர்புமற்று இருந்தபோதும் மிட்ச்சின் பெயர் சொல்லி அழைக்கிறார் பேராசிரியர்.

அதன் தொடர்ச்சியாக மிட்ச்சிடம் நீண்டகால நண்பராய் பேராசிரியர் உரையாடுகிறார். கல்லூரி நினைவுகளை இருவரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் மிட்ச்சுக்கு மோரியின் நட்பு ஆறுதலாய் இருக்கிறது. இங்கிருந்துதான் கதை தொடங்குகிறது.

பேராசிரியரின் அன்பால் ஈர்க்கப்பட்ட மிட்ச் பல நூறு மைல்கள் தாண்டி ஓவ்வோரு வாரமும் செவ்வாய்க்கிழமை அவரை வந்து சந்திக்கிறார்.  அதுவே "Tuesdays with Morrie". மோரி என்பது ஹீப்ருவில் "என் ஆசிரியர்"  என்றும் அர்த்தப்படுவதால், "எனது ஆசிரியருடனான செவ்வாய்க் கிழமைகள்" என்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம்.

சந்திப்பின்போது ஓவ்வொரு வாரமும் அன்பு, திருமணம், குடும்பம், நட்பு, கலாச்சாரம்,மரணம் என மனித வாழ்வின் பல கூறுகளைக் குறித்து அவர்கள் உரையாடுகிறார்கள். உதாரணமாக, மரணத்தை இயற்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என சொல்லும் அவர், நமக்கென குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது ஒரு சுகானுபவம் என்கிறார். அன்பே பூரணம், அதுவே வாழ்வில் நிரந்தரம், என தனது குடும்பத்தைக் கொண்டு வலியுறுத்துகிறார்.

இதுபோல தனது கடந்த கால அனுபவங்கள், மனதை பாதித்த விடயங்கள் என பலவற்றை பகிர்ந்து கொள்கிறார். உதாரணமாக, தான் கோபித்துக் கொண்டு கடைசிவரை பேசாமல் இருந்த, இறந்த ஓரு நண்பரை நினைத்து மிட்ச்சிடம் கண்ணீர் வடிக்கிறார்.

மிட்ச் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பேராசிரியருக்குப் பிடித்த உணவுகளை வாங்கிச் செல்கிறார். அவரால் சாப்பிட இயலாத நிலையிலும் அந்த வழக்கத்தை விடமுடியாமல் தவிப்பது உணர்ச்சிபூர்வமானது.

கூடவே  ஓவ்வொரு வாரமும் பேராசிரியர் உடல்நிலையில் படிப்படியாக ஏற்படும் மோசமான மாறுதல்களை உருக்கமாக மிட்ச் விவரிக்கிறார். இடைவிடாமல் 2 மணி நேர இருமல் போல வேறு கொடுமை இல்லை என்கிறார். கடைசியில் நுரையீரல் அடைப்பால் பேராசிரியர் மரணமடைகிறார். பேராசிரியர் இறக்கும்வரை மொத்தமாகப் பதினான்கு செவ்வாய்கள் இந்தச் சந்திப்பு தொடர்கிறது.

இந்தச் சந்திப்புகள் மிட்ச் தனது வாழ்வில் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தியதை உணர்கிறார். தன்னைப் போன்ற இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் எல்லா சமகால குழப்பங்களுக்கும் இந்த உரையாடல்கள் விடைதரும் என மிட்ச் நம்புகிறார். இவற்றைத்தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தின் சாரம் எளிதானது, அதே சமயத்தில் ஆழமானதும்கூட. இயந்திரத்தனமான உலகில் வாழும் நம்மைப் போன்ற எல்லோரும் எளிதாகப் பொருத்திப் பார்க்கக்கூடியதே.

புத்தகத்திலிருந்து என்னைக் கவர்ந்த மேற்கோள்கள் சில.

**அன்பு இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது.

**அன்பு செலுத்து அல்லது அழிந்து போ.

**இறப்பு ஒரு வாழ்க்கையை மட்டுமே முடிக்கிறது, ஒர் உறவை அல்ல.

**நீங்கள் இறப்பதற்கு முன் உங்களை மன்னியுங்கள். பின்னர் மற்றவர்களை மன்னிக்கலாம்.

**நீங்கள் இறந்தபிறகும்கூட அன்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

அதே சமயத்தில் ஓரு பேராசிரியக்கும் மாணவருக்குமான உறவைத்தாண்டி இரு தலைமுறைக்கான உணர்ச்சிகரமான உறவை  இந்தப் புத்தகம் மிக நெகிழ்ச்சியாக விவரிக்கிறது. வாழ்ந்த தலைமுறை வாழும் தலைமுறைக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய பாடம் அனுபவங்களன்றி வேறேன்ன இருக்க முடியும்?

இந்தப் புத்தகம் உலகம் முழுவதும் நல்ல அங்கீகாரம் பெற்று பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடப்புத்தகமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எவரேனும் இந்தப் புத்தகத்தைத் தமிழில்  மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இது 'Tuesdays with Morrie' எனும் அதே பெயரில் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. படத்தின் YouTube இணைப்பு இங்கே

https://youtu.be/gGCYD_7taKA

பேராசிரியர்  மோரியின் பேட்டி

https://youtu.be/-LOdPzZW_aQ

நேரம் அனுமதித்தால் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படித்துவிடுங்கள்.

தலைப்பு :Tuesdays with Morrie
ISBN: 0-385-48451-8
வெளியீட்டாளர்: Doubleday

***

இந்தக் கட்டுரை ஆம்னி பஸ இணைய இதழிலும் வெளியாகியுள்ளது இணைப்பு:

http://omnibus.sasariri.com/2015/08/tuesdays-with-morrie-mitch-albom.html


Sunday, August 23, 2015

ஆப்பிள் தின்று கொண்டிருக்கும் டினோசர்

டினோசர் பொம்மைக்கு விளையாட்டாய் ஆப்பிள் ஊட்டிக் கொண்டிருந்த எனது மூன்று வயது மகள் இந்த கவிதைக்கான தூண்டுதல்.

அதுவே 'ஆப்பிள் தின்று கொண்டிருக்கும் டினோசர்' எனும் தலைப்பிட்ட
இந்தக் கவிதையானது.

**
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அது 
கடப்பவர்களையெல்லாம் ஏசிக் கொண்டிருந்தது.

சில சமயங்களில்
மர்மமாய் புன்னகைக்கிறது
அழுகிறது
அர்த்தமற்றவொன்றை
முணுமுணுத்தபடியே இருக்கிறது
வேறொரு சமயத்தில்
தனக்குள் பேசிச் சிரிக்கிறது

அதைப்
பழக்கிவிடுதலில் இருக்கும் சிரமங்களை
அரும்பச் செய்த அயற்சி 
தீருவதற்குள்
கொஞ்சம் பழகியிருந்தது
சந்தர்ப்பக் கூடாரத்தில்
நாய் 
பிணைக்கும் கயிற்றில்
கட்டப்பட்டு
சாந்தமாக ஆப்பிள்
கடித்துக் கொண்டிருக்கும்
அந்த டினோசர்

இப்பொழுது
ஏனோ
பதட்டத்தோடு 
அதை
கடந்து செல்லமுயல்கிறேன்.
***

வெளியிட்டவர்கள்:

இன்மை : கவிதைக்கான இணைய மாத இதழ்.
இணைப்பு:
http://www.inmmai.com/2015/07/blog-post_66.html

ஆனந்த விகடன்-சொல்வனம் இணைய இதழிலும் வெளியாகியுள்ளது (131வது இதழ்)
இணைப்பு:
http://solvanam.com/?p=40757

கவிதைக்கு செறிவூட்டிய நண்பர் வா.மணிகண்டனுக்கு நன்றிகள் பல!

உங்கள் மேலானக் கருத்துக்களை தெரியப்படுத்துங்களேன்.

Sunday, August 16, 2015

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்

சாஹித்திய  அகாடமி   விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன்.

இதுவே எனக்கு ஜெயகாந்தனின்  முதல் வாசிப்பு. இந்த காலகட்டத்தில் (முதல் அச்சு-1970) இது கொஞ்சம் நீண்ண்ண்ண்ட நாவலே.  ஆனாலும் தங்குதடை அற்ற அழகிய நடை போர் அடிக்காமல் நாவலை நகர்த்துகிறது.

இந்த நாவலில் அறியாத வயதில்  கற்பிலந்த பெண்ணாக கங்கா.  ஆண் துணையில்லாத கங்காவுக்கும் அவள் உறவு மற்றும் சமுகத்துக்கும் இடையேயான  முரண்பட்ட  போராட்டமே கதை.

அவளே தனது கதையை சொல்வதாக நாவல் எழுதப்பட்டுள்ளது. மிக அருமையான கதை நகரத்தல். சுய விருப்பம்,வெறுப்பு, மகிழச்சி என
கங்காவின்  மன ஓட்டத்தை மிக அழகாகச் சினிமா படம் போலக் கோர்வையாக அடுக்கிச் செல்கிறார். ஓரு பெண்ணின் இதயத்துக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தியை  ஜெயகாந்தன் எங்கிருந்து பெற்றார்  எனத் தெரியவில்லை.

இந்த நாவலில் சொல்லப்படும் கருத்துக்கள் இப்போது காலாவதியானவை. ஆனால் ஒரு முடிந்து போன காலகட்டத்தின் சுவடாக வரும் தலைமுறையாலும் இந்த நாவல் பேசப்படும் என்பது உறுதி.

நாவலை படித்த கையோடு அதே பெயரில் வெளியான படத்தைப் பார்த்தேன் (1977 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது).  கங்காவாக லக்ஷ்மி நடித்துள்ளார்.
ஆனால் நாவலின் உயரத்தை படம் தொட வில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

நாவலின் சாரம் குறையாமல் முழு நிறைவுடைய ஒரு படமாக எடுப்பது எளிதானது அல்ல போல. படத்தின் YouTube இணைப்பு இங்கே.
https://youtu.be/RsijKvLbTQM

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்  பெற்றவர் ஜெயகாந்தன்.  அவரது மற்ற புத்தகங்களையும் படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

நேரம் அனுமதித்தால் நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துவிடுங்கள்.



வெளியீட்டாளர்மீனாக்ஷி புத்தக நிலையம்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பக்கங்கள்: 447