Wednesday, April 12, 2017

ரஜினி, மலேசியப் பிரதமர் - சில ஸ்கோர்கள்

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மலேசிய பிரதமர் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று சந்தித்தார்"  எனும் தலைப்புச் செய்தியை  சமீபத்தில் நீங்கள் மேலோட்டமாக எங்கேனும்  வாசித்திருக்கலாம்.  இல்லை  "சென்னையில் விழா ஒன்றில் கலந்துக் கொண்ட மலேசிய பிரதமர் செல்லும் பாதைகள் முழுதும் அவரின் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன" எனும் செய்தி கண்ணில்பட்டிருக்கலாம்.

ரஜினியின் சந்திப்பு குறித்து கொஞ்சம் விசாரித்தால் , கபாலி படபிடிப்பிற்கு மலேசிய அரசு தந்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தேன்.  இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு
என ரஜினி  சொல்லியிருப்பார்.

ஆனால்,  ஒரு நாட்டின் பிரதமர் நடிகரை அவருடைய வீட்டில் போய் சந்திப்பது என்பதை ஒரு சாதாரண நிகழ்வாக  நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  இந்தச் சந்திப்பின் மூலம் ரஜினிக்கு என்ன லாபம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால், மலேசியப் பிரதமர் ரஜினியின் சந்திப்பால் சொந்த நாட்டில் சில ஸ்கோர்களைப் பெற்றிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

கடந்த ஆண்டு வெளியான "கபாலி "திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் மலேசிய 
தேசிய மொழியான பாஹாசா மலேசியாவிலும் வெளியானது உங்களுக்கு
நினைவிருக்கலாம்.  இப்போது ரஜினி மலேசியர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு நடிகராகிவிட்டார். அதனால்  இந்தச் சந்திப்பு மலேசிய ஊடகங்களில் கண்டிப்பாக
முக்கியத்துவம் பெற்றிருக்கும். முக்கியமாக அவருடைய அரசின் மேல் அதிருப்தியில் இருக்கும் மலேசியத் தமிழர்களிடமும் அரசு பற்றிய ஒரு நல்லெண்த்தை ஏற்படுத்தியிருக்கும். 

அதுமட்டுமல்லாமல், இந்த சந்தர்பத்தில் மலேசியர்களுக்கான இந்திய விசா கட்டணம் 145 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ள விவகாரமும்  அப்படியே அமுங்கிப்போகவும் வாய்ப்புள்ளது.  கூடவே, மலேசிய இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையிலான 'புளூபிரிண்ட்'  ஒன்றை தொடங்கப்போவதாக அவர் சென்னையிலிருந்து அறிவித்ததில் கூட அரசியல் இருக்கலாம். பார்க்கலாம்.

அதுபோல தமிழகத் திரைத்துறைக்கும் மலேசியாவுக்குமான தொடர்புகள் மிகநீண்டது. அது சம்பந்தமான சில விசயங்களை எனது வனநாயன் நாவலில் லேசாகத் தொட்டிருப்பேன். அதைப் பற்றி இன்னோரு சந்தர்பத்தில் எழுதுகிறேனே.

Wednesday, April 5, 2017

டெல்லியில் போராடும் விவசாயிகள் கோமாளிகளா?

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடடிருக்கும் தமிழக
விவசாயிகள் சிலர் கையில் மண்டைஒடு ஏந்தியபடி நிற்பது
போன்றதோரு படத்தை சிலர் முகநூலில் பகிர்ந்திருந்தனர்.

கூடவே அந்த விவசாயிகள்  கோமாளி கூத்தடிப்பதாக கருத்து தெரிவித்திருந்தனர். விவசாயிகளின் உணர்வுப்பூர்மான
போராட்டத்தை இப்படிக் கொச்சைபடுத்துபவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.

இந்தத் தருணத்தில் பரம்பரையாக விவசாயம் செய்துவரும் எங்கள் வீட்டில் பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

விவசாயத்திலும் சீசன் சமயங்கள் உண்டு அப்பொழுதெல்லாம்
வயலில் நிறைய ஆட்கள்  வேலை செய்வார்கள். அதற்கென
பற்றாக்குறையால் ஒரு அவசரத்துக்கு பக்கத்து வீடுகளில் கடப்பாறை, மண்வெட்டி போன்ற சாமான்களை இரவல் வாங்கும் பழக்கம் எங்களிடம் இருந்தது.

ஒருநாள் அப்படி இரவல் வாங்கிவர வீட்டில் வேலைபார்த்த ஒர் ஆளை அனுப்பினோம். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும்  நினைவில் இருக்கிறது.

"என்னங்க பொல்லாத சீசன்,  நம்ம வீட்டு வேலைக்கு நம்மகிட்ட சாமான் இல்லாம,  அடுத்தவீட்டுல போய் கையெந்துறது நல்லவா இருக்கு சொல்லுங்க ?.  அவங்க வீட்டுலயும் ஆளு தேளு வேலைபாக்காதா என்ன ? நாம கேட்டு, அவங்க இல்லனு சொன்னா என்ன பண்றது? நாம சுயம்பு மாதிரி தனிச்சு நிக்கனுங்க"

எனச் சொல்லி, "நீங்க என்ன வேணா நினைச்சுக்கோங்க, நா இரவல் கேக்க யார் வீட்டுக்கும் போக மாட்டங்க" என அழுத்தம் திருத்தமாக
சொல்லிவிட்டார்.

எங்களுக்கு பொட்டில் அறைந்தது போலிருந்தது.    அடுத்த நாளே நாங்கள் தேவையான உபரி சாமான்களை வாங்கிவைத்தோம் என்பது வேறு விசயம்.

அந்த அளவுக்கு நம்மூர் விவசாயிகள் தன்மானம் மிக்கவர்கள். எளிதாக சொல்வதென்றால் மானம், ரோசமுக்கவர்கள். யார் தயவும் இல்லாமல் விண்ணையும் மண்ணையும் மட்டும் நம்பும்
அசாத்திய தைரியசாலிகள். எதற்கும் துணிந்தவர்கள்.

ஆனால் இன்று நெருக்கடி தாளாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.  கடைசியில் அவர்கள் நொந்துபோய் வீதிக்கு போராட இறங்கியதும் துரதிஷ்டம்.

அவர்களை மண்டை ஓடு ஏந்த வைத்த அரசுதான் கோமாளி அரசாக
இருக்கமுடியும்.  அதுபோல அவர்களை  தலைநகர வீதிகளில் பரதேசியாக அலையவிட்ட நாம்தான் வெட்கப்படவேண்டியவர்களே தவிர அவர்கள் இல்லை.

Sunday, April 2, 2017

ஐடி ஊழியர்களைச் சுற்றி பின்னப்படும் குற்ற வலை

"ஐடி இஞ்சினியர்கள் சுத்தமா பொறுமை இல்லாதவனுங்க.
அவனுங்களுக்கு  மனசு கம்யூட்டர் போல வேலை செய்யுது,
வாழ்க்கையே  இண்டெர்நெட் வேகத்துல அவனுங்களுக்கு
தேவைப்படுது" என  ஐடி பெறியாளரகள் குறித்து அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்திருக்கிறார் பெங்களூரின்
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்.

இந்தத் தகவல்  "புளூம்பர்க் பிசினஸ் வீக்" (Bloomberg Businessweek) ல்
இந்தியப் பத்திரிக்கைகளில்  ஐடி பெறியாளர்களின் குற்றங்கள் திட்டமிட்டு  பூதாகரமாக்கபடுவது  தொடர்பான ஒரு கட்டுரையில்
வந்திருக்கிறது.

"இளம் பெண் பெறியாளர் கொலை" ,  "ஐடி ஊழியர் ஒருவர் ஓடும் வேனில் பலாத்காரம்",  "ஐடி துறையில் வேலை செய்த கள்ளக்காதலி"  போன்ற தலைப்புச்செய்திகளை நீங்களும் பார்த்திருக்க வாய்ப்புள்ளது.

இப்படி பெரும்பான்மையான குற்றங்களுக்கு ஐடி துறையை வலுக்கட்டாயமாக இழுப்பதன் உள்நோக்கம் என்ன ? இப்படி ஐடி என்றோ பொறியாளர் என்றோ தனித்துக் குறிப்பிட்டு எழுத
வேண்டியதன் அவசியம் என்ன ? அப்படி எழுதும் உள்ளார்ந்த மனநிலைக்கு என்ன  காரணம் ? என்பதை இந்தக் கட்டுரை அலசுகிறது.

கட்டுரைப் படி, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட  எல்லா இந்திய மாநிலங்களில் வெகுஜன மக்களைத் தாண்டி போலீசுக்கும் ஜடி துறைபற்றி நல்லதொரு அபிப்ராயம் சுத்தமாக இல்லையாம்.

(அவர்களின் பார்வையில்)  பெரும்பான்மையான நேரங்களைக் கணினியுடன் செலவிடும்  ஐடி மக்கள் தங்கள் நிஜ
வாழ்க்கையையும் அதே கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள் என்கிறார்கள்.  துரதிஷ்டவசமாக அவர்களின் விருப்பப்படி
வாழ்க்கை அமையாத பட்சத்தில் கொலைகூடச் செய்யத் தயங்குவதில்லையாம். மேற்கத்திய நாட்டுக் கம்பெனிகளுக்கு வேலைசெய்யும் இவர்கள் அதே சுதந்திர மனநிலையுடன் தனிப்பட்ட வாழ்வை அணுகுவதால் விவகாரத்து போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்களாம்.

சமயங்களில்  அவர்களுக்கு அலுவலகத்தில் இருக்கும் அதிகப்படியான மனஅழுத்தம் கூட இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டுவதாக ஒரு பொதுவான கருத்து மக்களிடம்
பரவலாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

குறைந்த வயதில் கைநிறைய சம்பளம், சொந்த வீடு, கார் என வாங்கிப் பொருளாதாரத்தில் வேகவேகமாக முன்னேரும்  ஐடி துறையினரை வெளியிலிருக்கும் சாமானியர்கள் ஒருவித பொறாமையோடே பார்கிறார்கள். அதன் வெளிப்பாடே மேலேச் சொன்ன பத்திரிக்கைத் தலைப்புச் செய்திகள் என்கிறது இந்தக் கட்டுரை.

இப்படிச் சாமானியர்களுக்கு  ஐடி மக்கள் மீது இருக்கும் ஒருவிதக் காழ்ப்புணர்ச்சியே ஊடகங்களில் ஐடி துறைகுறித்த தவறான சித்திரம் என அந்தக் கட்டுரை முடிகிறது.

இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது எனத் தெரியவில்லை.
ஆனால்,  என்னைப் பொறுத்தவரை ஐடி மக்களை யாரும் தேவதைகள் எனப் புகழவும் வேண்டும். சாத்தான்கள் என விரட்டவும் வேண்டாம். மாறாக  அவர்களையும் சகமனிதனாக நினைத்தாலே போதும்.

Monday, March 13, 2017

வனநாயகன் குறித்து (4) ஆல்பி (தேர்ந்த எழுத்தாளர்தான் இவ்வளவு நுணுக்கமாக..)

"அத சொன்ன வாய்க்கு முதல்ல சக்கரை போடனும் " என்றோரு பதம்
ஊர் பக்கம் சொல்வார்கள்.  அதாவது ஒரு விசயம்  ஒருவர் சொன்னதுபோல் நடந்துவிட்டால் சொன்னவரை பாராட்டும் விதத்தில் அப்படிச் சொல்வார்கள்.

வனநாயகன் புதினத்தின் (நாவல்) உயரத்தை முதலில் சரியாக கணித்தவர் என்ற முறையில்   நான் முதலில் சர்க்கரை போட நினைப்பது எனது நீயூயார்க் நண்பரும் பதிவருமான ஆல்பி (நியூயார்க் பரதேசி) அவர்களுக்கு தான்.  வனநாயகனை முன்வைத்து அவர் எழுதிய வலைப்பதிவு  இங்கே.

http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_9.html

நாவலுக்கு பல பாராட்டுகள் வரும் இந்தத் தருணத்தில் அவரைப் பற்றி -

ஆல்பி பதிவுலகத்தின் மூலம்  எனக்கு அறிமுகமானவர்.   நியூயார்க்கில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மனிதவளத்துறையின் உயர்பதவியில் இருக்கிறார்.   இலக்கியத்தில் நல்ல பரிச்சம் உள்ளவர்.  சிறப்பான பயணக்கட்டுரைகள் எழுதக்கூடிவர். இளையராஜாவின் தீராத ரசிகர். மேடை பேச்சாளர் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.  முக்கியமாக  தொடர்ந்து வாசிப்பவர்.  ஒரு முறை பேச்சினூடே தனது லைப்ரரி கலெக்சனுக்கு வீட்டில் இடமில்லாமல் தனது நூற்றுக்கணக்கான தமிழ் புத்தகங்களை உள்ளூர் தமிழ்சங்கத்துக்கு நன்கொடையாக தந்ததை நினைவு கூர்ந்தார். அந்த அளவுக்கு வாசிப்பில்  ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர்.

அவர்தான் எனது எழுத்துகளை விடாமல்  வாசித்து தொடர்ந்து உற்சாகப்படுத்தி வனநாயனின் எல்லா கட்டங்களிலும் உறுதுணையாக இருந்தவர்.  தமிழில் இதுவரை எழுதப்படாத கதைக்களன்.  முற்றிலும் மாறுபட்ட கதைக்கரு. மனிதர்களுடன் நெருக்கமாக பேசும் பாணி. பலவிதங்களில் வித்தியாசம் எனச் சொல்லி என்னை இயக்கியவர்.

" மலேசியாவுக்கு ஒருநாளைக்கு எத்தன ஆயிரம் பேர் போறான் ? எத்தன பேர் அனுபவத்தை எழுதுறான் ? எத்தன பேருக்கு அந்த நாட்டை பத்தி சரியா தெரியும். உங்களுக்கு நல்லா எழுத வருது.  கண்டிப்பாக எழுதுங்க". என தோள் கொடுத்தவர்.

எழுதவேண்டும் எனும் ஆர்வம் ஒருபுறம்   இருந்தாலும் அவர்
வைத்த நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் எனும் எண்ணம் எனக்கு ஒரு கூடுதல் வேகம் வந்தது.  அந்த வேகமே இரவுபகலாக மலேசியா தொடர்பான பல புத்தகங்களைத் தேடி தேடி வெறித்தனமாக படித்து எழுத வைத்தது.

அவர் ஒரு விசயத்தில் மட்டும்  உறுதியாக இருந்தார். அவர்  நல்ல எழுத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு பிரபல பதிப்பகம் கண்டிப்பாக அவசியம் என திடமாக நம்பினார்.   அந்தவிதத்தில் என்னை கிழக்கு பதிப்பகத்தை அணுகச் சொல்லி வழிகாட்டியவரும் அவரே.

வனநாயகன் தொடர்பாக கிழக்கு பதிப்பகத்துக்கு நன்றிசொல்லும் அதேவேளையில் இன்று ஆல்பியையும் இன்னும் ஓரிரு நண்பர்களையும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

அவருக்கு நன்றி சொல்லும் அதேவேளையில் இதுபோன்ற நட்புகள் கடல்கடந்த தேசத்தில் கிடைப்பது அரிது என்பதையும் தெரிந்திருக்கிறேன். நன்றி ஆல்பி சார் !!

Tuesday, March 7, 2017

எழுத்தாளர் சுஜாதாவும் திராவிடமும்

நமது அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் திறந்துவிடதான் மறுக்கிறார்களே தவிர, சங்ககால தமிழ் வார்த்தைகளை அல்ல எனச் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நிறைய தமிழ்ச் சொற்கள் நிரம்பிக்கிடக்கின்றன எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எழுத்தாளர் சுஜாதா  திராவிட மொழிகளில் தமிழின் தாக்கம் குறித்து "கற்றதும் பெற்றதும்" தொடரில் பதிவு செய்தது உங்களுக்காக.

//
தமிழின் பல சங்க கால வார்த்தைகள், மற்ற திராவிட மொழிகளில் அன்றாட வார்த்தைகளாக உள்ளன
என்பதை அம்மொழிகளின் திரைப்படங்களைப் பார்க்க நேரும்போதெல்லாம் யோசிப்பேன்.

"இல்லு" என்ற சொல் நம் இல்லத்திலிருந்து அனுப்பியது. அதே போல இன்றைய தெலுங்கில் "நச்சி" என்ற வார்த்தை, "விரும்புதல்" என்ற பொருளில் பயன்படுகிறது.  "நீர்க்கோல வாழ்வை நச்சி" என்ற கம்பராமயணப் பாடலில் உள்ள நச்சுதல் அது.

"மனை" நம்மிடம் அழைப்பிதழ்களில் மட்டுமே மிஞ்சியுள்ளது. அதைக் கன்னடத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டைக் கட்டிக்கொண்டோம். அகமும் புறமும் மலையாளத்தில் இன்று அன்றாட வார்த்தைகளாகி, நம் உள்ளேயிருந்து வெளியே போய்விட்டன.
//

அனைத்து திராவிட மொழிகளுக்கும் தாய்மொழி  தமிழ்
என்பது ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டது தானே.

Friday, March 3, 2017

வனநாயகன் குறித்து-3 (இவன் பல நாடுகளைச் சுற்றுவான்போல் தெரிகிறது)

"வனநாயகன்: மலேசிய நாட்கள்"  நாவல் குறித்து நண்பரும்  எழுத்தாளருமான என்.சொக்கன் தனது முகநூலில் பகிர்ந்தது.


******************************************************************************
ஆரூர் பாஸ்கரின் சமீபத்திய நாவலான ‘வனநாயகன்: மலேசிய நாட்கள்” படித்தேன்.
அடிப்படையில் இது ஒரு த்ரில்லர்தான். மென்பொருள்துறைப் பின்னணி என்பதால், கொஞ்சம் கணினி/இணையப் பாதுகாப்புபற்றிய விஷயங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறார்.

மற்றபடி, ‘யார் இதைச் செய்தார்கள்?’ என்கிற துரத்துதல்தான்.
ஆனால், மற்ற த்ரில்லர்களிலிருந்து இதனைப் பிரித்துக்காட்டுபவை இரு விஷயங்கள்:

முதலாவதாக, நாவலுக்குள் ஒரு சுற்றுலாக் கையேடுபோல மலேசியாவின் பல்வேறு முக்கியமான பகுதிகளைச் சரித்திரத்துடன் அறிமுகப்படுத்துகிறார், அது துருத்திக்கொண்டு நிற்காமல் கதையோடு கலந்து அமைகிறது. நாயகன் மர்மத்தைத் துப்புத்துலக்குவதற்காக மலேசியாவைச் சுற்றிவந்துவிடுகிறான், நாவலின் சூசகமான தலைப்பைப் பார்த்தால் வருங்காலத்தில் இவன் இன்னும் பல நாடுகளைச் சுற்றுவான்போல் தெரிகிறது!

இரண்டாவதாக, என்னதான் த்ரில்லர் என்றாலும், நல்லவன், கெட்டவன் கோட்டைக் கொஞ்சம் மசங்கலாகவே அமைத்திருக்கிறார். பாத்திரங்கள் அனைத்திலும் நல்லவையும் உள்ளன, கெட்டவையும் உள்ளன, அவ்விதத்தில் எனக்கு இது கொஞ்சம் நெருக்கமாகத் தோன்றியது.

*********************************************************************************

Wednesday, March 1, 2017

அமெரிக்கர்களுக்கு இன்னோரு புதிய தலைவலி

மற்ற நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் ( ஐடி அல்லாத) ஒயிட்காலர் வேலை செய்பவர்களுக்கு  "ரோபாடிக்ஸ்"  ரூபத்தில் புதிதாக இன்னோரு தலைவலி வந்து சேர்ந்திருக்கிறது.  காரணம் ? எல்லாம் பணம் படுத்தும்பாடு தான்.

நான் வேலை செய்யும் அமெரிக்க நிறுவனத்தில் பெரும் பயன்பாட்டில் இருப்பதுமெயின்பிரேம் கனிணி.  அதில்தான்   லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் இருக்கின்றன. பல ஆயிரம் பேர்  பயன்படுத்திகிறார்கள்.    ஆனால், முப்பது வருடம்  அரத பழசுனாது. அதன்  நிரல்களை (program) மேம்படுத்தி புதுப்பிப்பதென்றால் ஐபிஎம் நிறுவனத்துக்கு பல மில்லியன் டாலர்கள் தெண்டம்  அழவேண்டும்.   பெரும் செலவு செய்து புதுப்பிப்பதற்கு பதிலாகதான் "ரோபாடிக்ஸ்" எனும்  புதிய தொழில்  நுட்பத்தை அதனுடன்  ஒத்திசைவாக  பயன்படுத்த இருக்கிறார்கள்.

இந்த ரோபாடிக்ஸ் புரோகிராம்கள் இப்போழுது நாள் முழுவதும் மனிதர்கள் மெயின் பிரேம் கம்யூட்டர்களை வைத்து செய்து கொண்டிருக்கும் வேலையை ஒரு சில நிமிடங்களில்  அசால்டாக செய்து முடித்துவிடும்.  அதனால் கணிசமானவர்கள் இன்னும்  ஒரிரு வருடங்களில் வேலையை இழக்கப்போவது உறுதி.

இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் நன்கு படித்த வோயிட் காலர் வேலைபார்ப்பவர்கள் தான். இருந்தாலும் வேறு வழியில்லை.  ஐடி துறையில் அடிக்கும் இந்த புதிய அலை குப்பை கூளங்களுக்கும், புத்தகத்துக்கும் வித்தியாசமா பார்க்கப்போகிறது ?

இங்கே இருக்கும் அமெரிக்க நண்பர்கள் பலரிடமும் பேசினேன். எல்லோரும் பொதுவாக சொல்லும் ஒரு விசயம். பெருநிறுவனங்கள் தங்கள் செலவினத்தை குறைத்து வருமானத்தைப் பெருக்க
ஏதோ ஒரு  விதத்தில் புதிய தொழில்நுட்பத்தைத் தேடி தேடி பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.

இனி வரும் நாட்களில்  மனிதர்களின் இடத்தை கம்யூட்டர்கள் முழுமையாக  நிரப்பிவிடுமா ? எனும் விவாதத்துக்குள் நாம்
இப்போதைக்குப் போகத் தேவையில்லை. ஆனால், இயந்திரங்களால் செய்ய முடியாத வேலை என்று ஒன்று  இருந்தால்  அதைத் தேடிக் கொள்வது உசிதம்.