Sunday, January 10, 2016

ஆம்னிபஸ் - தெரியுமா?

நண்பர்களுக்கு 2016ம் வருட புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லும் அதே நேரத்தில் 2015ஐயும் நான் திரும்பி பார்கிறேன். கடந்த ஆண்டு நான் செய்த ஓரு நல்ல விஷயம் என்று பார்த்தால் அது புத்தக வாசிப்பு.

இணையத்தில் எந்தவித இலக்கும்  இல்லாமல் முகநூல், டிவிட்டர், செய்தித்தாள் என மேயாமல்  செய்த உருப்படியான விஷயம் அது. உண்மையாகவே நிறைய நல்ல புத்தகங்களைத் தேடி வாசித்திருக்கிறேன். அதில் பெரும்பாலானவை தமிழ் புத்தகங்கள்.

முக்கியமாக வாசிப்பதோடு நிற்காமல் வாசித்த புத்தகங்களை விமர்சித்தும்  எழுதியிருக்கிறேன். அதை விமர்சனம் என்பதை விட கருத்துன்னு சொன்னால் சரியாக இருக்கும். அவற்றில் சில எனது வலைதளத்தைத் தாண்டி  இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளது.

நான் கடந்த வருடத்தில் (2015) நான் எழுதிய விமர்சனங்களின் தொகுப்பு இங்கே.

1) காற்றின் கையெழுத்து - கவிஞர் பழநிபாரதி
http://aarurbass.blogspot.com/2015/02/blog-post_19.html

2) தென்றல் வந்து தீண்டும்போது... (அமேரிக்காவிலிருந்து வெளியாகும் தென்றல் மாத இதழ் பற்றி)
http://aarurbass.blogspot.com/2015/03/blog-post_23.html

3) சிறகு முளைத்த விரல்கள் - ஆருர் புதியவன்
http://aarurbass.blogspot.com/2015/05/blog-post_29.html

4) லென்ஸ் வழியான வாழ்க்கை - ஆனி லெய்போவிட்ச்
http://aarurbass.blogspot.com/2015/05/blog-post.html

5) சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்
http://aarurbass.blogspot.com/2015/07/blog-post_23.html

6) சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
http://aarurbass.blogspot.com/2015/08/blog-post.html

7)சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்
http://aarurbass.blogspot.com/2015/09/blog-post_20.html

8)  Tuesdays with Morrie - Mitch Albom
http://aarurbass.blogspot.com/2015/09/blog-post.html

    புத்தக வாசிப்பைத் தாண்டி அதன் விமர்சனத்துக்கான அவசியம் என்ன? என்று சிலர் கேட்பது புரிந்துக்கொள்ளக் கூடியதே.  ஓரு சினிமாவை பார்த்தபின் குறை நிறைகளை அல்லது பிடித்த விஷயங்களை நண்பர்களிடம் விவாதிக்கிறோம் இல்லையா அது போலதான் இதுவும்.

    அதையும் தாண்டி, எந்த ஓரு படைப்பாளியும் தனது படைப்புகளைச் சமூகத்தின் முன் வைத்து அதற்கான ஓரு விமர்சனத்தையும், அங்கீகாரத்தையும் கண்டிப்பாக எதிர்பார்கிறான். 

    அதனால் ஓரு வாசகனாக நமது கருத்து அல்லது விமர்சனம் சக வாசகனைத் தாண்டி  அந்த படைப்பாளியையும் சென்று சேர்கிறது.

     நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ புத்தகங்களைக் கடந்து வருகிறோம். ஆனால், அதை விமர்சித்து எழுதுபவர்கள் நம்மில் மிகக் குறைவு. உருப்படியாக எழுதுபவர்கள் அதிலும் குறைவு. அப்படிபட்ட தரமான விமர்சனங்களை எங்கே படிக்கலாம்?.

     இந்தத் தருணத்தில் ஆம்னிபஸ் தளம் ஓரு சிறிய அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்.

     தினம் ஒரு தரமான புத்தக அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2012 வாக்கில் தொடங்கபட்டு இயங்கி வருவது ஆம்னிபஸ் தளம். அதன் இணைப்பு இங்கே.

http://omnibus.sasariri.com/

    புது வெளிச்சத்தின் சிறு கீற்றாவது பாய்ச்சக்கூடிய நூல் அறிமுகங்கள் செய்ய முயற்சித்து வருவதாக அவர்கள் சொல்கிறார்கள்.
 
    ஆம்னிபஸ் தளம் பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்து அப்படியே.

//"இங்குள்ள அச்சு ஊடகங்கள் தீவிர வாசிப்பு என எதற்குமே இடமளிக்காத சூழலில் இணையம் வழியாகவே நல்ல நூல்களை நாம் அடையாளம் காணமுடியும். ஆம்னிபஸ் என்னும் இணையதளம் அவ்வகையில் மிக முக்கியமானது. அதில் மட்டுமே இன்று தொடர்ச்சியாக நூல் மதிப்புரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன"//

     ஆம்னிபஸ் தளம் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் அதைப் பார்வையிடலாம்.  எழுதும் ஆர்வமிருப்பவர்கள் உங்கள் நூல் விமர்சனங்களுடன் ( கொஞ்சம் விரிவாக 500 சொற்களில்) அவர்களை அணுகலாம்.

     என்னிடம் இந்த வருடமும் ஆம்னிபஸ் தளத்திலிருந்து  விமர்சனங்களைக் கேட்டிருக்கிறார்கள். முயற்சிப்போம்.

     2015 தாண்டி மேலும் பல புத்தகங்களை வாசித்து 2106லும் எழுதும் ஆர்வமிருக்கிறது. நான் ரெடி அப்ப நீங்க? ;)

Thursday, January 7, 2016

தமிழ்மணம் நிலைக்குமா?

சில மாதங்களாகவே ஓரு கேள்வியை பதிவர்கள் பலர் என்னிடம் வேவ்வேறு மாதிரி கேட்டுக் கொண்டிருந்தனர். அனைவருக்கும் பயன்படுவது போல் அதை பற்றி எழுதுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

கேள்வி என்ன நம்மிடம் பெரிதாக கேட்டுவிட முடியும். ஓன்னுமில்லை.   சமீபகாலங்களில் பெரும்பாலனவர்கள் முகநூல் பக்கம் தாவுகிறார்களே?, பிளாகரில் நடமாட்டம் குறைகிறதே? தமிழ்மணம் நிலைக்குமா? என்பதுதான் கேள்வி.


அது உண்மைதான். மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை. பிளாகரில் இருந்து முகநூலுக்கு தாவல்கள் அதிகரித்துள்ளன. அப்படித் தாவ பல காரணங்கள் இருக்கின்றன. அதை விரிவாக அன்பர் முரளிகூட அலசி இருக்கின்றனர் இணைப்பு கீழே.

http://www.tnmurali.com/2016/01/blogging-facebook-comparison.html

முகநூலும், பிளாகரும் வேறு வேறு வகையான பார்வையாளர்களைக் கருத்தில் கொண்டது. சுருக்கமாக எனது கருத்துகளை சொல்லிவிடுகிறேன்.

பிளாகர் போலின்றி முகநூல் கவர்சிகரமானதுதான். உடனடி கருத்துகள், பகிர்தல்,விருப்பமிடுதல், புகைபடங்கள்,காணோளி,மொபைல் பயன்பாடு இப்படி பல விஷயங்கள். இந்த தாவல் கண்டிப்பாக தடுக்க முடியாதது தான்.

ஆனால் பிளாகை மொபைல் போனில் பயன்படுத்த இயலாது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அது முற்றிலும் உண்மையில்லை. ஐஃபோன் மற்றும் அண்டிராடியில் blogger app ஐ நீங்கள்  தரவிரக்கம் செய்ய இயலும். இந்த செயலியில் நீங்கள் பிளாக் எழுதலாம், மற்றவர்களுடைதையும் பார்கலாம். இந்த செயலியை googleலே தருகிறது. நீங்களும் முயன்று பாருங்கள்.


பிளாகர் தேய அல்லது தேய்வது போல தெரிய இன்னோரு முக்கிய காரணம் இருக்கிறது. அது நாமெல்லாம் மறந்துவிட்ட ஒன்று திரைமணம்.

ஆம், திரைமணம் வந்தபின்பு சினிமா பதிவர்களும், பிரியர்களும் தமிழ்மணத்தை கண்டு கொள்வதில்லை. அதனாலேயே சமீபகாலங்களில் மற்ற பதிவுகளுக்கு பார்வைகள் குறைந்துள்ளது.

இப்போது தமிழ் மணத்துக்கு வருபவர்கள் கொஞ்சம் சீரியஸ் பதிவர்களும் அதற்கான வாசகர்களும் தான். அவர்களும் நண்பர்களிடம் உள்ள புரிதலில் தான் எழுதுகிறார்கள். அதாவது மாற்றி மாற்றி கருத்திடுவது எனும் நிலைதான். அதனால், புதிதாக வருபவர்களின் பாடு திண்டாட்டம் தான். சில நாட்களில் தாக்கு பிடிக்காமல் அவர்களும் முகநூல் பக்கம் போக வாய்ப்புகள் அதிகம். எனவே புதியவர்களை ஊக்குவிப்போம்.


அப்படி என்றால் பிளாகரின் எதிர் காலம் என்ன? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போம்.

எழுத்தில் எப்போதும் இரு வகை உண்டு.  ஒன்று நிறுத்தி நிதானமாக எழுதப்படுவது. இதில் அடர்த்தி அதிகம்,  இலக்கியத் தரமானது. படிக்க பொறுமையும் நிதானமும் வேண்டும்.
ஜெயமோகன்,சாரு போன்றவர்களுக்கானது. இவர்கள் இன்னமும் பிளாக் அல்லது வலைதளத்தில் தான் இருக்கிறார்கள். அப்படித்தான் எதிர்காலங்களிலும் தொடர்வார்கள். மாற்றமில்லை.   இதற்கு வாசகர்கள் குறைவு. ஆனால் தேடிப் போய் அதை படிப்பார்கள்.

இரண்டாவது பாப்புலர் அல்லது ஜனரஜ்சக எழுத்து - எளிமையான நடை. அனைவருக்குமானது. ஆனந்தவிகடன், குமுதம் வகையரா.  இந்த எழுத்துதான் சில காரணங்களுக்காக முகநூலிலும்,பிளாகிலும் பிரிந்து கிடக்கிறது.  அதற்கான காரணங்கள் வசதி, அங்கிகாரத்தை தாண்டியது என நினைக்கிறேன்.

உதாரணமாக- 

நண்பர் செந்தில் தற்போது  நீர் மேலாண்மை பற்றிய பதிவு ஓன்று எழுதிக்கொண்டிருக்கிறார்.

http://senthilmsp.blogspot.com/2015/12/8.html

இதுபோல கொஞ்சமேனும் ஆழ்ந்து படித்துப் புரிந்துக் கொள்ளவேண்டியதை கண்டிப்பாக வலைபதிவில் மட்டுமே விளக்கமான எழுத்தில் சொல்ல இயலும்.

இன்னோரு உதாரணம். முகநூலில் ஓருவர் ஜல்லிகட்டு சம்பந்தமாக இந்த புகைபடத்தை பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவை நூற்றுக்கணக்காணவர்கள் விரும்பியிருக்கிறார்கள், 35 பேர் மற்றவர்களிடம்  பகிர்ந்திருக்கிறார்கள். இவையெல்லாம்
உடனடியாக சில நொடிகளில் நடந்து, நூற்றுக்கணக்கானவர்களின் கண்களைத் தொட்டிருக்கிறது. அதே முகநூலில் பிரபலமாகாத ஓருவர் சீரியசான விஷயங்களை எழுதினால் எத்தனை பேர் வாசிப்பார்கள் என்பது சந்தேகமே.

 'நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்' என்றுச் சொல்வது போல செய்தி அல்லது கருத்தின் உள்ளடக்கமே நமது ஊடகத்தைத் தீர்மானிக்கும் என நினைக்கிறேன்.  மேலே சொன்ன இன்ன பிற காரணங்களுக்காக பிளாகும் தமிழ்மணமும் நிலைக்கும்.


எந்த ஓரு படைப்பாளியும் தனது படைப்பிற்கான நியாயமான அங்கிகாரத்தை எதிர்பார்பது தவறோன்றுமில்லை.  நாமும் மனிதர்கள் தானே.? நான்கு பேர் நாம் எழுதுவதை படித்து அதை பாரட்டவோ இல்லாவிட்டால் திட்டவாவது செய்யவேண்டாமா ? சொல்லுங்கள்.

 மாற்றத்துக்கு தகுந்தாற்போல, உங்கள் வாசகர்களுக்கு ஏற்றதோரு ஊடகத்தை தேர்ந்தேடுங்கள் என்பதே எனது கருத்து.

உங்கள் கருத்துகளையும் பகிருங்கள். நன்றி!

Monday, January 4, 2016

சிறு சிறுகதைகள் - சுஜாதா

'ஆம்னிபஸ்'ஸில் சுஜாதாவின் 'சிறு சிறுகதைகள்'  புத்தகம் பற்றிய எனது விமர்சனம்.
 
சமீபத்தில் சுஜாதாவின் 'சிறு சிறுகதைகள்'  நூலை வாசித்தேன். சுஜாதா 2003வாக்கில்
குமுதத்தில் தொடராக எழுதியதன் தொகுப்பு இது.  வெளியிட்டவர்கள் விசா பப்ளிகேஷன்ஸ். புத்தகம் கூட சிறியதுதான் 96 பக்கங்கள். எளிதான, விரைவான வாசிப்பனுபவம்.

சுஜாதா பல சந்தர்பங்களில் தனக்கும் சிறுகதைகளுக்கும் உள்ள நெருக்கத்தை ஊடகங்களில் பதிவுசெய்ததைப் படித்தும் பார்த்தும் இருக்கிறேன். இப்படி சிறுகதை  சுஜாதாவின் 'ஹோம் பிட்ச்'  என்றால் சும்மா விடுவாரா என்ன ?, அழகான கதைகள், அருமையான விளக்கங்கள். சும்மா வெளுத்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் வாயிலாக சின்னஞ் சிறு கதைகளின் பல வடிவங்களை எளிமையாகவும் அதே சமயத்தில் விளக்கமாகவும் சொல்லியிருக்கிறார். சிறுகதைகளில் இவ்வளவு பரிமாணங்களா? என்று ஆச்சரியப்படும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கிறது.

இந்தச் சிறுகதைகளைக் குறைந்தது இரண்டு வார்த்தைகளில் தொடங்கிச் சில நூறு வார்த்தைகளில் முடித்திருக்கிறார். அப்படி வெவ்வேறு கட்டுமானங்களில் செல்லப்படும் கதைகளுக்கு வேறு வேறு பெயர்கள். இரண்டு வரியில் கதையா? ஆச்சர்யமாக இருக்கிறதில்லையா.? இதோ ஓரு கதையைப் பார்ப்போமே.

தலைப்பு:  ஆபிஸில் எத்தனை ஆம்பிளைங்க?
கதை: முதலிரவில் கேள்வி

இங்கே சூட்சுமமே கதையின் தலைப்பு என்பதைப் படித்தால் அறிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் முதல் மற்றும் இரவு சேர்ந்து முதலிரவு ஆனதும் தமிழின் சிறப்பு.

சி.சி.களின் (அதாங்க சிறு சிறுகதைகள்)  வடிவத்தை அல்லது விதிகளை முதலில் சொல்லி அதை ஓரிரு கதைகளில் தானே முயற்சி செய்து வாசகர்களுக்கு பகிர்ந்திருக்கிறார். பிறகு அதை வாசகர்களை எழுத ஊக்குவித்து ஓரு போட்டியாக அறிவித்துள்ளார்.  பின்பு அந்த போட்டியில் வென்றக் கதைகளை வெளியிட்டு பரிசுகளையும் வழங்கியிருக்கிறார்.வாசகர்களும் தங்கள் பங்கிற்கு எழுதிக் குவித்திருக்கின்றனர்.


இது போல Short Fiction, Sudden Fiction (உடனடிக் கதை),ஹைகா,ஹைபுன்  என பலவற்றை அறிமுகம் செய்கிறார். 'ஹைகா' என்பது ஓரு படத்துக்கான ஹைக்கூ. 'ஹைபுன்' என்பது ஓரு காட்சியை விவரித்து இறுதியில் ஓரு ஹைக்கூ வைப்பது. அவர் அறிமுகம் செய்த 55 Fictionல் 55 வார்த்தைக்குள் கதை சொல்லவேண்டுமாம்.

55- வார்த்தைகளில் கதை? பார்ப்போமே.

'முட்டாள் கூமூட்டை' என்று டைரக்டர்  அசிஸ்டண்டைத் திட்டினார். 'சாவுகிராக்கி ஓரு சின்ன கன்டியூனிட்டி ப்ராப் பார்க்கத் தெரியலை. இப்ப கலர்த் தண்ணிக்கு பதிலா நிஜ பியர் வெக்க வேண்டி வந்திருச்சி பாரு..'
 

அன்று ஷிட்டிங்கின் கடைசி நாள். நிஜமான பார் செட்டில். அரையிருட்டில் வயதான நடிகர் காத்திருந்தார். அடுத்த படம் எப்ப வருமோ? என்று கவலையில்.

'ரெடி வாங்க ராஜாராமன்.. ஓரு டேக் பாத்துரலாம்'

ஓரு டேக்கா ? இருபது டேக்காவது வாங்காமல் விடமாட்டேன் என்று மனத்துக்குள்
தீர்மானித்திருந்தார்.


கடிதங்களின் வாயிலாககூட கதைகளை நகர்த்தி சிறுகதை எழுத இயலும் என்பது சுவாரஸ்யமாகவே இருந்தது.  இது போன்றதோருக் ('துமாரி அம்ருதா') கதையை இந்தியில் ஷபனா ஆஸ்மியும், நஸ்ருதீன் ஷாவும் கடிதமாக மேடையில் தோன்றிப் படித்திருக்கிறார்களாம். ரிகர்சலே தேவையில்லை. மாற்றி மாற்றி ஓரிவருக்கொருவர் எழுதும் கடிதங்களைப் படித்துக்கொண்டிருக்க வேண்டும். கதை மெல்ல மெல்ல மேடையில் உருவாகிறது. அவர்களுக்கு மேடையில் இரண்டு நாற்காலிகள் எதிரெதிராகவோ அருகிலோ போடப்பட்டிருக்கும். கடைசியில் ஓருமுறை நிமிர்ந்துப் பார்த்துக் கொள்வார்களாம்.

தமிழில் வெகுஜன ஊடகத்தில் சிறுகதைகளில் பல புதிய உத்திகளைக் குமுதம் கையாண்டு வெற்றி பெற்றிருப்பதாக ஓரிடத்தில் சிலாகித்திருக்கிறார். சிறுகதையின் இன்னபிற வடிவங்களை சுஜாதாவின் எழுத்தில் வாசிப்பது அருமையாகவே இருக்கிறது. படிப்பவர்களுக்கு அலுப்பூட்டாமல் வாசிக்த்தூண்டும் 'சுஜாதா மந்திரம்' நன்றாகவே வேலைச் செய்துள்ளது.

சி.சி. கள் நீதிக் கதைகளோ அல்லது உபதேசக் கதைகளோ இல்லை. கவனமாக் கட்டமைக்கப்பட்ட இவை படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும் என்கிறார். சி.சி. கதைகளை எழுத சொற்சிக்கனம் அதிமுக்கியம். சிக்கனமாக எழுத முயலுபவர்கள் பயிற்சிக்காக போஸ்ட் கார்டுக்கு கதை எழதி பழகச் சொல்கிறார். நிறைவாக சி.சி கதைகள் ஹைக்கூ அளவுக்கு வந்துவிட்டன. ஹைக்கூ  என்பது பளிச்சென்று ஓரு காட்சியை எடுத்த போட்டோ போல. சி.சி. கதை என்பது  குறும்படம் போல. போட்டோவும் திறமையான கலைஞர்கள் எடுத்தால் அழகான கதை சொல்லும். குறும்படமும் அப்படியே என்கிறார்.

சிறுகதை என்பது கடந்தகாலங்களில்  பல மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது.  அன்று பத்துப் பக்க சிறுகதைகளில் தொடங்கி இன்று நாம் நாலு செகண்ட் கதை தாண்டி இரண்டு வார்த்தை கதைகளில் வந்து நிற்கிறோம். சி.சி.க்கள் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. இது ஓருவிதத்தில் காலத்தின் கட்டாயம் கூட.  இந்த சூழல் ஆரோக்கியமானதா, மொழி தன் வளத்தை இழக்கிறதா, கதையில் ஆசிரியர் சொல்லமுனைந்த கருத்து சரியாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதா இல்லை பூடகமாக இருக்கிறதா என்கிற விவாதத்துக்குள் இப்போது நாம் செல்ல வேண்டாம். குறுகச் செய் என்பது சி.சி.ன் தாரக மந்திரமாய் இருக்கிறது அவ்வளவே.

குறையாகச் சொல்ல பெரிதாக ஓன்றும் இல்லை. புத்தகத்தில் அவர் எடுத்தாண்டுள்ள கதைகள் பெரும்பாலும்  ஆங்கில புத்தகங்களைத் தழுவி எழுதியவை. மிகச் சிக்கனமாக ஓரிரு இடங்களில் இந்திய எழுத்தாளர்களையும் ( Folk tales from India) எடுத்தாண்டிருக்கிறார்.

'ஹைகா'வுக்கு வாசகர்கள் அனுப்பிய ஹைக்கூவை மட்டும் பதிப்பித்துவிட்டுப் படத்தைக் கோட்டை விட்டுவிட்டனர். அதனால் புத்தகத்தைப் படிப்பவர்கள் குழம்பிவிடுவார்கள். 'ஹைகா' என்பது ஓரு படத்துக்கான ஹைக்கூ என்பதை இங்கே நினைவில் கொள்க. இது பதிப்பக தவறே, ஆசிரியரின் தவறல்ல.

ஆம்னிபஸ் பதிவு:
http://omnibus.sasariri.com/2015/12/blog-post.html

Monday, December 28, 2015

கடவுள் ஆவது

  நான் தீவிரமாக உரைநடை எழுதத் தொடங்கியபின் கவிதை எதுவும் பெரிதாக எழுதவில்லை அல்லது தோன்றியதை பதிவு செய்யவுமில்லை.

அதற்காக இரண்டும் வேறு வேறு உலகங்கள் என்று அர்த்தபடுத்திக் கொள்ளவேண்டியதில்லை. நாம் கவிதை என பெரிதாக நினைத்து அல்லது நம்பி கொண்டிருப்பதை சில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளிலோ அல்லது நாவலிலோ மிக சர்வ சாதாரணமாய் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது எனது அனுபவத்தில் கண்டது.

சரி விஷயத்துக்கு வருவோம். சில மாதங்களுக்கு முன் 'கடவுள் ஆவது' எனும் தலைப்பில் எழுதிய கவிதை ஓன்றை இங்கே பகிர்கிறேன்.


கடவுள் ஆவது
-----

கடவுள் ஆவது அவ்வளவு
சிரமமாய் இருக்கவில்லை.

நேற்று நீர்வீழ்ச்சி வரைந்த
அதே தூரிகையில்

இன்று
பாலைவனத்தையும்
வரைந்து முடித்தபின்.




தொடர்ந்து வாசித்து, கருத்துகளை பகிர்ந்து உற்சாகப்படுத்தி வரும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!. 2016ல் மேலும் பல வெற்றிகளை பெற மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

-ஆரூர் பாஸ்கர்.

நன்றி:
Image: http://ngm.nationalgeographic.com




Sunday, December 20, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-5

நியூ ஆர்லியன்ஸ் பயண அனுபவங்கள் பகுதி-1, பகுதி-2, பகுதி-3, பகுதி-4  (முன்பு வாசிக்காதவர்களுவர்களுக்காக).

அமானுச சக்திகள் இருக்கின்றனவா இல்லை மூட நம்பிக்கையா? என்ற விவாதத்துக்குள் போகமால். பயண அனுபவமாக மட்டும் இதை படிக்கவும்.

நீங்க பேய், பிசாசு, மோகினி மேல ஓரு ஆர்வம் உள்ளவர் அப்படினு வச்சுகிட்டா, உங்க ஆசை அதிகபட்சமா  என்னவா இருக்கும் ?

ராத்திரி பனிரெண்டு மணிக்கு சுடுகாடுக்கு இல்ல கல்லறைக்கு போறது ?  இல்ல பேய் நடமாடறதா சொல்லபடுகிற இடத்தை ராத்திரியில போய் பார்க்குறது ?


அப்படினா நீங்க நியூ ஆர்லியன்ஸை பார்க்க பிரியப்படுவிங்க. ஆமாம், இதுமாதிரியான விஷயங்கள் எல்லாம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் ரொம்ப சகஜம்.  இதுக்காகவே ஓரு டூர் (அல்லது) சுற்றுப்பயணம் இருக்குனா பாத்துக்கோங்க. 

ஆம், நியூ ஆர்லியன்ஸ்  அமேரிக்காவின் 'அதிபயங்கர பேய் நகரம்'.  இந்த டூரை எனது 8 வயது மகள் கண்டிப்பாக பார்த்துவரச் சொல்லியதால் வேற வழியில்லாமல் பார்த்துவிட்டு வந்தேன். :)

(மேலே- ஸ்ட் லூயிஸ் கல்லறை)

டூர் இரவு 8 மணிக்கு தொடங்கி முடிய பத்து மணி ஆகிறது. Walking tour அல்லது 'நடை பயண' வகையைச் சார்ந்தது. ஓரு வழிகாட்டி பதினைந்து பேர் கொண்ட ஓரு குழுவை வழிநடத்துகிறார். பேய் நடமாட்டம் இருப்பதாக நம்பப்படுகிற இடங்களுக்கு நம்மை நடத்தி கூட்டிச் சென்று கதை கதையா எடுத்து விடுகிறார். அவரை ' வழிகாட்டி' என்பதை விட 'கதைச் சொல்லி' அப்படின்னு சொல்லலாம். அதுக்கு கொஞ்சம் முன்னாடி.


நியூ ஆர்லியன்ஸை பேய் நகரமானது எப்படி ? 

துர் மரணமடைபவர்களுடைய ஆன்மாவைதான் பேய், பிசாசு, மோகினி அப்படின்னு பல பெயரில் சொல்லும் நம்பிக்கை இருக்கிறது. அப்படி பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நகரில் மரணித்திருக்கிறார்கள். 

இந்த நகரில் தீ, தொற்றுநோய்கள், போர்கள் மற்றும் கட்ரீனா சூராவளி போன்ற பல பேரழிவுகளில் அவர்கள் மரணித்திருக்கிறார்கள்.

அதையும் தாண்டி, இன்னோரு விஷயம்  வன்முறை.  பல நூறு ஆண்டுகளாக இருந்த இந்த நகரில் கட்டுப்பாடற்ற குடி,  மாது, அடிமைதனம்,சட்ட ஓழுங்கின்மை இவை ஓரு சாராரை வதைத்து, கொன்று கொடுமைப் படுத்தியுள்ளது. அவர்களின் கொடுமையான மரணங்களும் இதற்கு காரணமாயிருக்கலாம்.

அவர் காட்டிய சில இடங்களும் சொன்ன சில சுவாரசியமான விஷயங்களும்:

லல்வரே மாளிகை (Lalaurie House)-  இங்கிருந்த ஓரு சீமாட்டி (1834ம் வருட வாக்கில்) தனது மாளிகையில் பல கருப்பின அடிமைகளை சித்ரவதை செய்து கொன்றுள்ளார். கொடுமைனா எந்த அளவுக்குன்னா- உடல் உறுப்புகளை வெட்டி, கை, கால்களை பிணைத்து உயிருடன் ஆடு,மாடுகளை போல தொங்கவிட்டிருந்திருக்கிறார். இந்த இடத்தில் பேய் நடமாட்டத்தை பலர் பதிவு செய்திருக்கிறார்கள். மாளிகையின் பழைய படம் கீழே




புதிய படம்:


இணையத்தில் இது பற்றிய பல தகவல்கள், பேய் நடமாட்டத்திற்கான படங்கள் என பல கொட்டிக் கிடக்கின்றன.ஆர்வமிருந்தால் பாருங்கள்.

அப்புறம், இந்த மாளிகையை ஒரு துரதிஷ்மான இடமாகவும் சொல்கிறார்கள். உதாரணமாக சமீபத்தில் இதை வாங்கியபின்தான் மிகப் பெரிய ஹாலிவுட் நடிகர் நிக்கலஸ் கேஜ் படமே இல்லாமல் படு தோல்வியடைந்ததாரம்.

இன்னோரு சுவாரசியமானது-  ஓரு உணவகத்தில் தினமும் இரவு ஓரு வெற்று மேசையில் உணவு பரிமாறி வைத்து விட்டே பின்பே மற்றவர்களுக்கு உணவு தருகிறார்கள். கேட்டால், அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்?. அங்கே தூக்கில் தொங்கிய அந்த இடத்தின் சொந்தக்காரர்  தினமும் உணவருந்த வருகிறாறாம். இந்த படத்தில் அந்த மேசையைப் பாருங்கள்.




சரி, நான் அங்கே பேய பாத்தேனா? அப்படின்னு நீங்க கேட்டா, அதுக்கான பதில் இந்த படத்துல. அந்த நீல நிற புள்ளியை கவனிங்க மக்களே!





இது நான் எடுத்தது. என்னுடன் அங்கே வந்தவர்களில் ஓரு பெண்மணி இது கண்டிப்பா அமானுச சக்தி அப்படின்னு பயபக்தியா சொன்னாங்க. இதை பார்த்த என் மகள் ' அப்பா போய் பொழப்ப பாருங்க' னு சொல்லிட்டா.  :)

பொழப்ப பாக்குறத்துக்கு முன்னாடி சின்னதா ஓரு ஜோக்: இப்படி தான் பேய், பிசாசு பற்றியேல்லாம் ஆராய்சி செய்யும் ஓருவர் தன்னோட நண்பர் கிட்ட ரொம்ப பெருமையா சொன்னாறாம். 'நான் இதை கடந்த 5 வருசமா பண்றேன். எனக்கு துளி கூட பயம் இல்லை' ன்னு. அதுக்கு நண்பர் சொன்னாராம் 'இது என்ன பிரமாதம் !? நான் ஓரு பிசாசு கூட 25 வருசமா குடும்பமே நடத்திகிட்டே இருக்கேன்'. அப்படின்னு.  கொஞ்சமாவது சிரிங்க பாஸ்!!  :)

நியூ ஆர்லியன்ஸ் பயணம் முடிந்தது!.
 
இதுவரை என்னுடன்பயணித்த அனைவருக்கும் நன்றி!!


படங்கள் நன்றி : GOOGLE

Sunday, December 13, 2015

தமிழ் சினிமா - அன்றும் இன்றும்

தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் தனியாக பிரித்துப் பார்க்க இயலுமா தெரியவில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக சினிமா சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே ஆளும் மாநிலம் தமிழ்நாடு. உலகத்தில் வேறு எங்கும் இது போலதோரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை.  

நான் இங்கே தமிழ் சினிமாவைப் பற்றி எழுதக் காரணம் இருக்கிறது. சமீபத்தில் பழைய சினிமா டைரக்டர் ஓருவரிடமும், டிஸ்டிரிபியூட்ர் ஓருவரிடமும் தனித்தனியாகப் பேசிக் கொண்டிருந்தேன். 

முதலில் அந்த டைரக்டரைப் பற்றிப் பார்ப்போம். பெயர் வேண்டாமே. அவர் 80களில் பல நூறு நாட்கள் ஓடிய இமாலய வெற்றிப்படம் ஓன்றைத் தந்தவர். அந்தப் படத்தின் பாடல்களை இன்றும் வானோலியில் நீங்கள் கேட்கலாம். அதன் பிறகு நல்ல வாய்ப்புகள் வராமல் அல்லது வந்த வாய்ப்பை உதாசீனப்படுத்தியவர்.

நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பின் சமிபத்தில் தன் சொந்த செலவில் ஒரு படத்தை எடுத்து சரியாக டிஸ்டிரிபியூட் செய்ய இயலாமல் படு தோல்வி அடைந்திருக்கிறார். தற்போது தனது அடுத்த படத்திற்கான தயாரிப்பாளரை தேடிக்கொண்டிருக்கிறார். ஆசை யாரை விட்டது சொல்லுங்கள் ?. அதை 'ஆசை'  என்று சொல்லி ஓற்றைச் சொல்லில் என்னால் எளிதாகக் கடந்துச் செல்ல முடியவில்லை. ஏதோ ஓரு உந்துதல், ஆங்கிலத்தில் Urge என்று சொல்வார்கள் இல்லையா அது போல. தன்னை மீண்டும் நிருபிப்பேன் என்ற எண்ணம் தான் வேறு என்ன.

சரி போகட்டும். இவர் தன்னுடைய வாலிப வயதில் தமிழ்த் திரை உலகின் ஜாம்பாவான்களிடம் பால பாடம் படித்தவர்தான்.  தன்னுடைய நேரத்தையும் விதியையும் குறை சொல்லும் அதே நேரத்தில் தமிழ்த்திரை உலகின் இன்றைய நிலை பற்றி ஆற்றாமையோடு புலம்பிக் கொண்டிருந்தார்.

விஷயம் நாம் அறிந்த ஓன்றுதான். தமிழ் சினிமாவில் தற்போது நிலவும் நிலையாமை மற்றும் ஆரோக்கியமற்ற சூழல் பற்றிதான். கதை, நட்சத்திரங்கள்,பாடல்கள், தயாரிப்பு, விற்பனை, விநியோகம்,தொழில்நுட்பம் என பெரிய பட்டியலே வாசித்தார். எல்லா முனைகளிலிருந்தும் நெருக்குதல் என்கிறார். 

தாறுமாரான தயாரிப்பு செலவு. அதே நேரத்தில், பெரிய நட்சத்திர நடிகர்கள் இருந்தாலும் படம்கூட வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்லை. இவ்வளவு தெரிந்தும் படத்தின் வெற்றி தோல்விபற்றி கவலைப்படாமல் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளாத நடிகர்கள். 

தனது கவர்ச்சியையும்  பொலிவையும் இழந்து வரும் மனதில் நிற்காத இசை மற்றும் பாடல்கள்.  அப்படி வரும் பாடல்களையும் டிஜிட்டலில் விலையின்றி தரவிரக்கம் செய்யும் இளைஞர்கள்.  இதன் தொடர்சியாக சில வருடங்களில் ஆங்கிலப் படங்கள் போல பாடல்களே இல்லாது படங்கள் வரும் காலம் தூரத்தில் இல்லை என்கிறார். இனி பாடலுக்காக ஓடிய படங்கள் வரப்போவதே இல்லை என உறுதியாகச் சொல்கிறார்.

கதைப் பற்றாக்குறை- முன்பே சொல்லப்பட்ட கதை அல்லது கதாபாத்திரங்கள். ரசிகர்களின் உலகத்தரமான  எதிர்பார்ப்பு, இணையம் என இது ஓரு பக்கம்.

அப்புறம் எல்லோரும் படம் எளிதாக படம் எடுக்கலாம் என்ற சூழலில் வெளியிட
தியேட்டர்கள் கிடைக்காத நிலை.  அப்படியே தியேட்டர்கள் கிடைத்தாலும் முன்னூறு, ஐநூறு என டிக்கெட்டுக்கு அடங்காமல் கொட்டமடிக்கும் மல்டிபிலக்ஸ் தியேட்டர்  உரிமையாளர்கள்.

24 X 7 டிவி சானல்கள், சீரியல்களைத் தாண்டி முன்னூறும் ஐநூறும் கொடுத்து படம் பார்க்கவருபவரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.  புதுப்புதுக் கேமராக்கள்,லென்சுகள் என மாறும் தொழில்நுட்பம். அத்தனையும் தாக்குப்பிடிக்கும் சூட்சுமம். இப்படிப் பல. 

திருட்டு விசிடிக்கள், இணையம் என எளிதாக நடைபெறும் திருட்டு. இதற்கு சேரனின் Direct to Home அல்லது DTH நல்ல மாற்றாக இருக்கும் என நம்பும் அதே வேலையில் திரைத்துறையில் சிலர் இதைத் தொடர்ந்து இருட்டடிப்பு செய்ய முயலுவதையும்  சுட்டிக் காட்டினார்.

முன்பேல்லாம் தயாரிப்பாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் சில நடிகர்களின் படமெனில் ஓரு மினிமம் கியரண்டி இருந்தது. அந்த காலம் மலை ஏறிவிட்டது. அப்படி வளர்ந்து வந்தவர்கள் தானே இன்றைய விஜயகாந்த் போன்ற நடிகர்கள் என்கிறார் நான் பேசிக் கொண்டிருந்த பழைய விநியோகஸ்தர்.

அவரும் 80களில் மதுரையில் விநியோகஸ்தரராக பல வருடங்கள் இருந்தவர் தான். நடிகர்கள் விநியோகஸ்தர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் வைத்திருந்த மரியாதை சுத்தமாய் போய்விட்டது. நட்சத்திரங்களை சுற்றி மட்டுமே மொத்த படக்குழுவும்  இயங்கத் தொடங்கிவிட்டதாகப் புலம்பிக் கொண்டிருந்தார். 

உச்ச கட்ட நடிகரிடம் தானே தமிழ்நாடு வெள்ள நிவாரணத்தை எதிர்பார்கிறது. ஏன் ஓரு உச்சகட்ட டைரக்டரிடம் எதிர்பார்ப்பதில்லை என்பதற்கான விடை மேலேயே இருக்கிறது.

இப்போது ஸ்டாக் மார்க்கெட் வணிகத்தில் இருக்கும் இவர் கமல் ஓருமுறை இவரை காரிலிருந்து இறங்கிவந்து மரியாதை செய்ததை நினைவு கூர்ந்தார். அந்தநாளில் ரஜினியுடன் ஓரு விநியோகஸ்தராக தன்னால் 3 மணி நேரம் பேசமுடிந்தது என்று சிலாகிக்கும் இவர். AVM தனது படத் தயாரிப்பை நிறுத்தி, அடுக்குமாடி கட்டிடம் பக்கம் திரும்பியது கூட இந்த காரணங்களுக்காக தான் என்கிறார்.

சினிமா உலகத்தில் பார்வையாளர்களைத் தாண்டி ஓட்டு மொத்த தொழிலும் மாறி விட்டதை தெளிவாக உணர முடிகிறது. 'மாற்றம் என்ற சொல்லே மாறாதது' என்பார்கள். அது போல மாறும் விஷயங்களுக்கு ஏற்றாற் போல மாறாதவர்கள் கரை ஓதுங்கிய சிப்பிகள்.  அவர்கள் கடலை வெறித்துப் பார்ப்பதன்றி வேறேன்ன செய்ய, சொல்லுங்கள் !.

குறிப்பு: இது எனது சொந்தக் கருத்து மட்டுமே.

நன்றி: google images

Wednesday, December 9, 2015

2015 தீபாவளி கலை நிகழ்ச்சி -டண்டனக்கா


இங்கே அமேரிக்காவில் தென் ஃபுளொரிடா நிலப் பரப்பில் மிகப் பெரியது தான். ஆனால் தமிழர்களின் அடர்த்தி எனப் பார்த்தால் குறைவே.  அட்லாண்டா,சான் ஃபிரான்ஸிஸ்கோ போன்றவற்றுடன் எண்ணிக்கையில் ஓப்பிட்டால் மிகச் சொர்ப்பம் தான். நான் வசிக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குஜராத்தவர்கள் தான் அதிகம்.

சரி, விஷயத்துக்கு வருவோம். கடந்த வாரம் சனிக்கிழமை தென் ஃபுளொரிடா தமிழ்ச் சங்கம் நடத்திய 2015ம் ஆண்டுக்கான தீபாவளி கலை நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம்.   கடந்த வருடத்தை விட இந்த வருட நிகழ்ச்சிகளில் பல மாற்றங்களை பார்க்க முடிந்தது. அதிலிருந்து சில துளிகள்.

ஆங்கிலத்தில் சொல்வது போல முதலில் நல்ல விசயங்கள் (Good things First).

* கடந்த வருடம் போல இந்த வருடமும் சுதாகர் அருமையாக பாடி எல்லோர் மனங்களையும் வென்றார்.  அவருக்கு இணையாக இந்த வருடம் ராதாகிருஷ்ணனும்,  அனிதா ஜோசபும். வாழ்த்துக்கள்!!

* நல்ல இரவு உணவு உபசரிப்பு. குறை ஒன்றும் இல்லை எனச் சொல்லத் தோன்றியது. அதிலும் அந்த இனிப்பு ! ஏதோ, ஹைதெராபாத் வகையராவாம். வாழ்க !

* ஆர்வத்துடன் பலர் கலந்துக் கொண்டனர். மற்றுமின்றி சில பங்கேற்பாளர்களின் கடின உழைப்பு அசர வைத்தன. வாழ்த்துக்கள்! குறிப்பாக, குட்டிப்பையன் ஓருவனின் ஆட்டம் (டண்டனக்கா?) அசத்தல்.

மற்ற முக்கியமான விசயங்களுக்கு வருவோம்.

* முதலாக வரவேற்புரை- வருடத்துக்கு ஓருமுறை நடக்கும் இந்த பெரிய விழாவுக்கு, வழங்கப்பட்ட முன் தயாரிப்பற்ற வரவேற்புரை ஓன்று அல்லது இரண்டு நிமிடங்களைத் கூடத் தாண்ட வில்லை. இங்கே 300 பேர் என்பதே பெரிய எண்ணிக்கை. அப்படி இருக்கும் பட்சத்தில் பார்வையாளர்களின் கவனத்தை வரவேற்புரையில் ஈர்க்கத் தவறிவிட்டனர்.

 *நிகழ்ச்சி ஓருங்கிணைப்பு - அல்லது Coordination. சரியாக தொகுத்து வழங்கப்படாத நல்ல நிகழ்ச்சி கூட பார்வையாளர்களால் கவனிக்கபடுவதில்லை அல்லது அவர்களுக்கு மனநிறைவாய் இருப்பதில்லை.

*இந்த முறை சங்கத்தின் பதவியில் இருக்கும் அனைவருக்கும் பேச, தொகுத்துவழங்க வாய்ப்பு வழங்கியிருந்தார்கள். நல்ல முயற்சி தான். ஆனால் 'நிகழ்ச்சி ஓருங்கிணைப்பு' என்பது ஓரு கலை. அதற்கு நிறைய பயிற்சி தேவை என்பதை இப்போது அனைவரும் புரிந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

*உதாரணமாக, நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் என்பதைத் தாண்டி நிகழ்ச்சி நடக்கும் போது கூட சிறுசுகள் விளையாடியபடியும், பெருசுகள் செல்லில் நோண்டியபடியும் அல்லது பக்கத்தில் பேசியபடியும் இருந்தனர். மேடையில் தோன்றிய நல்ல திறமையான பலரை இதனால் கவனிக்க இயலவில்லை. 

*ஓருங்கிணைப்பு குறைபாடு என மேலே சொன்னதை சுத்தமா ஓதுக்கவும் முடியவில்லை. பெற்றோர்களும் கொஞ்சம் யோசிங்க,  இதே விஷயத்தை வெளியே ஓரு திரை அரங்கில் செய்வோமா?. தமிழ் நிகழ்ச்சின்னு கூடுதல் முன்னுரிமை எடுத்துக் கொள்கிறோமா?

*நிகழ்ச்சி நிரலின் முதல் பக்கத்தில் தப்பான வருடத்தை அச்சடித்ததிலிருந்து பல குளறுபடிகள் இருந்தன. அதன் உச்சமாக நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓரு பெண்கள் குழுவை மேடையில் அறிமுகம் செய்ய, வந்து ஆடியதோ ஆண்கள் குழு.

*விருது வழங்கும் நிகழ்ச்சியில் என்ன போட்டி, எப்போது நடந்தது, யாருக்கு, எதற்காக விருது ? ஓன்றும் பார்வையாளர்களுக்கு புரிந்த மாதிரி தெரியவில்லை. மின்னல் மாதிரி அந்த முக்கிய நிகழ்வு நடந்து முடிந்தது. அந்த நிகழ்வு வென்றவரை வாழ்த்தவும், கலந்து கொள்ளாதவர்களை
ஊக்கப்படுத்துவதாகவும் இருக்க வேண்டாமா. நேரமின்மை என்பதால்... 

*நிகழ்ச்சியில் சென்னை அடர் மழை நிவாரணத்துக்கு நிதி சேகரிப்பதாக அறிவிப்பு செய்தார்கள். அதற்காக ஓரு விண்ணப்பத்தையும் கூட வாசலில் வைத்திருந்தனர். ஆனால், விழா முடிந்ததும் பலர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை என்ன செய்வது , யாரிடம் கொடுப்பது எனத் தெரியாமல் குழம்பி அதை வெறுமனே அங்கேயே வைத்துச் சென்றதைப் பார்க்கையில் மனது வலித்தது.

ஓருவரை பொறுப்பாளராக நியமித்திருந்து, நிகழ்ச்சியில் சரியான முறையில் followup செய்திருந்தால் ? 300 பேர் ஓன்றாகக் கூடிய இடம். We lost a golden opportunity to raise the fund. for sure!!. ஆங்கிலத்தில் எழுதினால் நேரடியாக போய் சேராதா என்ற சின்ன ஆசைதான்.

இதேல்லாம் நடந்து, எழுதிக்கொண்டிருக்கும் நேரத்திற்கு முன்பே அதாவது கடந்த சனிக்கிழமை அன்று காலையிலேயை  மத்திய ஃபுளோரிடா முத்தமிழ்ச் சங்கத்தின் நிவாரணப் பொருட்கள் சென்னை மக்களுக்குச் சென்று சேர்ந்திருந்தது. நன்றி, வாழ்த்துக்கள் ஃஓர்லாண்டா மக்களே! அந்த படம் இங்கே. ( நன்றி : நண்பர் விஜய செந்தில்)









காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - யாரோ சொல்லக் கேள்வி.


*நான் கேட்டவரை மொத்தமாக திட்டமிடப்பட்ட  20 நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தவிர்த்து வந்த 'நீல மயில் மீது' எனும் முருகன் பக்திப்பாடல் மட்டுமே சினிமா சம்பந்தப்படாதது.

 *தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் பத்திரிக்கைகளிலும், டிவியிலும் திட்டமிட்டு பரப்பப்படும் சினிமா. கடல் தாண்டி வந்ததில் ஓன்றும் ஆச்சர்யமில்லை தான். ஆனால் அதுவும் அனைத்தும் 'குத்து' பாட்டு ரகமாகத்தான் இருக்க வேண்டுமா ?

*அந்த பாடல்களிலிருக்கும் சில வரிகள் தாங்க முடியவில்லை. 'பல்லாவரம்..' ன்னு ஏதோ ஓரு பாட்டுக்கு ஆடினாங்க. அதுல ஓரு வரி வருது 'நாளேல்லாம் தண்ணியடி'ன்னு. பக்கத்துல விவரம் புரியாம விசாரிச்சா. சென்னையில தண்ணி கஷ்டமா இருக்கச்ச எழுதியிருப்பாங்கன்னாரு. 'சரி' ங்கறதா இல்ல 'சிரி'க்கிறதான்னு புரியல.

*சிறுவர்களை தவிர்த்து விட்டு பார்த்தாலும் நடனமாடிய குடும்ப பெண்களும் அந்த மாதிரியான பாடலைதான் தேர்வு செய்திருந்தனர்.  அவர்களின் உழைப்பு ஆபாசமற்ற அந்த நடனத்தில் தெரிந்தது.  கண்டிப்பாக அதை எதாவதோரு தமிழ் நாட்டுப்புற பாடலுக்கு பயன்படுத்தியிருக்கலாம்.

அமேரிக்காவில் இருக்கும் குழந்தைகளுக்கு நாமாவது நல்ல விஷயங்களை அறிமுகப்படுத்துவோமே. குத்துப் பாடலுக்குதான் சூப்பரான பல சிங்கர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களே. தமிழ் நாட்டுப் பாடலும் துள்ளலிசையே, அது எந்த விதத்திலும் குத்துப் பாடல்களுக்கு குறைந்ததில்லையே.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன,  என்று நினைத்துப் பார்க்கிறேன். தமிழர் பண்பாட்டை,பெருமையை காக்கும் நிகழ்ச்சியா என்றால் கண்டிப்பாக இல்லை. ஆடிப் பாடி, மகிழத்தான் இந்த கொண்டாட்டங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், முன்பேல்லாம் திபாவளி, பொங்கல் போன்றதோரு  கொண்டாட்டங்களில் இந்த 'துக்கடா' க்கள் ஓன்று, இரண்டு கண்டிப்பாக இருக்கும். சமீபகாலங்களில் ? எல்லாமே வா ?

ஆங்கிலத்தில் சொல்வது போல் இதுதான் New Normal ?? அதற்கு தமிழ் சங்கங்கள் துணைதான் போக வேண்டுமா ?  நிர்வாகத்தினர் சிந்திக்க வேண்டும்.

மற்ற அமேரிக்க தமிழ்ச் சங்கங்கள் எப்படி இதை எதிர்க் கொள்கிறார்கள் ? பிரத்தியேகமாக Item Songs நிகழ்ச்சி? தெரிந்தவர்கள் உங்கள் கருத்துகளை பதிலிடுங்கள்.

கடந்த வருட நிகழ்வின் போது எழுதிய  இந்த பதிவில் பழசு இப்படி எழுதியிருந்தேன்.

"நிகழ்ச்சி நடந்த இடம் என் வீட்டில் இருந்து சுமார் 80 மைல், ஏறக்குறைய 130 கி.மீ. ஆனால் கலைநிகழ்ச்சிகள்  தந்த உற்சாகத்தில் திரும்பி வருகையில் நள்ளிரவிலும் பயணம் களைப்பின்றி இருந்ததென்னவோ உண்மை."

துரதிஷ்டவசமாக, இந்த வருடம் நான் மிகக் களைப்பாக உணர்ந்தேன்.

குறிப்பு:: இது நான் பார்த்து, சிலர் சொல்லக் கேட்ட என்னுடைய சொந்த கருத்து மட்டுமே. நம்முடைய பங்குக்கு ஓரு சிறு கல்லை நகர்த்த முயற்சிக்கலாம் என்று . :)