Sunday, March 17, 2019

கதைச்சொல்லி

இந்தமுறை புத்தகக் கண்காட்சியில் தேடிப்பிடித்து  தமிழ் சிறுவர் கதைப்புத்தகங்களை வாங்கி வந்திருக்கிறேன். பெரும்பாலனவை
குழந்தைகள் விரும்பும் வகையில் விலங்குகளைக் கொண்டு சொல்லப்படும் நீதிக்கதைகள், குறும்பான நகைச்சுவை கதைகள்.  தெனாலிராமன், புராண, காப்பியக் கதைகளைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் நம்மிடம் ஆங்கிலத்தில் இருப்பது போல வெரைட்டி இல்லை எனும் குறை கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாக  இன்று அறிவியல் புனைகதைகளுக்கான தேவை இருக்கிறது.

சொல்வளம் அதிகமில்லாத அமெரிக்க பிள்ளைகளுக்கு  தமிழ்புத்தகங்கள் வாங்குவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. முதன்மையாக கதை நீண்ட வாக்கியங்களில் இல்லாமல் மிகவும் சுருக்கமாக எளிமையான மொழி நடையில் இருக்கவேண்டும். அடுத்தது சொற்களின் பயன்பாடு - பிள்ளைகளுக்கு பரிட்சியமில்லாத அந்நியச் சொற்களை
அறிமுகப்படுத்துவதிலும் சிரமிருக்கிறது. அப்படியே புதிய சொற்களை அறிமுகம் செய்வதாக இருந்தால் அதற்கு துணை செய்வதுபோல ஒவியங்கள் அமைந்திருந்தால் வாசிப்பு எளிமையாகும். உதாரணமாக பாம்பு புற்றில் இருந்து தலை தூக்கியது என கதையில் எழுதினால்,  கூடவே கண்டிப்பாக மண் புற்றின் படத்தைப்  போட்டுவிடுங்கள். புற்றுக்கு நாங்கள் விளக்கம் சொல்ல கூகுளைத் தேடவேண்டியிருக்காது.  அதுபோல அந்தக் கதை ஒரு நீதிக்கதையாக இருந்தாலும் குழந்தைகளின் உளவியலை அறிந்து அவர்களை ஏதோ ஒருவிதத்தில் தொடர்புபடுத்தி பார்க்கும் வகையில் இருப்பதும் நல்லது.  பல தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களையும்
பார்க்கமுடிந்தது. அதுபோல சில புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டும் அடுத்தடுத்தாக சேர்ந்தும் கூட வந்திருப்பதைப் பார்த்தேன்.

இன்னொரு முக்கியமான அம்சம் அத்தொகுப்பின் அட்டைப்பட ஓவியம்
கவனத்தைக் கவரும் வகையிலும் அதில் பாவிக்கப்பட்டுள்ள வர்ணங்களும் ஓவியங்களும் கற்பனையைத் தூண்டும் வகையிலும் இருக்கவேண்டும்.
ஓவியத்தோடு கதையை வாசிக்கும் பிள்ளைகளுக்கு அவை  மன எழுச்சியை தரவேண்டும்.

இனி இந்தப் புத்தகங்களை வார இறுதியில் தமிழ்வகுப்புகளில் வாசிக்கத் தொடங்க வேண்டும். வழக்கம்போல் ஆசிரியர் கதைகளை வாசித்து காட்டுவதை விடுத்து பிள்ளைகள் தன்னிச்சையாக கதையை வாசிக்கவும், அதை மற்றவர்களிடம் பகிரும் பழக்கத்தையும் ஊக்குவிக்கவும் ஒரு யோசனை செய்திருக்கிறேன்.

அதன்படி இனி வரும் நாட்களில்  ஒவ்வொரு வாரமும் பிள்ளைகளில் ஒருவரைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம். அப்படித் தேர்வு
செய்யப்பட்டவரே அடுத்த வாரத்தின்  "கதைச்சொல்லி". அவரிடம் மேற்ச்சொன்ன ஓர் எளிய தமிழ் சிறுவர் சிறுகதைப் புத்தகத்தைக் கொடுத்துவிடலாம்.   அவர் அந்தக் கதையை வீட்டில் வாசித்து முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டு வரும் வாரத்தில் மற்ற பிள்ளைகளுடன் பகிரட்டும்.

இப்படிச் செய்வதால் பிள்ளைகளுக்கு தமிழில் சொந்தமாக வாசிக்கும்
பழக்கம் மேம்படுவதுடன் மற்றவர்களுக்கு ஏற்ற இறக்கத்தோடு படித்துக் காட்டுவதால் குழுவுடன் புரிந்துணர்வு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக
மற்றவர்களுடைய கைத்தட்டல்களும், பாராட்டுகளும் அவர்களை உற்சாகப்படுத்தி தமிழ் ஆர்வத்தை அதிகப்படுத்தும் என்றே நினைக்கிறேன்.
முயற்சி செய்து பார்ப்போம்.


Friday, March 15, 2019

வனநாயகன் குறித்து-10

"வனநாயகன்(மலேசிய நாட்கள்)" குறித்து  வாசகர்  சிங்கப்பூரில் இருந்து
ஹரி  குட்ரீட்ஸ் (good reads) தளத்தில் பகிர்ந்த குறுந்தகவல். 

இதுபோல வனநாயகன் குறித்து எழுதப்படும் பல குறிப்புகள் பொதுவாக தமிழ் வாசகர்கள் மெளனமானவர்கள் என்பதைப் பொய்யாக்குகிறது.
நன்றி ஹரி  !!

/////

ரெண்டு விஷயங்கள் இந்த புதினத்தைப் படிக்க தூண்டியது 

1. It company 2. வெளிநாட்டில் வாழும் இந்தியன். 

எனது ஆரம்பகல Singapore அனுபவத்தை மற்றும் kl/genting வருடி சென்றது.

ஒரு நல்ல திர்ல்லராகத்  தொடங்கி சற்று சதாரணமாக முடிந்தது.


/////

புத்தகத்தை இணையத்தில் கிழக்கு பதிப்பகத்தில் வாங்க:

Wednesday, March 13, 2019

எத்தனை சுஜாதாக்கள் ?

பிப்ரவரி-27,2019 எழுத்தாளர் சுஜாதா நினைவு நாளன்று முகநூலில் பகிர்ந்தது.

இன்று தமிழில் கவிதை, சிறுகதை, புனைவு எழுதுபவர்களை ஒப்பிடுகையில் தொழில்நுட்பம், விஞ்ஞானம் குறித்து எழுதுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நாம்  தமிழில் விஞ்ஞானம் என்றால் எழுத்தாளர் சுஜாதாவோடு நின்றுவிடுகிறோம். 


ஆனால், தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இன்றோடு  சுஜாதாமறைந்து முழுதாக 11 ஆண்டுகளாகின்றன. இந்தப் பதினோரு ஆண்டுகளில் காலியான சுஜாதாவின் இடத்தை யாரும் முழுமையாக நிரப்பியதாக தெரியவில்லை. சொல்லப்போனால் இன்றைய தொழில்நுட்ப உலகில் நமக்கு பல சுஜாதாக்கள் தேவைப்படுகிறார்கள்.

அந்தவகையில் சுஜாதா கையெடுத்த பணியை இன்று இடையறாது செய்து கொண்டிருப்பவர்களில் ஒருவரைச் சுட்டிக் காட்ட  வேண்டுமானால் கனடா நண்பர் ரவி நடராஜன் அவர்களைத் துணிந்து கைகாட்டலாம்.

தமிழில் தொழில்நுட்பம் ,விஞ்ஞானக் கட்டுரைகள் என இடைவிடாமல் தொடர்ந்து எழுதி வரும் ரவி நடராஜன்,  சென்னை ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றவர், தொழில்முறையில் கணினி மென்பொருள் துறையில் பல்லாண்டுகளாக பணிபுரிகிறார். கனடாவில் வசிக்கும் ரவி, ‘சொல்வனம்’ பத்திரிக்கையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து 
கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 

தற்போது இந்தத் தகவல்கள் மேலும் பரந்த வாசகர் வட்டத்தைச்  சென்றடைய வேண்டும் (தமிழ் தெரிந்த, ஆனால் படிக்க முடியாதவர்கள்)  எனும் சீரிய  எண்ணத்துடன்,  
புதிய முயற்சியாக சமீபத்தில் "தமிழ் நுட்பம்" எனும் யூடியூப் சேனல் தொடங்கியிருக்கிறார். வாழ்த்துகள் ரவி சார்!!.


செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அனைவருக்கும் எளிதில் புரியும் வரையில் அவர்  கடந்த 10 வாரங்களாக வழங்கிய காணொளிகளை நண்பர்கள் உடனடியாக பயன்படுத்திக் கொள்ளலாம். முடிந்தால் தெரிந்தவர்களுக்கும் இதைப் பகிரலாம்.

ரவி நடராஜன் அவர்களின் யூடியூப் சேனல் முகவரி:  https://www.youtube.com/channel/UC-2y8NFP6EdW9etOI6lmOlQ

அவருடைய முகநூல்: https://www.facebook.com/ravi.natarajan.50

Monday, March 11, 2019

தமிழ் எழுத்துலகும் குழுக்களும்

பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம்,  முற்போக்கு இலக்கிய இயக்கம், திராவிட எழுத்தாளர் குழுமம் என்றெல்லாம் பிரிந்து இங்கே தனித்தனிக் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் குழுக்களுக்கென சிற்றிதழ்கள், தனித் தனியான முறைமைகள்,
வாசகர் வட்டங்கள் உண்டு. அவர்கள் தங்களுக்குள்
அடிக்கடி உரசிக் கொளவார்கள், வேண்டியவர்களை உயர்த்திப்பிடிப்பார்கள்,
சிலரைக் கைதூக்கி விடுவார்கள், தங்களுக்குள் விருது கொடுத்துக் கொள்வார்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள்
தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.

ஆனால்,  மேலே சொன்ன எந்தப்பிரிவிலும் சாராத படைப்பாளர் கூட்டம் ஒன்று தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இணையம் பெருத்து சமூகவளைதளங்களின் கைஓங்கியிருக்கும் இந்த நாட்களில் அவர்களின்
எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாக நினைக்கிறேன்.
அரசியல் பின்புலம் எதுவுமின்றி  தங்கள் அனுபவத்தோடு தமிழையும், படைப்பாற்றலையும் மட்டும் நம்பி அவர்கள்  வாசகர்களை நேரடியாக
சந்திக்கிறார்கள். "நான் இலக்கியவாதிகளுக்காக எழுதவில்லை , வாசகர்களுக்காக எழுதுகிறேன்" எனும் கோசத்துடன் களமிரங்கி இருக்கும் இவர்களில் பலருடைய எழுத்து கவனிக்கத்தக்கது.

இதில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் படைப்புகளைத் தாங்களே பதிப்பித்து அச்சில் கொண்டுவருகிறார்கள். சிலர் நேரடியாக அமெசானின் கிண்டில் போன்ற மின்னணு ஊடகங்களை நாடுகிறார்கள். படைப்புகளை வெளியிட்ட கையோடு அதற்கான மார்கெட்டிங் வேலையையும் கையில் எடுத்துக்கொள்ளும் இவர்கள் சமூக ஊடகங்களில் தொய்வின்றி தீவிரமாக
செயல்படுகிறார்கள்.

இன்டிபெண்டன்ட் ஆத்தர்ஸ் (Independent Authors ) என ஆங்கிலத்தில் சொல்வதுபோல எந்தக் குழுவையும் சாராமல் சுயாதீனமாக செயல்படும்
இவர்களுடைய எண்ணிக்கை  அதிகரித்து வருவதை ஆரோக்கியமானதாக நினைக்கிறேன். இவர்கள் இலக்கிய வட்டங்களின்
மைய அரசியலில் இருந்து சற்று விலகி இருந்தாலும் இவர்களுடைய படைப்புகளை நாம் புறந்தள்ளவேண்டியதில்லை.  மாறாக
இவர்களுடைய எண்ணிக்கை வரும்நாட்களில் இன்னமும் கணிசமாக உயர்ந்து தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுப்பார்கள் என நம்புகிறேன்.

Thursday, March 7, 2019

அந்த ஆறு நாட்கள் - டர்பனில் இருந்து

தென்ஆப்பிரிக்காவிலிருந்து  இன்று ஒரு வாசகர்  கடிதம் வந்திருக்கிறது. ஆமாம், டர்பனில் இருந்து.  படைப்புகளைக் கிண்டிலில் வெளியிடுவதால் உலகம் முழுவதுமுள்ள வாசகர்களை எளிதாக தொட்டு விட முடிகிறது.
"அந்த ஆறு நாட்கள்" -க்கு வந்த முதல் வாசகர் கடிதத்தை நண்பர்களுடன் பகிர்வது மகிழ்ச்சி. நன்றி பிரபு.

****************
அன்புள்ள ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு வணக்கம். 
அந்த ஆறு நாட்கள் – கிண்டிலில் வாசித்து முடித்தப் பின் தங்களுக்கு எழுதுவது. நாவல் எனக்கு பெரிதும் பிடித்திருக்கிறது. மீண்டும் ஒரு
சிறப்பான, சுவராசியமான படைப்புக்கு எனது வாழ்த்துகள்  மற்றும் பாராட்டுக்கள்.

பேராபத்துக்கான பெரும்  அழிவைத் தரக்கூடிய ஹரிக்கேன் இர்மாவிடம்

இருந்து தொடங்கும் இந்த நாவலில் குடும்பத் தலைவனான பரணியின்
மனஓட்டத்தை, அமெரிக்கச் சூழலில்  மிக நேர்த்தியாக நல்ல மொழியில்
வாசகனுக்கு கடத்தியிருக்கிறீர்கள். 

சவால்களே ஒரு நல்ல தலைவனை மக்களுக்கு அடையாளம் காட்டும்

என்பது போல பேராபத்து நெருங்கிவரும்  நெருக்கடியான சமயத்தில்
பரணியின் குடும்பம் அவனை நெருக்கமான  குடும்பத்தலைவனாக
உணர்வது அருமை.  அதுபோல இந்த வாசிப்பின் வழியாக ஒரு குடும்பத் தலைவனாக  நானே என்னை கண்ணாடியில் சில நொடிகளேனும்
உற்றுப் பார்க்கவைத்த படைப்பு இது.

இதுவரை தமிழ் நாவல்கள் பேசாத பல நுட்பமான விஷயத்தைச் சொல்லியிருக்கும் வகையிலும் உங்கள் நாவல்  முக்கியமானதாக படுகிறது. வாழ்த்துகள் !



டர்பனில் இருந்து

பிரபு

****************

அமேசான் இணையதளத்தில்.

USA நண்பர்களுக்கு கிண்டில் முகவரி-
https://www.amazon.com/dp/B07NBDM78S/ref=sr_1_2?ie=UTF8...

இந்திய முகவரி -
https://www.amazon.in/dp/B07NBDM78S/ref=sr_1_1?ie=UTF8...







Friday, March 1, 2019

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் ?

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும், சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கு மனிதன் என்றெல்லாம் பொதுவாக சொன்னாலும் நமது சமூகம் நகைச்சுவை விசயத்தில் கொஞ்சம் பலவீனமானது என்றே நினைக்கிறேன். அதுவும் குறிப்பாக சென்னை போன்ற அழுத்தமிகுந்த, பரபரப்பான பெருநகரங்களில் நகைச்சுவை என்பது காற்றில் கூட இல்லை என்பதைக்  கவனித்திருக்கிறேன்.

மற்ற இடங்களில் எப்படியோ நகரங்களின் கடைகள், ரயில் நிலையங்கள் போன்ற முன் பின் அறிமுகமில்லாதவர்களைச் சந்திக்கும் பொது இடங்களில் சிரிப்பு என்பதை மருந்துக்குக் கூட பார்க்க முடிவதில்லை. பெரும்பாலும் இறுக்கமான முகங்களே. சமயங்களில் நகைச்சுவை உணர்வற்ற இருண்டகாலத்தில் வாழ்கிறோமோ என்றுகூட நினைப்பதுண்டு.

அப்படியே அரிதாக யாரேனும் தப்பித்தவறி நகைச்சுவையாக பேசினாலும் அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்களே இங்கு அதிகம்.
இங்கே நகைச்சுவை எனச் சொல்வது வடிவேலு போல ஏற்ற இறக்கத்துடன் பேசி சிரிக்க வைக்கும் முயற்சியை அல்ல. மாறாக இயல்பான உரைநடையில் வாய்ப்பும் சூழலும் கிடைத்தால் மெல்லிய பகடியோடு பேசுவது தவறில்லை. உங்களால் முடியாவிட்டாலும் பரவாயில்லை அப்படி வேறு யாரேனும் பேசினால், பதிலுக்கு சிரிக்காவிட்டாலும் கண்டிப்பாக முறைக்காதீர்கள். சரி நாம் என்ன செய்யலாம் எனக் கேட்பது காதில் விழுகிறது. :)

அடுத்த முறை பேருந்தில் "2 ரூபாய் சில்லறை இல்ல , 5 ரூபாய இருக்கு சார்" எனும் நடத்துனரிடம் சிரித்தபடி "அது எனக்கு பிரச்சனை இல்லை, குடுத்தா நான் வாங்கிக்க ரெடி" எனச் சொல்லி சூழலைக் கலகலப்பூட்ட முயற்சி செய்யலாம்.

இல்லை ஒரு நகைக்கடைக்கு போனால்,  "மேடம் நீங்க எத்தனை சவரன்ல நெக்லஸ் பாக்குறீங்க எனும் விற்பனைப் பிரதிநிதியிடம், 10 பவுன்ல பாக்க ஆசைதான், ஆனால் இப்ப 3 பவுன்லேயே காட்டுங்க பார்ப்போம்" என சிரித்தபடி சொல்லிப் பாருங்கள். அவரும் பதிலுக்கு சிரித்தபடி உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் உங்களுக்கு நகைகளை எடுத்துக்காட்ட வாய்ப்புள்ளது.


இப்படி பொது இடங்களில் நகைச்சுவையாக பேசுபவர்களைப் பற்றிய நமது மதிப்பீடுகளும் வேறாக இருப்பது துரதிஷ்டமே.




Tuesday, February 26, 2019

அந்த ஆறு நாட்கள் குறித்து - உணர்ச்சிப் போராட்டமான கதை

வாசக நண்பர் கோமகள் குமுதா முகநூலில் "அந்த ஆறு நாட்கள்" குறித்து எழுதிய கதை விமர்சனம். நன்றி குமுதா  !!

******************
சகோதரர் ஆரூர் பாஸ்கரின் "அந்த ஆறு நாட்கள்" நாவலை அமெசான் கிண்டிலில் நேற்று படித்தேன்.முதலில் கதையின் தலைப்பை பார்த்தால் என்ன அந்த ஆறு நாட்கள் பாக்யராஜ் படம் பெயர் மாதிரி இருக்கே அப்படின்னு எனக்கு மனதில் தோன்றியது. ஆனால் கதையை படித்து முடித்ததும் எவ்வளவு பொருத்தமான நாவலின் பெயர் என்று மனதில் எண்ணி வியந்தேன். 

சகோதரர் ஆரூர் பாஸ்கர் அவர்கள் இந்த கதையை எழுதியிருக்கும் விதம் எனக்கு பிரமிப்பூட்டுகிறது. கதை சொல்லும் லாவகத்தில் நானே அங்கே ஃபுளோரிடாவில் கதையின் நாயகன் பரணி அவன் மனைவி தாரிணி குழந்தைகள், அம்மு சிறியவள் கவி, அந்தக் கார், அவர்கள் வீடு இப்படி நான் அவர்களோடு கூடவே இருப்பதாக தோன்றியது. அவர்கள் முகங்களிலும் மனதிலும் ஏற்பட்ட அந்த மனநிலை படபடப்பு பயம் எல்லாவற்றையும் நானும் உடனிருந்து அனுபவிப்பதாக உணர்ந்தேன்.அதனால் அடுத்தடுத்து கதையைப் படிக்கும் போது ஐயோ பாவம் பரணி ஒரு குடும்பத் தலைவனாக தன் பயத்தை யாரிடமும் கூற முடியாமல் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உழல்வதை கண்ணால் காண்பது போலவே நான் உணர்ந்தது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

ஒரு கதையை படிக்கும் போது சுவாரசியமாக கதையை அலுப்புத் தட்டாமல் கொண்டு போவதே ஒரு எழுத்தாளருக்கு மிகவும் சவாலான விஷயம். இதில் கதையின் கால அளவு ஆறு நாட்கள் என்று வரையறுத்து நொடிக்கு நொடி நிமிடத்திற்கு நிமிடம் மணிக்கு மணி இப்படி வாசிப்பவரை இருக்கையின் நுனியில் அமர்த்தி இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பது போல த்ரில்லிங்கா செம ஸ்பீடா கதை எழுதுவது பெரிய வித்தை.

ஒரு பயங்கரமான சூறாவளி இர்மா தன் இருப்பிடத்தை தாக்கும் பொழுது ஒரு சாதாரணமான குடும்பத் தலைவன் தன் வேலையையும் குடும்பத்தையும் வீட்டையும் எப்படி காப்பாற்றுவது என்று யோசித்து யோசித்து பரணி எடுக்கும் முடிவுகள் என அற்புதமான கதையமைப்பு. உணர்ச்சிப் போராட்டமான கதை.
நான் இதுவரை எந்த நாவலைப் படித்து முடித்ததும் இப்படி உணர்ந்ததில்லை. ஆசிரியரின் எழுத்தின் நடை அந்த இர்மா புயலின் வேகத்தையும் விஞ்சி என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

சூறாவளியின் போது மக்களின் மனநிலை, அமெரிக்காவின் நில அமைப்பு, அரசியல், கொள்கை மாற்றங்கள் என கூர்மையாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து செவ்வனே படிப்பவர்கள் ரசிக்கும் வண்ணம் எழுதி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நல்ல தொய்வில்லாத நடை. சொல்வளம்.தடுமாற்றமில்லாத கதை நகர்வு.பொருத்தமான பாத்திரப் படைப்பு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அற்புதமான படைப்பு. வாசித்த உடன் இப்பொழுதே ஃபுளோரிடாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. நண்பர்கள் அனைவரும் அமெஸான் கிண்டிலில் ஆன்லைன் ஆர்டர் செய்து வாங்கி தவறாமல் வாசித்து உங்கள் விமர்சனங்களை தெரிவிக்கவும்.

USA நண்பர்களுக்கு கிண்டில் முகவரி- 

https://www.amazon.com/dp/B07NBDM78S/ref=sr_1_2?ie=UTF8...

இந்திய முகவரி - https://www.amazon.in/dp/B07NBDM78S/ref=sr_1_1?ie=UTF8...

****************