Tuesday, April 9, 2019

வனநாயகன் குறித்து-11 (புதினத்தின் பெயரே வசீகரம்..! )

வாசகர் திருமதி. ரமணி பிரசாத் (Ramani Prasad) அவர்கள் 
முகநூலில் "வனநாயகன்(மலேசிய நாட்கள்)" குறித்து எழுதிய கதை விமர்சனம். 
நன்றி ரமணி பிரசாத் !!

/////

"வனநாயகன்" நான் நேற்று படித்து பரவசித்த புதினம்.இதனை எழுதியவர் என் முகநூல் நண்பர் திரு ஆரூர் பாஸ்கர்.திருவாரூரில் பிறந்து வளர்ந்தவர்.தற்பொழுது அமெரிக்காவில் ஃபுளாரிடா மாநிலத்தில் சாஃப்ட் வேர் என்சிஜினியராக பணிபுரிகிறார்.நல்ல எழுத்தாளர்,கவிஞர்.தன்தாய்நாட்டின் மீதும் மொழியின் மீதும் தீராக்காதல் கொண்டவர்."சிறகுகள் கல்வி அறக்கட்டளை" என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையும் நடத்திவரும் பன்முகத்திறன் கொண்டவர்.


புதினத்தின் பெயரே வசீகரம். கதைக்களமும் அப்படியே.மலேசியா..அங்கு வேலைக்குப் போன திறமையுள்ள ஒரு சாஃப்ட் வேர் என்ஜினியர்...
கண்ணுக்குத்தெரியாத மனிதர்களால் தன்னைச் சுற்றி ஒரு வலை பின்னப்படு வதையும் ,தன்னை அந்த நாட்டைவிட்டுத்துரத்த நடக்கும் சதிகளையும் அறிந்து அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.பயங்கர திரில்லிங்..புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடிவதில்லை. நன்றி பாஸ்கர் சார்.இப்படிப்பட்ட எழுத்தாளர் என் நண்பர் என்பதில் பெருமையடைகிறேன்

///////

புத்தகத்தை இணையத்தில் கிழக்கு பதிப்பகத்தில் வாங்க:


Monday, April 8, 2019

அப்பெல்லாம் எப்படி தெரியுமா?

அப்பெல்லாம் எப்படி தெரியுமா ? அந்தகாலத்துல நாங்கெல்லாம்..,  அது ஒரு காலம்யா.. என்றெல்லாம் சிலாகித்து  பெரியவர்கள்  தங்களுடைய "அந்தநாள்" விசயங்களை சொல்லக் கேட்டிருப்போம்.

அப்படி வாய்பேச்சில் கதைகதையாக சொல்பவர்களில்  சொற்பமானவர்களே அதை எழுதி ஆவணப்படுத்துவார்கள். அந்தவகையில் ஒரு புத்தகம் எனது கைக்கு வந்திருக்கிறது. 1960 களில் வளர்ந்த அவர்
தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் வகையில் சுயசரிதை போல் எழுதியிருக்கிறார். பல தகவல்கள் சுவாரசியமாக இருக்கின்றன.
கல்யாணமாம் கல்யாணம் எனும் தலைப்பில் அந்த நாளையத் திருமண ஏற்பாடுகள், கலாட்டாக்கள், சடங்குகள் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார்.  அதில் ஆச்சர்யப்படும் பல  விசயங்கள் இருக்கின்றன. புத்தகத்தில் இருந்து...

"..அப்போதெல்லாம் கல்யாணத்துக்கு போகிறோம் என நினைத்தாலே வடை,பாயசம், அப்பளம் கூடிய சாப்பாடுதான் நினைவுக்கு வரும். அப்போது மாப்பிளைக்கு பெண் கிடைப்பது அரிது. அப்படியே பெண் கிடைத்தாலும் ஜாதக பொருத்தம் பார்த்து, பெண் வீட்டாரிடம் சம்மதம் வாங்குவதற்கு
நடையாய் நடந்து காலும் வீங்கியது , செருப்பும் தேய்ந்தது என்பார்கள்.
பெண் வீட்டார் எப்போதும் முறுக்கோடு இருப்பார்கள்.ஏட்டிக்குப் போட்டியாகவே பேசுவார்கள். மாப்பிளை வீட்டார் பெண்ணுக்கு என்ன நகைபோடுவார்கள் என பேச்சுவார்த்தை நடக்கும். எவ்வளவு பணம் கொடுப்பர் எனக் கேட்பதும் உண்டு.  பேசிப்பேசி பெண் வீட்டாரின் சம்மதம் வாங்குவது பெரும்பாடாக இருக்கும்..."

திருமணத்திற்கு பெண்கள் தேடும் விசயத்தில் நடுவில் கொஞ்சநாள் நிலைமை மாறி இப்போது திரும்பவும் 1960களுக்கு திரும்புகிறோம் என நினைக்கிறேன்.

Tuesday, April 2, 2019

கீழடி நம் தாய் மடி

நண்பர்களுக்கு முன்பே சொன்னதுபோல அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் இந்த ஆண்டு ஜூலை 3,4,5,6 தேதிகளில் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது.  இந்த மாநாட்டின் மையக் கருத்து “கீழடி நம் தாய் மடி” என்பதாகும்.

மாநாட்டின் விழாமலருக்கு உங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.  ஆர்வமுள்ள நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். விவரங்கள் இணைப்பில்.




Monday, April 1, 2019

வனநாயகன் குறித்து-12 (வனநாயகன் உங்கள் உண்மை சம்பவமா?)

"வனநாயகன் உங்கள் உண்மை சம்பவமா? நாவலை  முழுவதும் வாசிச்சேன் பக்கங்கள் போனதே தெரியவில்லை" என உள்பெட்டியில் நேற்று ஒரு வாசக நண்பர் கேட்டிருந்தார்.  கூடவே வனநாயகன் தாக்கம் தனக்கு ஞாயிறு முழுவதும் இருந்தது,  கதை அமைப்பு மற்றும் எழுத்து சேர்ப்பு வாசிக்க
அருமையாக  இருந்தது என சிலாகித்தார்.

எனது "வனநாயகன்- மலேசிய நாட்கள்" 2016 டிசம்பரில்   கிழக்குப் பதிப்பக வெளியீடாக வந்தது.  வெளியான கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக பல  கடிதங்கள், முகநூல் பதிவுகள்
வழியாக  வனநாயனுக்கு வாசகக நண்பர்கள் அளிக்கும் வரவேற்பு
உற்சாகமளிக்கிறது.  இப்படி என்னை எழுத்தால் அடையாளம் கண்டு பாசத்தோடு நெருங்கி கை குலுக்கும் எல்லா அன்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

வாசகன் ஒரு படைப்பை வாசிக்கும் போதும் வாசித்த பின்பும் ஏதோ ஒரு புள்ளியிலேனும் தன்னை படைப்பில் அடையாளம் காணும் போது அந்தப் படைப்பு வெற்றி பெற்றதாக சொல்வார்கள்.  அந்த வகையில் வனநாயகன் வாசகர்களின் நெஞ்சைக் கவர்ந்த வெற்றிப் படைப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது. தொடர்ந்து உற்சாகமளித்து ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !!


புத்தகத்தை இணையத்தில்- கிழக்கு பதிப்பகம் வழியாக:

Monday, March 25, 2019

சிகாகோவில் முப்பெரும் விழா

அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் இந்த ஆண்டு ஜூலை 3,4,5,6 தேதிகளில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. (உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, பேரவையின் 32ஆவது தமிழ் விழா , சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா).

மாநாட்டின் விழாமலருக்கு உங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.  ஆர்வமுள்ள நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். விவரங்கள் இணைப்பில்.


Sunday, March 24, 2019

டிரங்க் பொட்டி - எழுத்தாளர் பால கணேஷ்

காலம் அதிவேக ரயிலாக முடிவிலியை நோக்கி  விரையும்
இன்றைய அவசர உலகில் எதையும் நிறுத்தி நிதானமாக யோசிப்பதற்கு
கூட அவகாசமில்லை. இந்தச் சூழலில் கடந்த கால மனிதர்களைப்
பெருமையோடு நினைத்துப் பார்ப்பதும் அவர்கள்  வாழ்வை ரசனையோடு கொண்டாடுவதையும் நேரவிரயம் என்றே பலர் நினைப்பார்கள்.. ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளி முகநூல் நண்பர் பால கணேஷ் நாமெல்லாம் ஆச்சர்யப்படும் வகையில் டிரங்க் பொட்டி எனும் புதையலை திறந்து நம் கண் முன் வைத்திருக்கிறார்.

கணேசுக்கு தனது தாத்தாவின் மறைவுக்குப் பின் அவர் ரகசியமாக பாதுகாத்த டிரங்க் பெட்டியைத் திறந்து பார்க்கும்  வாய்ப்பு  கிடை த்திருக்கிறது. அதில் அவர் தாத்தா அள்ள அள்ள குறையாமல் சுரக்கும் அமுதசுரபி போல பல அற்புத விசயங்களை சேகரித்து வைத்து இருந்ததைப் பார்த்து கணேஷ் கண்கள் விரிய ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அந்த ஆச்சர்யத்தை டிரங்க் பெட்டி புத்தகம் வழியாக நமக்கும் கடத்தியிருக்கிறார்.

கணேஷ் கண்டெடுத்த ஆச்சர்யம் விலை உயர்ந்த நகையோ, செல்வமோ
அல்ல. மாறாக விலை மதிக்கமுடியாத பழைய புத்தகங்கள், அன்றைய நாணயங்கள், ஓலைச்சுவடிகள், திருமண அழைப்பிதழ்கள்,
பாத்திரங்கள், மரப்பாச்சி பொம்மைகள், பேனா, பழைய முகத்தல் அளவை சாமான்கள், விளம்பர நோட்டீசுகள் என எல்லாம் அந்தகால சாமான்கள். இந்தப் புத்தகம் அவற்றைப் பட்டியல் மட்டும் போடும் ஒரு சிறு குறிப்பாக இல்லாமல் அவற்றைப் படத்தோடு அதன் பின்புலத்தைக் கதையாக சுவாரசியமாக வாசிக்கும்படி சிறு புத்தகமாக வந்திருக்கிறது. தமிழில் இது நல்ல முயற்சி. அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அன்றைய மக்கள் மதிப்பீடுகள், வாழ்க்கை முறை,
அன்று தமிழ் பொதுவெளியில் எழுதப்பட்டவிதம் என புத்தகத்தைப் பல நம்மால் கோணங்களில் அணுகமுடிகிறது. எடுத்துக்காட்டாக இதில் குறிப்பிடப்பட்டுள்ள 1864இல் மசூலிப்பட்டினத்தைச் சுனாமி  தாக்கிய சம்பவம் இன்று இணையத்தில் தேடினாலும் கிடைக்கவில்லை. இதுபோன்ற பல அரிய தகவல்கள் புத்தகத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

உண்மையில் நாம்  இப்படித்தான் அன்றைய வெகுஜன மக்களின் வரலாற்றைக் கட்டியமைக்க வேண்டியிருக்கிறது. மேற்கு நாடுகளில் family bible எனும் பெயரில் குடும்ப வரலாறு எழுதும் வழக்கமிருக்கிறது. அதாவது ஒரு குடும்பத்தினர் வழிவழியாக தங்கள் குடும்பத்தின் வரலாற்றை எழுதி ஆவணப்படுத்தி அடுத்தத் தலைமுறைக்கு பயன்படும் வகையில் விட்டுச் செல்கிறார்கள். இப்படிச் செய்வதால் ஒரு குடும்பத்தின் மரபு,  பழக்க வழக்கங்கள்,வட்டார மொழி,  உணவு, உடை, முக்கிய நிகழ்வுகள், அன்றைய வாழ்க்கைமுறை போன்ற பல அரியதகவல்கள்  நூற்றாண்டுகள் கடந்து அடுத்தத் தலைமுறைக்குச் சென்றுசேர வாய்ப்பிருக்கிறது.

பால கணேஷின் டிரங்க் பொட்டி புத்தகம் ஒருவிதத்தில் குடும்ப பைபிள் என்று கூட சொல்லலாம். கூட்டுக் குடும்பங்கள் ஓழிந்து நகரமாயான இன்றையச் சூழலில் அடுத்த தலைமுறைக்கு நமது மரபின் தொடர்ச்சியைச் சொல்ல   அனைவரும் நமது வீட்டின் டிரங்க்பெட்டிகளைத் தேடி திறந்து காட்டவேண்டிய தருணம் இது.

வாழ்த்துகள் பாலகணேஷ் !!, முடிந்தால் அழகான வண்ணப்படங்களோடு அனைவருக்கும் பயன்படும் வகையில் டிரங்க் பெட்டியை இணையத்தில் வெளியிடமுடிந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்

நூல் : டிரங்க் பொட்டி
ஆசிரியர் : பாலகணேஷ்
பதிப்பகம்: தங்கத் தாமரை பதிப்பகம்
விலை: ரூ. 80










Wednesday, March 20, 2019

அன்றைய தமிழக அரசியல்

இருவரும் நேர் எதிர் துருவங்களில் இருந்து எதிர்வினையாற்றினாலும் அன்றைய தமிழக அரசியலில் பண்பாடு இருந்தது என்பதை மறைந்த பத்திரிகையாளர் வலம்புரிஜான் தனது வணக்கம் தொடரில் குறிப்பிட்டு சொல்கிறார்.

இனி வருவது  அவருடைய வரிகள்.

.... எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலக் காட்சிகள் தொலைக் காட்டப்பட்டபோதெல்லாம் கலைஞர் வாய்விட்டு அழுதிருக்கிறார். இதை அவரே ஒருமுறை என்னிடம் சொன்னார். நானும் மற்றவர்கள் வழியாக இதனை அறிந்தேன்.

2000 ஆண்டுகளுக்கு முந்திய பண்பாட்டைப் பற்றியே தமிழர்கள் பேசிவருகிறார்கள். அவ்வளவு தூரம் ஏன் போகவேண்டும். அறிஞர் அண்ணா மறைந்தபோது அவரது சடலத்துக்கு மரியாதை செலுத்த வந்த பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் அண்ணாமலையைப் பார்த்து "என்ன டாக்டர், இந்த உயிரைக் காப்பத்த முடிலியேண்ணே.. நீங்க என்ன டாக்டருண்ணே.. "என்று கேட்டார்.

ராஜாஜியின் வாழ்க்கை முடிந்து போனபோது சுடுகாட்டில் அவரது சடலத்தைச் சந்தனக் கட்டைகள் மறைத்து நின்றன. யாருக்காகவோ ராஜாஜியின் மகன் நரசிம்மன் காத்து நிற்கிறார் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால், சக்கரவண்டியில் வந்தப் பெரியாரைப் பார்த்த பிறகுதான் எல்லோருக்கும் கண்கள் விரிந்தன.

ராஜாஜியின் சடலத்திற்கு அருகில் அமர்ந்து பெரியார் ஒரு குழந்தையைப் போல கேவிக்கேவி அழுதார்....