Sunday, September 26, 2021

அருஞ்சொல் இதழுக்கு வாழ்த்து

'அருஞ்சொல்'  எனும் தளத்தின் வழியாக இணையத்தை தனது முதன்மைக் களமாக்கி செயல்படத் துவங்கி இருக்கும் இதழாளர் சமஸ்-சுக்கும் அவருடைய இதழுக்கும் வாழ்த்துகள். 

மிகச் சரியான திசை, வெல்க... !!

அருஞ்சொல் | சமஸ் | arunchol.com

Tuesday, September 21, 2021

டிக்டாக் -அமெரிக்க பள்ளிகளில் தலைவலி

 'ஸ்வீட் எடு கொண்டாடு' என்பது போல அமெரிக்க  பள்ளி மாணவர்கள் மத்தியில்  டிக்டாக் வழியாக ஒரு புதிய சவால் ஒன்று வைரலாகி உலாவுவதாக ஒரு இமெயில் அனுப்பி இருக்கிறார்கள்.

அதன்படி,  மாணவர்கள் பள்ளிக்கு சொந்தமான பொருட்களை அடித்து உடைத்து துவம்சம் செய்வது இல்லை அவற்றைத் திருடிக் கொண்டு வருவது போன்ற காணொலிகளை எடுத்து பகிரவேண்டுமாம். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பள்ளி மாணவர்கள் பள்ளி கழிவறைகளின் கதவுகளை அடித்து உடைப்பது, அங்கிருக்கும் டாய்லட் பேப்பர்களை உருவி வீசுவது, பள்ளிகளில் இருந்து லேப்டாப்புகளைத் திருடிக் கொண்டு வருவது போன்ற வெறியாட்டங்களில் ஈடுபடுகிறார்களாம்.


இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டு அவர்கள் மேல்  குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றிருக்கிறார்கள். கூடவே இதனால் ஏற்படும் நஷ்டத்துக்கு பெற்றோர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றிருக்கிறார்கள். 

தலைவலி. தரமான கல்வி அனைவருக்கும் இலவசம் என மாணவர்களை பள்ளிக்கு அழைத்தால் அவர்கள் செய்யும் வெறியாட்டத்தை எந்த விதத்தில் சேர்ப்பது.  குறும்புத்தனத்துக்கும் ஒரு அளவு இருக்கிறது தானே. இவர்கள் எல்லாம் படித்த படிப்புக்கு என்ன மரியாதை செய்கிறார்களோ தெரியவில்லை. 

முக்கியமாக, சிறுவயதில் வன்முறை இப்படிக் கொண்டாட்டமாவது என்பது சரியான அறிகுறி அல்ல. ஆபத்து.

#TikTokvandalism

Saturday, September 11, 2021

மர அலமாரிக்குள் ஒரு மணலுள்ள ஆறு...

உள்பெட்டிக்கு வந்த ஒருவர்,  "என்ன நண்பரே முன்ன மாதிரி கவிதையெல்லாம் பகிர்வதில்லையே ? What is the matter ? " என்றார்.

மேட்டர் எல்லாம் பெரிதாக எதுவும் இல்லை. மொழியின் ஆகச்சிறந்த வடிவம் கவிதை என்பதில் என்றும்  எந்த மாற்றுக் கருத்தும் இருந்ததில்லை. அதற்காக கவிதை நேரம் என்றெல்லாம் தனியாக ஒதுக்கி வாசிக்கும் பழக்கமும் இல்லை.

ஆனால், திட்டமிடுதல் எதுவுமின்றி தோன்றும் போது கண்ணில் படும் கவிதைகளை எடுத்து வாசிப்பேன். அதை எழுதியது தபூ சங்கர், மனுஷ் ... என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், வாசிக்கும் கவிதைகளில் ஏதோ ஒரு வரியோ சொல்லோ தெறிப்பாக வந்து நிற்கும் போது புத்தகத்தை மூடிவைத்து விடுவேன்.

பிரமிப்பு தரும் அந்தச் சொல்லோ, வரியோதான் அன்றைய நாள் முழுவதும் மனதுக்குள் பறவை போல தாழபறந்து  சுழன்று கொண்டேயிருக்கும்.

அப்படிச் சமீபத்தில் வாசித்து லயித்த கல்யாண்ஜி-யின் கவிதை ஒன்று மணல் உள்ள ஆறு தொகுப்பில் இருந்து  (சந்தியா பதிப்பகம்)

ஆச்சி இறந்து

அநேக காலம் ஆயிற்று.

அவளுடைய மரஅலமாரியில்

வேறெதையோ தேடுகையில் கிடைத்தது

ஆச்சியின் ஊதா சோப்பு டப்பாவும்

அதற்குள் இருந்த லைபாய் சோப் துண்டும்.

எந்த ஆற்றில் அவள் குளிக்கையில்

தவறி விழுந்தததோ,

எல்லா பக்கத்திலும் முள் முள்ளாக

ஒட்டிய மணல் சோப்பில்.

தெரியாமல் போயிற்று

இத்தனை காலமும்

ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது

மர அலமாரிக்குள் ஒரு

மணலுள்ள ஆறு என்று..




Friday, August 27, 2021

சின்னிஜெயந்த் குடும்பத்துக்கு வாழ்த்துகள் !

"காசு பாத்து வளர்ந்த பசங்க படிக்காது. இந்த காலத்து பசங்களுக்கு அப்ப மாதிரி டிரைவே இல்ல.." என்றெல்லாம் யாராவது சொல்வதைக் கேட்கும் நேரத்தில் இது போன்ற சில விசயங்கள் கண்ணில்படுகிறது.

அது, திரைநடிகர் சின்னிஜெயந்தின் மகன் இந்திய ஆட்சித் துறை ( IAS) தேர்வெழுதி தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராகி இருக்கிறார் என்பதாகும்.




சமுதாயத்துக்குப் பங்களிப்பு தரும்படியான வேலையைத் தேடிக்கொள் என
பெற்றோர்களாகிய நாம் என்னதான் சொன்னாலும், பிள்ளைகளுடைய வளரும் சூழல், நண்பர்கள், பழகும் மனிதர்களின் தாக்கம் என்பது மிக அதிகம்.

அந்த வகையில் , மகனிடம் உயரிய சிந்தனையை விதைத்து அதை வென்றெடுத்த சின்னிஜெயந்த்-தின் குடும்பம் பாராட்டுதலுக்கு உரியது.


அவரைப் போல, சிறுவயதில் பிள்ளைகளின் மனதில் உயரிய சிந்தனைகளை ஆழமாக, ஆத்மார்த்தமாக விதைக்க முயற்சி செய்யும் எல்லா பெற்றோர்களையும் வாழ்த்துவோம் !

படங்கள் நன்றி- ஆனந்தவிகடன்.

Sunday, August 1, 2021

பற.. பற.. பற...

விடுமுறை முடிந்து வீட்டுக்கு வந்தால் உடனே வேலை என்ற பதற்றத்தோடும் சிவந்த கண்களோடும் வீடு வந்து சேர்ந்தேன். சிவந்த கண்கள் என்ற உடன் ஏதோ கம்யூனிச படம் போல என நண்ப்ரகள் நினைக்கத் தேவையில்லை.

நள்ளிரவில் கிளம்பி விடியல் காலையில் வரும் விமானங்களை ரெட் ஐ பிளைட் (red-eye flight) என்கிறார்கள். என்னுடையது நான்கு மணி நேர விமான  பயணம் என்றாலும் பயணம் அலுப்பூட்டக்கூடியதாகவே இருந்தது.  சரியான தூக்கமில்லை. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்ததில் கழுத்துவலி. கூடவே, முகக்கவசம் எனும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டிய இம்சை வேறு சேர்ந்துகொண்டது.

பொதுவாகவே விமானப்பயணங்கள் மிகவும் அலுப்பூட்டக்கூடியவை. அதனால் தான், வந்த புதிதில் பயணிகளைக் கவர  நல்ல சுவையான உணவு, இலவசங்கள், வெளிநாட்டு மது வகைகள், கவர்ச்சிகரமான பணிப்பெண்கள், பொழுதுபோக்கு சாதனங்கள் என்றெல்லாம் தூண்டில் போட்டார்கள்.



என்னதான் அவர்கள்  வருந்தி வருந்தி அழைத்தாலும் உள்ளே இடநெருக்கடி, ஒரே இடத்தில் கட்டி போட்டது போல அடைத்து வைப்பது. எகானமி, பிசினஸ் கிளாஸ் என அதிக பணம் தந்தால் கூடுதல் சொகுசு எனும் பாகுபாடு , அதிக உயரத்தில் காது அடைப்பு, வாந்தி, பல அடுக்கு பாதுகாப்பு சோதனைகள் என பலருக்கு விமானப் பயணம் என்பது உவப்பனதாக இருப்பதில்லை.

எனக்கும் 35 ஆயிரம் அடி உயரத்தில் ஜிவ்வென பறந்த போது வந்த ஆரம்ப கட்ட சிலிர்ப்பும், கவர்ச்சியும் என்றோ மங்கி விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக பல இலட்சம் மைல்கள் பறந்தாகி விட்டது. உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்பஸ் ஏ380-யிலும் பயணித்தாகி விட்டது. இருந்தாலும் விமானப் பயணம் என்பது இன்றும் 'கடி'யாகவே இருக்கிறது.

ஆனால், இந்தச் சூழல் விரைவில் மாறும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.  சமீபமாக பிரிட்டனின் ரிச்சர்ட் பிரான்சன், அமெரிக்காவின் எலான் மாஸ்க், ஜெப் பெசோஸ் (Jeff Bezos) போன்றவர்கள் செய்யும் விண்வெளிப் பயணங்கள் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன. அந்த முன்னெடுப்புகள் சமானியர்கள் பயணிக்கும் கமர்சியல் ஏர்லைன் துறையிலும் மிகப்பெரிய வெடிப்பைக் கண்டிப்பாக ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.


இன்று, அமெரிக்கா-இந்தியா பயண நேரம் என்பது சராசரியாக குறைந்தது 20 மணி நேரமாக இருக்கிறது.  ஸ்பேஸ்-X இன்  ஏவுகணைத் தொழில்நுட்பம்  SpaceX Starship போன்றவை நடைமுறைக்கு வந்தால் பூமி பந்தின் எந்தப் பகுதிக்கும் ஒரு மணி நேரத்திற்குள் நம்மால் சென்றடைந்துவிடக் கூடிய சாத்தியம் இருக்கிறது.

ம்... காலையில் சென்னையில் டிபன் , அதற்கு காஃபி நீயூயார்க்கில் என்பதை  நினைத்தால் நன்றாகதான் இருக்கிறது. பார்ப்போம்.

நன்றி- படங்கள் இணையம்.

Friday, July 23, 2021

வனநாயகன் குறித்து-19 ( படிக்க வேண்டிய புதினம்! )

அட்லாண்டா ஜெயா மாறன்-இன் எனது வனநாயகன்-மலேசிய நாட்கள் நாவல் வாசிப்பனுபவம் (முகநூலில் பகிர்ந்தது) ... நன்றி ஜெயா !

//

வனநாயகன் - ஓர் அறிமுகம்: 

மனதுக்கு நெருக்கமான மலேசியாவைக் கதைக்களமாக வைத்து புதினம் எழுதும் கனவின் நனவு தான் 'வனநாயகன் - மலேசிய நாட்கள்' என்கிறார் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர்.

கோலாலம்பூரில் IT துறையில் வேலை செய்யும் திறமையான, நேர்மையான 28 வயது வாலிபன் சுதாங்கன். அவர் வேலை செய்யும் bank merger project வெற்றிகரமாக live சென்றவுடன், காரணமே சொல்லப்படாமல் fire செய்யப்படுகிறார். விரக்தி ஒரு புறம் குடும்பபாரம் ஒரு புறம் அழுத்த வேறு வேலை தேடுகிறார். மலேசியாவில் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் இருந்து சம்பாதித்தாக வேண்டிய நிலை. ஆனால், அவருடைய முயற்சிகள் தடுக்கப்படுகின்றன. 

தன்னை வேலையைவிட்டுத் தூக்கியதற்கும், தான் மலேசியாவில் இருக்கவே கூடாது என்று தடுக்கப்படுவதற்கும் என்ன காரணம்? தான் அறியாமல் தன்னை சுற்றி ஒரு வலை பின்னப்பட்டிருப்பது ஏன்? என்ற குழம்புகிறார். 

சரி. இந்தியாவிற்குச் சென்று அடுத்த வேலையைப் பார்ப்போம் என்று இல்லாமல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், அதன் பினனணியில் இருக்கும் அரசியலுக்கும் விடை தேடுகிறார். உள்ளே செல்லச் செல்ல அந்த ஆபத்தின் ஆழம் தெரிகிறது. 

அதில்  அவர் ஜெயித்தாரா? அதில் என்னென்ன ஆபத்துகள் இருந்தன? ...

விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் கதையை  கொண்டு செல்கிறார் எழுத்தாளர் . 

“சார், இப்ப முன்ன மாதிரி வேலையில்லா திண்டாட்டம் கிடையாது. திறமையில்லா திண்டாட்டம்தான்”

"அறையினுள்ளே முகம் சுழிக்க வைத்த சிகரெட் புகை நேரடியாகப் புற்று நோய் மருத்துவமனைக்கு வழி காட்டுவதாய் இருந்தது" 

"நீங்களெல்லாம் போலீசா? என்று கேட்ட போது, நான் ஆமாம் என்று பொய் சொன்னேன். அப்போதும் புத்தர் ஆழ்ந்த அமைதியில் கண் மூடித்தான் இருந்தார்" - என நம்மை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் நடை நயமாய்க் கூட வரும். 

மலேசியக் காடுகளில் திரியும் செந்நிற வாலில்லா மனிதக் குரங்குகளைப் (ஓராங் ஊத்தான்) போல கோலாலம்பூரின் கான்கிரீட் காடுகளில் திரியும் வன நாயகனின் கதை இது!

வனநாயகன் (ஓராங் ஊத்தான்) - படிக்க வேண்டிய புதினம்!

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:
https://www.amazon.in/dp/B06X9VTR71?_encoding=UTF8&keywords=vananayagan&qid=1487947428&ref_=sr_1_1&s=digital-text&sr=1-1

Tuesday, June 22, 2021

நேர்காணல்கள்

மனநல மருத்துவர் ஷாலினியின் நேர்காணல் ஒன்று யூடியூப் சேனலில் வந்திருந்தது (தமிழகத்தின் பரபரப்பான நாளிதழ் தயாரித்தது ).  அதைத் தொடர்ந்தார் போல 5 நிமிடம் கூட பார்க்கமுடியவில்லை.

காரணம் ?, நேர்காணல் செய்தவர் கேட்ட கேள்விகள் தான். கேள்விகள் எல்லாம் இப்படித்தான் இருந்தன. "அந்த படம் எடுத்த இயக்குநர் சில்ரண் பத்தி இப்படி ஒரு பதிவ போன வாரம் போட்டிருந்தார்.." , "அந்த இந்தி நடிகர் பேர்ல நேத்து இப்படி ஒரு வாட்ஸ்-அப் வந்ததே , அத பத்தி என்ன நினைக்கீறிங்க.. ? " இப்படி  எல்லாம் வெறும் தட்டையான கேள்விகள். 

இன்றைய நெறியாளர்களின் அனுபவம் என்பது இப்படித்தான் இருக்கிறது.  வாசிப்பு  ? அது சுத்தமாக இல்லை. சரி, நேர்காணல் செய்பவருக்கு சுயமான சிந்தனை வேண்டாம்.  கேட்க  நாலு உருப்படியான கேள்விகள் கூடவா இல்லை ?  ஒரு மனநல மருத்துவர்களிடம் விவாதிக்க தெருவில் போகும் நாலு பேரை நிறுத்தி  விசாரித்தாலே ஆயிரம் பிரச்சனைகளைச் சொல்வார்களே. கூடவே, அவருடைய கேள்விகள் அனைத்தும் ஆங்கில மயம். தமிழைத் தேடித்தான் பார்க்கவேண்டி இருந்தது.

புதிதாக நேர்காணல் செய்ய கிளம்புவர்களுக்கு  இங்கே சில அறிவுரைகள். தமிழர்களுக்காக உருவாகும் நிகழ்ச்சிகளில் நெறியாளர்கள் முடிந்தவரைத் தமிழில் பேசவேண்டும் எனும் உயரிய மாண்பை எல்லாம் இப்போது நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் பார்வையாளர்களின் நேரத்துக்கு  மதிப்பளிக்கப் பழகுங்கள். முடிந்தவரை முன்தயாரிப்போடு வாருங்கள் என்று தான் சொல்கிறோம்.  

விருந்தினரின் அனுபவத்துக்குத் தகுந்த கேள்விகளைக் கேளுங்கள். கண்டபடி உளராமல் நேர்காணல் செய்பவரைப் பற்றி கொஞ்சமாக தெரிந்து கொள்ளுங்கள்.  கூர்மையான கேள்விகளைக் கேட்க பழகுங்கள்.  ரபி பெர்னாட், சித்ரா லட்சுமணன், மு.குணசேகரன் போன்ற பல அனுபவமுள்ளவர்களின் நிகழ்ச்சிகளைப் பார்த்தாவது கொஞ்சம் திருந்துங்கள்.